

மீனாட்சி அம்மன் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலானது (Arulmigu Meenakshi Sundaraswarar Temple, Madurai), கோவில் நகரமாம் மதுரையில் வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான இக்கோவில் உலகளவில் சிறப்பு பெற்று திகழ்கிறது. பாண்டிய நாட்டு தேவாரப் பாடல் பெற்ற இத்தலம், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட இந்த கோவில், தமிழர் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இத்திருக்கோவில் வளாகமானது சராசரியாக 45 முதல் 50 மீட்டர்கள் உயரம் கொண்ட 14 கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் தெற்கு கோபுரமே 51.9 மீட்டர்கள் (170 அடிகள்) உயரத்துடன் மிக உயர்ந்த கோபுரமாகத் திகழ்கிறது. இத்திருக்கோவில் வளாகமானது சிற்பங்கள் நிறைந்த தூண்களைக் கொண்ட மண்டபங்களான ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கொலு மண்டபம் மற்றும் புது மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இத்திருக்கோவிலுக்கு ஐந்து நுழைவு வாயில்கள் உள்ளன.
இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார். இவரது விக்கிரகம், பச்சை மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.
இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூஜை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்யப்படும்.
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பொதுவாக கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம்தேதி ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. இந்த மண்டபம் சீரமைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ஆகம விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிதி ரூ.15.81 கோடி, உபயதாரர் நிதி ரூ.16.47 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீரவசந்தராயர் மண்டபத்தினை பழமை மாறாமல் முற்றிலும் புனரமைத்திடும் வகையில் ரூ.35.30 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் பராபவ ஆண்டு ஆவணி மாதம் 31-ம்தேதி (செப்டம்பர் 17-ம்தேதி) வியாழக்கிழமை அன்று காலை 7.45 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேத்தை நடத்துவது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விழா கால அட்டவணைகள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.