
சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட ‘நரி விருத்தம்’ வாழ்க்கை நிலையாமை கோட்பாட்டை விளக்கும் சமணம் சார்ந்த அருமையான தமிழ் நூலாகும். திருஞானசம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைப் பற்றி குறிப்பிடுகிறார். எலி விருத்தம், கிளி விருத்தம் மற்றும் நரி விருத்தம். இவற்றில் நரி விருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது. திருத்தக்க தேவர் சமண சமயம் சார்ந்தவர். சோழர் குலத்தில் பிறந்த இவர், தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற தமிழ் நூல்களை கற்றறிந்தவர். சமண சமய நூல்களை முழுமையாகக் கற்றவர்.
இவர் மதுரையில் தனது ஆசிரியருடன் வாழ்ந்து வரும் சமயம் சங்கப் புலவர்களுடன் ஏற்பட்ட வாதத்தில் புலவர் ஒருவர், ‘சமணர்களுக்கு துறவைப் பற்றி மட்டும்தான் பாடத் தெரியும். இவர்கள் காமச் சுவைபட இலக்கியம் படைக்கத் தெரியாதவர்கள்’ என்று இழித்துப் பேசினார். அதற்கு திருத்தக்க தேவர், ‘சமணர்கள் காமத்தை வெறுத்தார்களே தவிர, பாடத் தெரியாதவர்கள் அல்ல’ என்று கூற, ‘அப்படியென்றால் காமச் சுவைபட ஒரு நூலை இயற்றுங்கள் பார்ப்போம்’ என்றார் புலவர்.
இதனை திருத்தக்க தேவர் தனது ஆசிரியரிடம் கூற, அவர் தன்னுடைய மாணவரின் புலமைத் திறத்தை அனைவருக்கும் உணர்த்த எண்ணி, எதிரே ஓடிய நரியொன்றைக் காட்டி, ‘இதைப் பற்றி பாடு’ என்றார். அவ்வாறு பாடியதுதான் 'நரி விருத்தம்' எனப்படும் அற்புதமான நூல்.
ஐம்பது பாடல்களைக் கொண்ட நரி விருத்தத்தில் நரியைப் பற்றிய கதை ஒன்றும், பின்னர் அதன் சார்பாக வேறு 18 கதைகளும் உள்ளன. இது 6 அல்லது 7ம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவரால் எழுதப்பட்டது. ஞானத்தை போதிக்கும் சிறந்த நூலான இது, நிலையற்ற இந்த வாழ்வை நம்பி, பேராசைக் கொண்டு அலைய வேண்டாம் என்றும், நிலையான தர்மங்களைச் செய்து முக்தி அடைவதற்குரிய சிறந்த வழியைத் தேடுவதே சிறந்ததாகும் என்பதை வலியுறுத்துகிறது.
வேடன் ஒருவன் தனது வயலில் தினையை மேய வந்த யானையைக் கொல்வதற்கு பாம்பு புற்றின் மேல் நின்று கொண்டு வில் எடுத்து அம்பு எய்ய, யானை இறந்து போயிற்று. பாம்பு புற்றின் மேல் நின்று கொண்டிருந்ததால் பாம்பு அவனைத் தீண்டியது. அவன் கீழே விழுந்தவுடன், தன்னுடைய வாளால் பாம்பினை வெட்டி அவனும் இறந்து போனான். பாம்பும் இறந்து போயிற்று.
அந்தப் பக்கமாக வந்த நரி ஒன்று இறந்த மூன்று உடல்களையும் கண்டு மகிழ்ந்து, யானை தனக்கு ஆறு மாதங்கள் உணவாகவும், வேடன் ஏழு நாட்கள் தனக்கு உணவாகவும் ஆவான் என்றும், இறந்து கிடக்கும் பாம்பு தனக்கு ஒரு நாள் இரையாகும் எனக் கணக்கிட்டு கொண்டே பேராசையின் காரணமாக விஷம் ஏறிய வேடன் கையில் இருந்த கணையிலிருக்கும் ரத்தத்திற்கு ஆசைப்பட்டு அதைக் கவ்வ, கணை தெறித்து நரிக்கு அடிபட்டு அதுவும் இறந்து போயிற்று.
மற்றொரு நரியின் கதையில் இதை தேடிச் சென்ற நரி ஓரு படைக்களத்திற்குச் சென்று தான் இறந்தது போல் கிடந்தால், பிறகு அங்கு வரும் இறந்த உடல்களை உண்ணலாம் என்றெண்ணி கண் மூடிக் கிடந்தது. அங்கு வந்த ஒரு வீரன் இறந்த நரியின் தோலை கேடயத்திற்கும், வாலும், செவியும் வேறு விதமாகப் பயன்படுமே என்று அந்த நரியினை அறுத்தெடுக்க, அது இறந்து போயிற்று. பேராசை காரணமாக இரை தேடி வந்து இறந்தது போல் கிடந்த நரி உண்மையிலேயே இறந்து போயிற்று.
சமண சமயத்தின் நிலையாமை கோட்பாட்டை விளக்கும் 'நரி விருத்தம்' உலகப் பற்றுகளைத் துறந்து, வீடு பேறு அடைவதைப் பற்றி சுவைபட பேசுகிறது.