
மகாளய பட்சம் முன்னோர்களை வழிபடுவதற்குரிய முக்கிய காலகட்டமாகும். பட்சம் என்றால் 15 நாட்களைக் குறிப்பதாகும். பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு இந்த காலகட்டத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்தக் காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது அவர்களே நேரில் வந்து அதை ஏற்று நம்மை ஆசீர்வதிப்பதாக ஐதீகம். மகாளய பட்சம் என்பது அமாவாசைக்கு முந்தைய 15 தினங்கள் ஆகும். இக்காலத்தில் இறந்த போன அனைத்து உயிர்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம்.
இந்த வருடம் இன்று திங்கட்கிழமை மகாளய பட்சம் துவங்குவது மிகவும் விசேஷமாகும். திங்கள் சந்திரனுக்குரிய நாள். இந்த தினத்தில் செய்யும் தர்ப்பணத்தால் பித்ரு சாபம் நீங்கும். இக்காலத்தில் யமதர்மராஜன் பித்ருக்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். எனவே, அவர்கள் நம்மை நாடி வருகிறார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் ஹோமம் செய்து ஏழைகளுக்கு அன்னமிடலாம். தானமாக வெள்ளி நாணயம் தட்சணை தருவது மிகச் சிறப்பு. தினமும் செய்ய முடியவில்லை என்றாலும் மகாபரணி, வியதீபாதம் மற்றும் மத்யாஷ்டமி காலங்களில் தர்ப்பணம் செய்வது சிறந்தது. மகாளய பட்சத்தில் வரும் பரணி மகாபரணி என்றும், அஷ்டமி மத்யாஷ்டமி என்றும் கூறப்படும். இந்தக் காலங்களில் செய்யும் ஸ்ராத்தம் கயா ஸ்ராத்தத்திற்கு சமமாகும்.
காருண்ய பித்ருக்கள் என்றால் தந்தை, பெரிய தந்தை, தாயார், பெரிய தாயார், குரு, எஜமான் என அனைவரும் என மகாபாரதம் குறிப்பிடுகிறது. இனி, மகாளய பட்சம் ஒவ்வொரு திதியிலும் செய்யப்படும் தர்ப்பணத்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து காண்போம்.
முதல் நாள்: பிரதமை திதியில் தர்ப்பணம் செய்ய பணக் கஷ்டம் தீரும்.
இரண்டாம் நாள்: திரிதியை திதி தர்ப்பணம் செய்ய ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.
மூன்றாம் நாள்: திரிதியை தர்ப்பணம் நினைத்த காரியத்தை நிறைவேற்றும்.
நான்காம் நாள்: சதுர்த்தி தர்ப்பணத்தால் எதிரிகள் தொல்லை தீரும்.
ஐந்தாம் நாள்: பஞ்சமி திதி தர்ப்பணத்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
ஆறாம் நாள்: சஷ்டி தர்ப்பணத்தால் பேரும் புகழும் கிடைக்கும்.
ஏழாவது நாள்: சப்தமி தர்ப்பணத்தால் பெரிய பதவி கிடைக்கும்.
எட்டாம் நாள்: அஷ்டமி தர்ப்பணத்தால் அறிவாற்றல் பெருகும்.
ஒன்பதாம் நாள்: நவமி தர்ப்பணம் திருமணத்தடையை நீக்கும்.
பத்தாம் நாள்: தசமி திதி தர்ப்பணம் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும்.
பதினொராம் நாள்: ஏகாதசி தர்ப்பணம் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி தரும்.
பன்னிரண்டாம் நாள்: துவாதசி தர்ப்பணம் தங்க நகை மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை பெற்றுத் தரும்.
பதிமூன்றாம் நாள்: திரயோதசி தர்ப்பணத்தால் பசுக்கள், விவசாயம் சிறப்பாக இருக்கும்.
பதினான்காம் நாள்: சதுர்த்தசி தர்ப்பணம் ஆயுளை விருத்தியாக்கும்.
பதினைந்தாம் நாள்: அமாவாசை ஆகும். இந்த 15 நாட்களும் தர்ப்பணம் செய்ய பலன் நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைக்கும் கிடைக்கும்.