
‘உபய விடங்க ஸ்தலங்கள்’ என்று சொல்லப்படும் மூன்று தலங்கள் திருவொற்றியூர், திருவான்மியூர் மற்றும் திருக்கச்சூர் ஆகியவையாகும். சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள திருக்கச்சூர் தலத்தில்தான் சிவபெருமான் சுந்தரரின் பசி போக்கினார் என்று வரலாறு சொல்கிறது. அது மட்டுமல்லாது, பல சிறப்புகளைக் கொண்ட இத்தலம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இத்தல சிவன் கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈசர், தியாகராசர் என்றும், அம்பாள் அஞ்சனாக்ஷி அம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள். தியாகராஜ சுவாமி கோயில் என்றும் இதனைக் குறிப்பிடுகிறார்கள்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி மந்தார மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். ஒரு கட்டத்தில் பாரம் தாங்காமல் மந்தாரமலை மூழ்கத் தொடங்கியது. இதைத் தடுக்க எண்ணிய திருமால், ஆமை வடிவெடுத்து (கச்சபம் - ஆமை, கூர்ம அவதாரம்) அம்மலையைத் தாங்கினார். இவ்வாறு, ஆமை உருவில் மலையைத் தாங்கும் ஆற்றலைப் பெறுவதற்காக, இத்தலத்தில் உள்ள சிவபெருமானை திருமால் வழிபட்டதாக வரலாறு சொல்கிறது. எனவேதான், இறைவனுக்கு கச்சபேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்த ஊரும் கச்சபவூர் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி கச்சூர், திருக்கச்சூர் என்றானது.
ஆலகால விஷத்தை உண்ட சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் இத்தலத்திற்கு, ‘ஆலக்கோயில்’ என்றும் பெயர் உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த தலத்தில் சிவபெருமான் நிகழ்த்திய அற்புதம்தான் சுந்தரருக்கு அமுது படைத்த நிகழ்வு.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரரை சில காலம் வழிபட்டு, பிறகு திருக்கச்சூர் வந்தடைந்தார். ஆலக்கோயில் இறைவனை மனமுருக வணங்கி, கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் ஓய்வெடுத்தார். வெயிலும், பசியும், பிரயாணக் களைப்பும் சுந்தரரை வாட்டின. உணவு கொண்டுவரும் அடியார்கள் யாரேனும் வருகிறார்களா என எதிர்பார்த்துக் காத்திருந்தார். யாரும் வரவில்லை.
பக்தரின் பசியைப் போக்க அந்தணர் வடிவில், மேனி முழுவதும் திருநீறு பூசி, கையில் திருவோடு ஏந்தி வந்தார் ஈசன். துவண்டிருந்த சுந்தரரைப் பார்த்தார். “வெளியூரிலிருந்து வருகிறீரா? பசியால் துவண்டிருக்கிறீரே. நான் போய் உணவு யாசித்து வருகிறேன். அப்பால் போய்விடாமல் அமர்ந்திரும்” என்று சுந்தரரிடம் சொல்லிச் சென்ற ஈசன், வீடு தோறும் யாசகம் பெற்று, கிடைத்த அமுது, காய் கனிகளைக் கொண்டு வந்து சுந்தரருக்குப் பரிமாறினார். இதனால் பசியாறிய சுந்தரர் மகிழ்கிறார்.
“முன்பின் தெரியாத எனக்காக யாசகம் பெற்று விருந்திட்ட வள்ளலே! என் ஈசனுக்குத்தான் இத்தகைய பெருங்கருணை உண்டென்று எண்ணியிருந்தேன். ஆனால், உங்களைப் போன்றவர்களையும் அவர் படைத்து மகிழ்ந்திருக்கிறார், நன்றி!” என்று பாராட்டினார்.
சுந்தரர் கை கழுவிவிட்டு வந்து பார்த்தால் அந்த அந்தணரைக் காணவில்லை. “அடியேன் வயிறு வாடுதல் காரணமாக பிட்சாடனராக வந்தவரே! விருந்திட்ட வரதரே!” என நெகிழ்ந்தார்.
‘முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.’
என்ற ஏழாம் திருமுறை பதிகத்தைப் பாடி மகிழ்கிறார்.
சுந்தரருக்கு இறைவன் அமுதிட்ட பதினாறு கால் மண்டபம் இப்போதும் இங்கே இருக்கிறது. மண்டபத் தூண்களில் பல அரிய சிற்பங்களைக் காணலாம். அதில் ஒன்று ஆமை வடிவில் திருமால் சிவனை வணங்கும் காட்சி வெகு அழகாக உள்ளது.
இக்கோயிலைத் தரிசித்துவிட்டு, இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஔஷத மலையில் உள்ள ஈசனையும் தரிசிக்க வேண்டும். இங்குள்ள சிறு குன்றில் மருந்தீஸ்வரர் அருள்புரிகிறார். இந்தக் கோயிலுக்கும் ஒரு வரலாறு உள்ளது.
ஒரு சமயம் சாபத்தினால் ஏற்பட்ட நோயால் இந்திரன் அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்களான அஸ்வினி தேவர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்தும் அதை குணப்படுத்த முடியவில்லை. அதனால் தேவ ரிஷி நாரதரின் அறிவுரைப்படி அஸ்வினி தேவர்கள் ஔஷத கிரி வந்து பலா, அதிபலா என்ற மூலிகைகளைத் தேடி அலைந்தனர். ஆனால், அத்தனை சுலபத்தில் அவர்களால் அந்த மூலிகைகளைக் கண்டறிய முடியவில்லை.
இதனையறிந்த நாரதர், “இங்கே எழுந்தருளி இருக்கும் மருந்தீஸ்வரர், இருள் நீக்கித் தாயாரை வழிபடாமல் தேடினால் மூலிகை உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்?” என்று புரிய வைக்கிறார். தனது தவறை உணர்ந்த அஸ்வினி தேவர்கள் ஈசனையும் அன்னையையும் வழிபட்டு மூலிகைகளைக் கண்டறிந்து எடுத்துச் சென்றதாக இக்கோயில் தல வரலாறு சொல்கிறது. இந்தக் கோயில் கொடிமரத்திற்கு அருகே ஒரு குழி உள்ளது. இங்கிருந்து மண் எடுத்து திருநீறு போல் பக்தர்கள் இட்டுக் கொள்கிறார்கள். இந்த மண் மருத்துவத் தன்மை உடையது என்ற நம்பிக்கை உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள கிணற்று படிக்கட்டுகளில் இறங்கிச் செல்வது போன்ற அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அந்த வழி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகள் பெருமை வாய்ந்த இந்த இரு கோயில்களையும் ஒருசேர தரிசித்து இறைவனின் அருளைப் பெறலாம்.