
மதுரை என்றாலே சித்திரை திருவிழா. சித்திரை திருவிழா என்றாலே மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஊர்வலமும் தான் நினைவிற்கு வரும். அந்தளவு புகழ்பெற்றது சித்திரை திருவிழா. திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும். இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 16 நாட்கள் விழாகோலம் பூண்டிருக்கும். ஒவ்வொரு நாள் நடக்கும் விழாவையும் காண கண்கோடி வேண்டும்.
இதில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஊர்வலமும் ஒரே விழாவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டு மீனாட்சி அம்மனை தரிசிப்பார்கள். இந்த திருவிழா நடக்கும் நாட்களில் ஆடல் பாடல்கள், தோரணங்கள், கடைகள், ராட்டினங்கள் என மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகிற 29-ந் தேதி காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து மே 6-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 7-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 8-ந் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக வருகிற 29-ந் தேதி முதல் மே 2-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் தலா 2 ரூ.500 கட்டணச்சீட்டையும், 3 ரூ.200 கட்டணச்சீட்டையும் பெறலாம். அதேசமயம் ஒரே நபர் ரூ.500, ரூ.200 என இரண்டு கட்டணச்சீட்டுகளையும் பெற முடியாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் ஒரு பதிவுக்கு ஒரு செல்போன் எண் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதுமட்டுமின்றி மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை 29-ந் தேதியில் இருந்து நேரில் சென்றும் பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பதிவு செய்ய ஆதார் நகல், புகைப்படத்துடன் அடையாள சான்று, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏராளமான முன்பதிவுகள் இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து செல்போன் எண், இ-மெயிலுக்கு மே 3-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மே 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டணச்சீட்டை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
திருக்கல்யாணம் அன்று காலை 5 மணியில் இருந்து 7 மணிக்குள் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை கண்குளிர பார்த்து பிறவி பயனை அடையலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.