
நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே! அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில் ஒரு சூட்சுமான செயல்பாடுதான் தர்பை புல் பயன்பாடு. தர்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது. உலகம் தோன்றியபோதே தோன்றிய தொன்மையான புல் என தர்பை புல்லை முன்னோர் போற்றுவர். தர்பை புல்லின் உச்சியில் சிவபெருமானும், மத்தியில் பிரம்மனும், அடியில் மகாவிஷ்ணுவும்இருப்பதாக ஐதீகம்.
தர்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதே இதன் சிறப்பாகும். தர்பை புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது. இந்து சமய சடங்குகளில், பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கிய இடம் தர்பை புல்லுக்கு உண்டு. தர்பை புல்லில் ஏழு வகை உண்டு. குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விசுவாமித்திரம், தர்பை என்பவை அவை. தோற்றத்தைப் பொறுத்து இவை ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும். நுனிப்பகுதி பருத்துக் காணப்படுவது பெண் தர்ப்பை எனவும், அடிப்பகுதி பருத்து இருந்தால் அது அலி தர்ப்பை எனவும், அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் ஆண் தர்ப்பை எனவும் கூறப்படுகிறது.
தர்பை புல்லின் மகிமைகளை யஜூர், அதர்வண வேதங்களிலும், சம்ருதி சிந்தாமணி, சம்ருதி பாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும், நிகண்டு ரத்தினாகரம், ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேத நூல்களிலும் காணலாம். தர்பை புல்லினால் செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பை ‘பவித்ரம்’ என்று கூறுவர்.
‘பவித்ரம்’ என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம். பவித்ரத்தை எல்லாவிதமான கிரியைகளுக்கும் கை விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் புராண காலத்தில் இருந்தே உள்ளது. நமது வலது கை மோதிர விரல் மூளையுடன் தொடர்புடையது. இந்த விரலில் பவித்ரம் அணிந்து ஹோமம், ஜப வேள்வி சடங்குகளில் ஈடுபட, அது அண்டவெளியில் உள்ள ஆற்றலை மூளைக்குக் கொண்டு சேர்க்கும்.
பவித்ரம் அணியாமல் மேற்கொள்ளும் எந்த ஆன்மிக சடங்குகளுக்கும், எந்த பலன்களும் இல்லை. தர்ப்பை அணிந்து இருப்பவரிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம சாஸ்திரம். உபாசனையில் ஜபம் மற்றும் வேள்விக்கு இடையூறு செய்யும் கண்ணுக்குப் புலப்படாத, அரக்கர்கள், பூதங்கள், பிசாசுகள், பிரம்மராட்சசர் முதலியோர் நம் கையில் உள்ள தர்பையை பார்த்ததும் விலகி ஓடுவர். மின்சாரம் பாயாத பொருட்களில் தர்பையும் ஒன்று. ஆனால், மின்சாரத்தை விட பல மடங்கு செயல் திறன் கொண்டது இது.
தர்பை புல்லுக்கு மந்திர சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை மிகவும் அதிகம். ஆகவே, அது தீய எண்ணங்களையும், கர்ம வினைகளையும் நம்மிடம் ஒட்டாமல் இருக்கச் செய்யும். தர்பை புல்லில் ஆன ஆசனம் மிகவும் விசேஷம். தர்பாசனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜபங்களுக்கு பல மடங்கு சக்தி உண்டு.
கலச ஸ்தாபனத்தின்போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பார்கள். அந்த தர்பையின் வழியாகத்தான் பிராண சக்தி கும்பத்துக்குள் வரும். சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும், பித்ருக்களும் நம் கண்களுக்குத் தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த தர்பையில் அமர்கின்றனர். தர்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும், பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்பையிலும் உண்டு.
கோயில் கும்பாபிஷேகங்களில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய பின், அந்த நீரை கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இதுதான். உபாசனையின்போது கையில் ஒரு பிடி தர்பையும், ஆசனமாக நான்கு பிடி தர்பையையும் வைத்து மந்திரம் சொல்ல, எல்லா தேவதைகளையும் தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம். நன்கு உரு ஏற்றிய தர்பையை எரித்து சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல குழைத்து புருவங்களில் தடவ எல்லா விதமான தோஷங்களும் விலகி ஓடும்.
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டுசெய்யப்படும் பவித்திரம் தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் பவித்திரம் அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார் சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட பவித்திரம் கோயில் நடை முறைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றது.
தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் தர்ப்பை புல்லை உபயோகப்படுத்துவர். கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான், கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் உணவு கெடாமல் இருக்க தூய்மையான தர்பையை பரப்புகிறார்கள். தர்ப்பை புல்லில் ஊறிய நீர், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும். தர்பை புல் இட்ட நீரை வீடுகளில் தெளித்து வர, அங்கு எந்த தொற்று வியாதியும் அணுகாது.
வீடுகளில் உயரமான இடங்களில், வாசல்களில் கொத்தாக தர்பை புல்லை கட்டி வைக்க, எந்தவித தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்கும். வியாதி உள்ளவர்கள் தங்கும் இடங்களில் தர்பை புல்லை வைக்க வியாதிகள் பரவாது நலம் பெறுவர்.