
விசுவாவசு தமிழ் வருட ஆவணி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் அமாவாசை வரையிலுள்ள காலம் மஹாளய பட்சம் ஆகும். இந்த வருடம் செப்டம்பர் 8ம் தேதி முதல் 21ம் தேதி வரை. இந்த பதினான்கு நாட்களில், மறைந்த நமது முன்னோர்கள், நம்மைத் தேடி வந்து நம்முடன் தங்குவதாக நம்பிக்கை. ஆகவே, இந்த நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து, எள்ளும் தண்ணீரும் அளித்து தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
இந்த நாட்களில், ஒவ்வொரு திதியிலும் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம், பல்வேறு நலன்களைத் தருகின்றன. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1ம் நாள் பிரதமை – செல்வம் சேரும்.
2ம் நாள் துவிதியை – குழந்தைச் செல்வம்.
3ம் நாள் திரிதியை – நினைத்தவை நிறைவேறும்.
4ம் நாள் சதுர்த்தி – பகை விலகும்.
5ம் நாள் பஞ்சமி – அசையா சொத்துக்களை அடையலாம்.
6ம் நாள் சஷ்டி – புகழ் தேடி வரும்.
7ம் நாள் சப்தமி – பெரும் பதவிகளை அடையலாம்.
8ம் நாள் அஷ்டமி – அறிவு முதிர்ச்சி அடையலாம்.
9ம் நாள் நவமி – நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
10ம் நாள் தசமி – நிறைவேறாமலிருந்த ஆசைகள் நிறைவேறும்.
11ம் நாள் ஏகாதசி – கல்வி, விளையாட்டு, கலைகளில் முன்னேற்றம் பெறலாம்.
12ம் நாள் துவாதசி – நகைகள் சேரும்.
13ம் நாள் திரயோதசி – தொழில் முன்னேற்றம், நீண்ட ஆயுள் உண்டாகும்.
14ம் நாள் சதுர்தசி – பாவத்திற்கு பிராயச்சித்தம் பெறலாம்.
15ம் நாள் மஹாளய அமாவாசை – பித்ருக்களின் ஆசீர்வாதத்துடன் அனைத்து நன்மைகளும் அடையலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கும்.
எல்லா மாதமும், அமாவாசையன்று மூன்று தலைமுறை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு செய்ய முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசை என இந்த மூன்று தினங்களாவது தர்ப்பணம் செய்வது தலைமுறைக்கு நல்லது.
மாத அமாவாசை அன்று மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளய அமாவாசையன்று, தாய் வழி, தந்தை வழி முன்னோர்களுடன், மறைந்த உறவினர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, நண்பர்களுக்கு என்று அனைவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் கொடுக்கலாம். மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தத்திற்கு, கயாவில் செய்யும் சிராத்தத்திற்கு ஈடான பலன் உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள வைணவ திருத்தலங்களில் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலின் விசேஷம், பித்ரு சாபம் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்குப் பரிகாரத்திற்காக வருகிறார்கள். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு பெற்றோர் இல்லை. பரம பக்தர் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை. அந்த பக்தரின் இறுதிச் சடங்குகளை பரந்தாமன் செய்தார். ஒவ்வொரு வருடமும், ஒரு மகன் தந்தைக்கு சிராத்தம் செய்வது போல, பக்தனுக்கு சிராத்தம் செய்கிறார் பகவான்.
ஹொய்சால வம்சத்தைச் சேர்ந்த வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். சிறந்த சிவ பக்தரான வல்லாள மகாராஜா, மதுரை சுல்தானுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். மகாராஜாவின் இறுதிக்கடனை இறைவனே திருவண்ணாமலையின் அருகில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். இன்றும் பள்ளிகொண்டாப்பட்டு ஊரில், கௌதம நதிக்கரையில், மாசி பௌர்ணமியன்று சிவபெருமான் மகனாக தனது தந்தை வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் விழா கொண்டாடப்படுகிறது. இவை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மஹாளய பட்ச காலத்தில் தானம் செய்வது நம்முடைய முன்னோர்களை திருப்தி செய்யும். எள் இந்துக்களின் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கருப்பு எள்ளை தானம் செய்வது, நமக்கு இருக்கின்ற தடைகளை விளக்கும். உப்பை தானம் செய்தால், நமக்கெதிரான சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவதுடன், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வேட்டி, துண்டு போன்ற ஆடைகள் தானம் செய்வது ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்களுக்குப் பரிகாரமாவதுடன், ஆயுள் ஆரோக்கியத்திற்கு வழி செய்யும். பசு நெய் தானம் குடும்பத்தில் நிலவி இருந்த குழப்பங்களைப் போக்கும்.
தானத்தில் சிறந்தது ‘கோ தானம்’ என்பார்கள். பசுவை தானமாகக் கொடுப்பது இப்பிறவிக்கு மட்டுமல்லாது பல பிறவிகளுக்கும் பலன் தரும். குரு பகவான் தோஷம் நீங்க, தங்கம் தானம் செய்யலாம். அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு நோயற்ற வாழ்வடைய வெள்ளிப் பொருட்கள் தானம் வகை செய்யும். அன்ன தானம் பாவத்தைத் தீர்ப்பதுடன், கடவுளின் ஆசீர்வாதத்திற்கு வழி செய்யும்.
முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறை நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற நம்பிக்கை இந்து சமயத்தின் நம்பிக்கை மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும், பல சமயங்களிலும், கலாசாரங்களிலும் நம்மைப் பிரிந்து சென்ற முன்னோர்கள் வருடத்திற்கு ஒருமுறை நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.