அழகர்மலை உச்சியில் அரோகரா முழக்கம்: ஜூலை 5-ல் சோலைமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்!

முருகப்பெருமானின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் வருகிற 5-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம்
solaimalai murugan templeAI Image
Updated on

அழகர்மலை உச்சியில் அமைந்துள்ள முருகப் பெருமானின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் வரும் ஜூலை 5-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பிரசித்தி பெற்ற சோலைமலை முருகன் கோவில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அடர்ந்த சோலைகளுக்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பழமுதிர்சோலை முருகன் கோவில் என்ற பெயரும் இதற்கு உண்டு.

மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.

இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் முருகன், வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

அருட்கடலாகிய முருகப்பெருமானது ஏனைய படை வீடுகளுக்கு இல்லாது இப்படை வீட்டுக்கு மட்டுமே உரிய தனிப்பெருஞ்சிறப்பொன்றுண்டு. அதாவது முருகப்பெருமானின் இத்தலமானது சைவப்பெருமைகளையும் மற்றும் திருமாலின் வைணவப் பெருமைகளையும் ஒருசேர கொண்டு விளங்குகிறது.

மூலவர் முருகப்பெருமானின் அருகில் பெருமாள் (அழகர்) சந்நிதியும் அமைந்துள்ளது. மற்ற படைவீடுகளைப் போலன்றி, அழகே வடிவான அபிஷேக பிரியரான முருகப்பெருமானும் அலங்கார பிரியரான திருமாலும் இணைந்து அருள்பாலிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பழமுதிர்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் "சுட்ட பழம் வேண்டுமா?, சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு, மெய்யறிவு புகட்டியருளிய திருத்தலம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்:
மூன்று கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்: எங்குமில்லா அதிசயம்!
கும்பாபிஷேகம்

இக் கோவிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலுக்கு அறநிலையத்துறை குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தது. இதையொட்டி கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. அதன் பிறகு திருப்பணிகள் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டது.

யாகசாலை பூஜை|கும்பாபிஷேகம்
solaimalai murugan temple | கும்பாபிஷேகம்AI Image

இந்நிலையில் கோவில் திருப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் வரும் 5-ம்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறுதையொட்டி ஜூலை 1-ம்தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்களுடன் தொடங்கியது. ஜூலை 4-ம்தேதி (நாளை) வரை 5 கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து வரும் 5-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையுடன் நடைபெறும். பின்னர் காலை 5.15 மணிக்கு மஹா பூர்ணாகுதி நிறைவு பெற்றதும் புனித தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகும். பின்னர் 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சோலைமலை முருகன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

மதுரையின் பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் இருந்து அழகர் கோவிலுக்கு (தடம் எண்: 4, 44, 12, S10) அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மலைப்பாதை பயணம்: அழகர் கோவிலை அடைந்ததும், அங்கிருந்து மலை உச்சிக்குச் செல்ல (சுமார் 2.5 கி.மீ) அரசுப் பேருந்துகள், சிற்றுந்துகள் (வேன்) மற்றும் வாடகை வாகனங்கள் உள்ளன. சொந்த வாகனங்களிலும் செல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com