
ஒரு அடர்ந்த காட்டில் அனுபவம் வாய்ந்த குருத்குகன் என்ற வேடன் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் நாள் முழுவதும் அலைந்து வேட்டையில் எதுவும் கிடைக்காமல் மாலைப் பொழுது வந்ததும் குடும்ப நிலை குறித்து வருந்தி, மனைவி, மக்கள் உணவின்றி தவிப்பார்களே என்று கவலை அடைந்தான்.
அந்த நேரத்தில் ஒரு நீர் நிலையைக் கண்டு இங்கு விலங்குகள் ஏதேனும் வரும். அப்பொழுது வேட்டையாடலாம் என்று காத்திருந்தான். அதோடு, ஒரு குடுக்கையில் நீர் நிரப்பி கொண்டு அருகில் இருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். மரத்தின் அடியில் ஒரு பொய்கை இருந்தது. முதல் யாமத்தில் பெண் மான் ஒன்று நீர் பருக வந்தது. வேடனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. உடனே அம்பு தொடுத்தான். குறி தவறியது. வில்வ இலைகளைத் துளைத்துக் கொண்டு குளத்தில் விழுந்தது. வில்வ இலைகளோ மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அவன் கையில் இருந்த குடுக்கையும் தடுமாறி நீர் சிந்தியது. அந்த நீரும் சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. வேடன் மீண்டும் எய்தான்.
அப்போது அந்தப் பெண் மான் அந்த வேடனிடம் பேசியது, ‘எனது வீட்டில் என் தங்கை, என் கணவர், என் குழந்தை இருக்கின்றனர். என் தங்கையை என் கணவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, உனக்கு உணவாக வருகிறேன். இது சத்தியம்’ என்றது. வேடனும் மான் மீது இரக்கம் கொண்டு அதற்கு விடை கொடுத்து அனுப்பினான்.
நீர் பருகச் சென்ற பெண் மான் திரும்ப வராதது கண்டு அதன் சகோதரி அதனைத் தேடிக்கொண்டு அங்கு வந்தது. அதனைக் கண்டதும் வேடன் அந்த மான் மேல் அம்பை எய்தான். அப்பொழுதும் குறி தவறி, முன்பு போலவே வில்வ இலையும் நீரும் சிவலிங்கத்தின் மீது விழ, தங்கை மான் வேடனிடம் நயமாகப் பேசி தப்பிச் சென்றது. இரு மான்களையும் தேடிக்கொண்டு ஆண் மான் அந்த நீர் நிலைக்கு வந்தது. அதனை குறி வைத்தபொழுது மீண்டும் குறி தவறி இப்போதும் வில்வ இலையும் ,நீரும் சிவலிங்கம் மீது விழுந்தன. ஆண் மானும் தான் வீட்டுக்குச் சென்று உடனே திரும்பி வருவதாக கூறிச் சென்றது. பிறகு மூன்று மான்களும் சந்தித்துக் கொண்டன.
குட்டி மானை விட்டு தாங்கள் மூவரும் வேடனுக்கு உணவாவது என்று முடிவு செய்து அவனிடம் வந்தன. இப்பொழுதும் வில்லில் நாண் ஏற்றி அந்த மான்களை வீழ்த்த வேடன் முயன்றபோது தோல்வியே அடைந்தான். இம்முறையும் வில்வ இலைகளும், நீரும் சிவலிங்கத்தின் மீது விழுந்தன. நான்கு ஜாமங்களுக்கு ஏற்ப நான்கு முறை வில்வ இலைகளும் நீரும் சிவலிங்கம் மீது விழுந்துகொண்டே இருந்தது. இது நான்கு காலம் வேடன் பூஜை செய்வதற்கு ஒப்பானது என்று ஆகிவிட்டது. ஏனெனில், அன்று சிவராத்திரியாக இருந்ததால் அவனைப் பிடித்திருந்த அத்தனை பாவங்களும் அவனை விட்டு அறவே விலக, வேடன் ஞானியானான்.
மரத்திலிருந்து கீழே இறங்கி சிவலிங்கத்தை வணங்கி நின்றான். அப்பொழுது மூன்று மான்களும் தங்களை உணவாக எடுத்துக்கொள்ளுமாறு கூறின. அந்த மான்களை தேடிக்கொண்டு குட்டியும் அங்கு வர, வேடன் அந்த மான்களைப் பார்த்து, ‘ஐந்தறிவு படைத்த விலங்குகளாகிய நீங்களே தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வாழும்போது, ஆறறிவு படைத்த நான் மட்டும் அறிவிலியாக வாழ்வதா? நீங்கள் உங்கள் வாழிடம் சென்று வாழுங்கள்’ என்று சொன்னான்.
அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, அனைவருக்கும் அருள்புரிந்தார். அங்கிருந்த மானினம் சிவ தரிசனம் பெற்றதால் மானே மிருகசீரிஷம் என்ற நட்சத்திரமானது.
சிவராத்திரியைப் பற்றி அறியாதவர்களுக்கே பலன் கிடைக்கும் என்றால் அறிந்து வழிபடுவோருக்கு நிச்சயமாக நன்மைகள் கிடைக்கும். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.