
இந்து மதத்தில் மகாலக்ஷ்மி தேவி செல்வச் செழிப்பின் அதிபதியாகப் போற்றப்படுகிறார். ஆனால், வெறுமனே பொருள் சேர்ப்பதற்காக மட்டும் அவரை வணங்குபவர்களை விட்டு, லக்ஷ்மி தேவி விரைவில் விலகி விடுவார். அதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
லக்ஷ்மி என்பதன் பொருள்: லக்ஷ்மி என்ற சமஸ்கிருத வார்த்தை ‘லக்ஷ்ய’ என்பதிலிருந்து வந்தது. அதாவது, இலக்கு அல்லது நோக்கத்தைக் குறிக்கிறது. லக்ஷ்மி தேவி எட்டு வகையான செல்வத்தைக் கொண்டவர். ஆதி லக்ஷ்மி - எல்லையற்ற தெய்வீக வலிமையைக் குறிக்கிறது. கஜ லட்சுமி - அதிகாரம் மற்றும் மரியாதையைக் குறிக்கிறது. தனலக்ஷ்மி - செல்வச் செழிப்பு, வித்யா லக்ஷ்மி - அறிவு, தைரிய லக்ஷ்மி- தைரியம், சந்தான லக்ஷ்மி – சந்ததி, விஜயலக்ஷ்மி - வெற்றி மற்றும் ஆன்மிக நுண்ணறிவு போன்ற வளங்களையும், ஐஸ்வர்ய லஷ்மி தேவி ஒட்டுமொத்த செழிப்பு மற்றும் நல்வாழ்வையும் குறிக்கிறார்கள்.
மனித வாழ்க்கையின் குறிக்கோள்கள்: இந்து மதத்தின் வேதங்கள் சமநிலையான வாழ்க்கையை வலியுறுத்துகின்றன. மனித வாழ்க்கை நான்கு முக்கியமான குறிக்கோள்களை உள்ளடக்கியது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பவை. தர்மம் என்பது நீதி, ஒழுக்க நடத்தை மற்றும் நெறிமுறையான வாழ்க்கையை குறிக்கிறது. அர்த்தம் என்பது செழிப்பு மற்றும் முறையான வாழ்வாதார வழிமுறைகளைக் குறிக்கிறது. காமம் என்பது ஆசை மற்றும் உணர்ச்சி ரீதியான பூர்த்திகளைக் குறிக்கிறது. மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை. தர்மம் இல்லாமல் அர்த்தம், அதாவது செல்வத்தை மட்டுமே வழிபடுவது முழுமையான பக்தி அல்ல. அது இறுதியில் இழப்புக்கு வழிவகுக்கும்.
பேராசையை விரும்பாத லக்ஷ்மி தேவி: ஒருசிலர் பெரும் பணக்காரர்கள் ஆன பின்பு திடீரென்று எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் ஆவது ஏன்? சில தொழில்கள் பெரும் வெற்றி பெற்று திடீரென்று ஒரே இரவில் சரிகின்றன. ஏனென்றால் அங்கு பேராசை மட்டுமே இருக்கிறது. பணத்தை இன்னும் இன்னும் என்று சேர்த்துக்கொண்டே போகும் பேராசை பிடித்த மனிதர்களிடத்தில் மகாலக்ஷ்மி தங்குவதில்லை. இதற்கு நேர்மாறாக தர்மம், கருணை மற்றும் ஞானத்தை கடைப்பிடிப்பவர்களை மகாலக்ஷ்மி ஆதரிக்கிறாள்.
நவீன சமூகம் லக்ஷ்மியை வெறும் தங்கம் மற்றும் பண சடங்குகளின் தெய்வமாகக் குறைத்து மதிப்பிட்டு அவருடைய ஆன்மிக மற்றும் தத்துவ ஆழத்தை புறக்கணிக்கிறது. செல்வத்தின் மீதான வெறி அவர்களை ஆட்டிப்படைப்பதால் மகாலக்ஷ்மி விலகுகிறார். லக்ஷ்மி தேவி ஒரே இடத்தில் இருக்க விரும்புவதில்லை. தண்ணீரைப் போலவே செல்வமும் எல்லா இடத்திலும் பாய வேண்டும். சேமிப்பு என்பது தேக்கத்தையே உருவாக்குகிறது. தாராள மனப்பான்மை, தொண்டு செய்தல் போன்ற வழிகளில் செல்வம் செலவிடப்பட வேண்டும். அப்போதுதான் மகாலக்ஷ்மி தேவியின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.
மகாலக்ஷ்மியும், மகாவிஷ்ணுவும்: மகாலக்ஷ்மி தேவி மகாவிஷ்ணுவின் தெய்வீக மனைவி. சரியான நோக்கம் மற்றும் தர்மம் இரண்டும் மகாவிஷ்ணுவை குறிக்கின்றன. இவை இரண்டும் இல்லாத முறையில் பெற்ற செல்வம் விரைவில் ஒருவரை விட்டு நீங்கிவிடும். ஒழுக்கக்கேடான வழிமுறைகளில் ஊழல் அல்லது சுரண்டல் மூலம் பெறப்பட்ட செல்வத்தை மகாலக்ஷ்மி தேவி விரும்புவதில்லை. எனவே, முறையான வழிகளில் பணம் சம்பாதித்து அதை பிறரிடம் பகிர்ந்து கொண்டு பணிவாக இருப்பவர்களே மகாலக்ஷ்மி தேவியின் முழுமையான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.