பொய் பேசுபவர்களைப் புரட்டிப் போடும் நீதி தேவதை மடப்புரம் பத்ரகாளியம்மன்!

Madapuram Bhadrakali Amman
Madapuram Bhadrakali Amman
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பத்ரகாளியம்மன் ஆலயம். இது மதுரையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் பத்ரகாளி. தல விருட்சம் வேம்பு. தீர்த்தம் பிரம்ம குண்டம், மணிகர்ணி தீர்த்தம். இக்கோயிலில் பத்ரகாளி அம்மன் அக்னியையே கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்ற நிலையில் அருளாட்சி செய்கிறாள். தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயில் அருகில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அய்யனார் காவல் தெய்வமாகவும், வினை தீர்க்கும் விநாயகராக விநாயகப் பெருமானும் அருள்புரிகின்றனர். அம்மனுக்கு எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆடை அணிவித்தலை படையலாகக் கருதி செய்கிறார்கள். செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றை இந்த அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்களுடைய குலதெய்வமாக மக்கள் வழிபடுகிறார்கள். இங்கு பத்ரகாளியம்மன் ஆக்ரோஷமான சக்தி உள்ளவராகக் கருதப்படுகிறார். இங்குள்ள அம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரனைகளில் வெற்றி கிடைப்பதாகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் இந்த அம்மனை வழிபடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
காசி சிவபெருமானை வழிபட்ட பலனைத் தரும் அவிநாசி லிங்கேஸ்வரர்!
Madapuram Bhadrakali Amman

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி பூஜை, பாலாபிஷேகம், தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை, சித்திரை வருடப்பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, தைப்பொங்கல், சிவராத்திரி என திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

காசு வெட்டிப் போடுதல்: கொடுக்கல், வாங்கல்களில் சிக்கல்கள், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி எதுவும் கிடைக்காது ஏமாந்தவர்கள் இங்கு வந்து நீதியின் தேவதையாக காளியைக் கருதி அவள் முன்னால் காசு வெட்டிப் போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. காளியிடம் முறையிட்ட பின்பு கிழக்கு வாசல் வழியாக வெளியேறும் பழக்கமும் உள்ளது.

அம்பாளுக்கு நிழல் தரும்விதமாக பிரம்மாண்டமான குதிரை வாகனம் உள்ளது. பொதுவாக, கோயில்களில் குதிரை மீது அமர்ந்திருக்கும் அய்யனார், இக்கோயிலில் தனியாக சன்னிதியில் காட்சி தருவது சிறப்பு அம்சமாகும். மிகவும் பழைமையான 1000 ஆண்டுகள் முந்தைய கோயில் இது. அய்யனார் இங்கு மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து காட்சி தருகிறார். இவர்தான் இக்கோயிலின் காவல் தெய்வம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என மக்கள் கூறுகின்றனர். அய்யனாருக்கு இருபுறமும் தலையை அரித்து பலியிட்டுக்கொள்ளும் நவகண்ட சிற்பங்கள் உள்ளன. அய்யனாரின் கருவறையில் சப்த கன்னியரும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மகாலட்சுமி தாயார் மிகவும் விரும்பி தங்கும் இடங்கள் எவை தெரியுமா?
Madapuram Bhadrakali Amman

அம்மனின் தோற்றம்: இங்கு பத்ரகாளியம்மன் சம்ஹார தேவதையாகக் காட்சி தருகிறாள். திறந்தவெளியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் பத்ரகாளி அம்மன் வலக்கையில் திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்னி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்குப் பின்புறம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்தவாறு காணப்படுகின்றன. இங்கு நேர்த்திக்கடனாக காளிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

பிரளய காலத்தில் மதுரை மாநகர் வெள்ளத்தால் சூழப்பட்டதும் மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்ட வேண்டும் என்று ஈசனிடம் வேண்ட,  சிவபெருமான் தனது கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்து மதுரையை வளைத்தார் என்று கூறப்படுகிறது. மேற்கே திருவேங்கடமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த ஈசன், கிழக்கில் மடப்புரத்தில் ஆதிசேஷனின் தலையையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். அப்பொழுது ஆதிசேஷன் வாயிலுள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளியதாகவும், அய்யனார் அம்மனுக்கு தனது வாகனமாகிய குதிரையை நிழலாகத் தந்து அடைக்கலம் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இத்தல அய்யனார், 'அடைக்கலம் காத்த அய்யனார்' என்று பெயர் பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com