
மஹா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படும் அங்காரக சங்கடஹர சதுர்த்தி நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. வருடத்தில் பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வரும். அதில் பன்னிரண்டாவதாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தையதாக வரும் சங்கடஹர சதுர்த்தியை, ‘மஹா சங்கடஹர சதுர்த்தி’ என கொண்டாடுகிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று நாம் விநாயகரை வணங்குவதால் பதினொரு சங்கடஹர சதுர்த்தியும் நாம் வணங்கிய பலன் கிடைக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்படும் அங்காரக சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து, இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். வளர்பிறை சதுர்த்தியை ‘வர சதுர்த்தி’ என்றும் கிருஷ்ண பட்ச தேய்பிறை சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்றும் கூறுவார்கள். முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ண பட்சம் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி, ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம், செல்வாக்கு கிடைக்கும். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து பன்னிரண்டு மாதங்கள் அனுஷ்டித்து விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.
இந்த விரதத்தைத் தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க இரண்டு மணி நேரம் முன்னரே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவ சின்னங்களை தரித்துக்கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும். மாலை விநாயகருக்கு மோதகம் படைத்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் விக்ரகத்துக்கு இருபுறமும் ஒவ்வொரு யானை விக்ரகம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். பூஜை முடிந்தவுடன் மோதகங்களை பக்தர்களுக்குக் கொடுத்து விரதம் இருப்பவரும் சாப்பிட வேண்டும். இந்த விரதத்தை நினைத்த காரியம் முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டும்.
இரவு சந்திரோதயம் ஆனவுடன் சந்திரனை பார்த்துவிட்டு அர்க்கியம்விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வது நன்மை பயக்கும். இந்த விரதத்தை விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடைபிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
இந்த விரதம் அனுஷ்டிப்பதன் மேன்மையால் நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணத்தடை நீங்கி, திருமணம் கைகூடும். சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். வருமானம் இல்லாமல் தரித்திர நிலையில் இருப்பவர்களின் தரித்திரம் நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யம் அடைந்து சுகமாக இருப்பார்கள். பிணி இருப்பவர்களுக்கு பிணி நீங்கி ஆரோக்கியம் பெறுவர். அன்னை பார்வதி தேவி சங்கஹர சதுர்த்தி விரதம் இருந்து ஈஸ்வரரே கணவராக வர வேண்டும் என்று நினைத்து பூஜை செய்ய, ஈஸ்வரர் அன்னை பார்வதி தேவியை தேடி வந்தார்.
சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கியதாலேயே இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றது. மஹா சங்கடஹர சதுர்த்தியான நாளை செவ்வாய்க்கிழமை உங்கள் வீட்டின் அருகில் உள்ள கணபதியை வணங்குவதோடு, வீட்டிலும் மோதகம் படைத்து ஆராதிப்பதால் எல்லா நன்மைகளும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.