
ஒவ்வொரு அமாவாசை மற்றும் முன்னோர் திதி நாட்களில் தர்ப்பணம் செய்வோர் அநேகம். அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தே கூட இதைக் கொடுக்கலாம். விசேஷமான ஆடி, தை, மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு விசேஷமான தலங்களில் திதி கொடுக்க, நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும். முன்னோரது ஆசியும் கிடைக்கும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க மிகவும் உகந்த திருத்தலங்கள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* கும்பகோணம், நன்னிலம் பூந்தோட்டத்திற்கு அருகில் திலதைப்பதி எனும் திலதர்ப்பணபுரியில் மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய முன்னோர்களின் ஆசி கிட்டும். ஸ்ரீராமபிரான் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இதுவாகும்.
* ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில் மஹாளய அமாவாசையன்று புனித நீராடி, நீத்தார் கடனை நிறைவேற்றிட, மகத்தான புண்ணியப் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* அளகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் முருகன் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். அங்கு நவகிரக சன்னிதியில் சூரியனும், சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். மஹாளய பட்சத்தன்று அங்கு நீத்தார் கடனை நிறைவேற்றிட, மேலான பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.
* ‘விருத்த காசி’ எனப்படும் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்துக்கு அருகே ஓடும் மணிமுத்தாறு நதி தீர்த்தத்தில் நீத்தார் கடன் செய்ய,முன்னோர்கள் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
* திருச்சிக்கு அருகே பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளய தர்ப்பணம் செய்தால், திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
* கடலூர், அருள்மிகு பாடலீஸ்வரர் ஆலயத்தில் மஹாளய அமாவாசையன்று அங்கு அருளும் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பிறகு அந்தக் குளக்கரையில் முன்னோர் கடன் தீர்த்து, பலன் பெறுவர்.
* காசியின் அருகே உள்ள விஷ்ணு கயாவில் உள்ள ஆலமரத்தடியில் விஷ்ணு பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த விஷ்ணு பாதத்தில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் விசேஷமான புண்ணியங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
* திருவையாறு படித்துறையில் மஹாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து, தர்ப்பணம் கொடுக்க, தீ வினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
* பவானி, சங்கமேஸ்வரர் ஆலயத்தின் அருகே கூடுதுறையில் மஹாளய அமாவாசையன்று ஏராளமான பக்தர்கள், முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர்.
* திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் அபரிதமான பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
* ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மஹாளயஅமாவாசையன்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
இதுபோன்ற எண்ணற்ற புனித நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றில் நம் முன்னோருக்கான திதியை, தர்ப்பணத்தைக் கொடுக்க, முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.