
பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள வடவள்ளி பகுதியில் ஒரு அடர்ந்த வனம் இருந்தது. அதில் பல வருடங்கள் பழைமையான ஒரு அரச மரமும் வேப்ப மரமும் இருந்தது. வேறு ஒரு கிராமத்தில் ஒரு விநாயகர் சிலையைப் பார்த்த அந்த வனத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி சிறுவன் தங்கள் வனத்திலும் அப்படி ஒரு சிலையை அமைக்க ஆசைப்பட்டு வனத்திலுள்ள கருங்கற்களைக் கொண்டு வடிவமைத்த சிலையே இந்த காட்டு விநாயகர் கோயிலிலுள்ள விநாயகர் சிலையாகும். இது வனப்பகுதியாக இருந்ததால் இங்கே நிலவிய அளவற்ற அமைதி மக்கள் தியானம் செய்யத் தூண்டுகோலாக இருந்தது.
விநாயகர் சிலை அமைந்து விட்டது. ஆனால், அதைப் பராமரிக்க வேண்டுமே? இப்பகுதி வாழ் பெரியோர்கள் இணைந்து, கோயில் பெயரில் ஒரு அறக்கட்டளை துவங்கி, ஸ்ரீ காட்டு விநாயகருக்கு ஒரு கோயில் அமைத்தனர். கோயில் வளாகத்திலேயே முருகன், மீனாட்சியம்மன், நாகதேவதைகள் என வரிசையாக சன்னிதிகளை அமைத்தனர். இந்தப் பகுதி மக்கள் தங்கள் மன அமைதிக்கான ஒரே தியான பீடமாக இதைப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.
இந்தக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் உருவம் பழனி முருகனைப் போலவே இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்கேயுள்ள மீனாட்சியம்மனை பெரும்பாலும் திருமணம் ஆக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுவதாகச் சொல்லப்படுகிறது.
கோவை, தொழில் நகரம் என்பதால் இங்கேயுள்ள தொழில் முனைவோர் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கே வந்து நேர்த்திக்கடன் செய்து வழிபடும் தலமாகவும் இந்த காட்டு விநாயகர் கோயில் விளங்குகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடை சாவியை காலையில் இந்த விநாயகர் சன்னிதியில் வைத்து, பிரார்த்தித்து எடுத்த பின்னரே தங்கள் கடைகளை திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தக் கோயில் வளாகத்தில் குடிகொண்டுள்ள அளவற்ற அமைதி மட்டுமல்லாமல், மிகப் பழைமையான அடர்ந்த மரங்கள் இருப்பதால் குளிர்ச்சியான சுற்றுப்புறமும் இருப்பதால், இதை தியானத்திற்கு மிகச் சிறந்த இடமாகக் கருதி பக்தர்கள் இந்தக் கோயிலைத் தேடி வந்து தியானம் செய்து மன அமைதி பெறுகிறார்கள்.
நேர்த்திக்கடன் என்பது இங்கே வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் செய்யும் செயலாகவே அமைந்துள்ளது. இங்கே வந்து பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு சிறந்த வழியைக் காட்டி அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதால், 'காட்டு விநாயகா! வழிகாட்டு நாயகா!' என்னும் பிரார்த்தனையுடன் பக்தர்கள் வழிபடும் சிறப்பான தலமாக இந்த காட்டு விநாயகர் கோயில் அமைந்துள்ளது.