
வருடத்திற்கு ஒரு பட்சம், அதாவது 15 நாட்கள் புரட்டாசி மாதத்தில் வருவதுதான் மகாளயபட்சம் என்று சொல்லப்படுகிறது. இது புரட்டாசி மாத பௌர்ணமிக்கு அடுத்த பிரதமை திதி தொடங்கி, (சில வருடங்களில் ஆவணி மாதம் பௌர்ணமி அடுத்த பிரதமை திதியிலும் தொடங்கும்) சதுர்த்தசி திதி அன்று முடிவடைகிறது. இந்த வருடம் மகாளய பட்சம் செப்டம்பர் 08 பிரதமை திதி முதல் செப்டம்பர் 20 சதுர்த்தசி திதி வரை உள்ளது.
இந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் நம்மைக் காண பூலோகம் வருவதாக ஐதீகம். இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும், அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருட புராணம் கூறுகிறது. இத்தினங்களில் நாம் முறைப்படி தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் இறைத்தால் அவர்கள் தாகமும் பசியும் தீர்ந்து திருப்தியோடு திரும்பவும் தங்கள் லோகத்திற்குச் செல்வார்களாம். அப்படிப் போகும்போது தங்கள் வாரிசுகளை வாழ்த்தி வரங்கள் கொடுத்து விட்டுச் செல்வதாக ஐதீகம்.
இந்த மகாளயபட்ச காலத்தில் செய்யப்படும் அனைத்து தான தர்மங்களுக்கும் பித்ருக்களின் ஆசியும் சேர்ந்தே கிடைக்குமாம். இந்த 15 நாட்களிலும் நம் முன்னோர்களை வழிபட்ட பின்பே நம் நித்திய பூஜை புனஸ்காரங்களைச் செய்ய வேண்டும். இந்த முன்னோர் வழிபாட்டை பதினைந்து நாட்களும் செய்ய முடியா விட்டாலும், தங்கள் தந்தையின் திதி தினத்தன்றாவது மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சுப காரியத் தடை, வாரிசு இல்லாதது, தீராத நோய், திடீர் விபத்துகள், துர்மரணங்கள் இவை எல்லாவற்றிற்கும் பித்ரு தோஷமும் ஒரு முக்கியக் காரணமாகும். இந்த மகாளய புண்ய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும்.
‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தலும், தெய்வத்தைப் போற்றுதலும், விருந்தோம்புதலும், சுற்றம் பேணுதலும் ஆகிய இல்வாழ்க்கை மேற்கொண்டவனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற ஒருவன் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
மகாளய பட்சத்தின் முடிவில் வரும் மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கும் தனிச் சிறப்பு உண்டு. மகாளய அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிமிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இவர்கள் வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடும். இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்த நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, வேதாரண்யம், காவிரிக்கரை முதலிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நம் வம்சம் தழைத்தோங்கும். நம் முன்வினை துயர்கள் நீங்கி, பித்ருக்களின் அபரிமிதமான ஆசியால் நம் வாழ்வில் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும். பித்ருக்கள் என்றாலே வரங்களும் வாழ்த்துக்களும்தானே?