மதுரா கிருஷ்ண ஜென்மபூமி: 5253-வது ஜெயந்தி விழா கோலாகலம்!

கிருஷ்ணர் பிறந்த புனித பூமியின் வரலாறு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தரிசன நேரங்கள் இதோ!
கிருஷ்ண ஜென்மபூமி - Mathura Krishna
கிருஷ்ண ஜென்மபூமி - Mathura Krishna
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த புனிதமான இடமாகும்.

கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை:

வசுதேவர் மற்றும் தேவகி சிறை வைக்கப்பட்டிருந்தாக நம்பப்படும் பகுதி கர்ப்ப கிரகம் என்று அழைக்கப் படுகிறது. இதுவே கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனின் சிறைச்சாலையில் தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்த புனிதமான இடமாக இது போற்றப்படுகிறது.

கிருஷ்ணர் அவதரித்த சிறைச்சாலை அமைந்திருந்த இடத்தில் பளிங்குக் கல்லால் ஆன ஒரு மேடையும், கிருஷ்ணரின் அழகிய திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தற்போதும் இங்குள்ள ஒரு சிறிய இருண்ட அறையில், கிருஷ்ணர் பிறந்த இடத்தை உணர்த்தும் பாறை பலகை ஒன்று வழிபாட்டில் உள்ளது.

கேசவ்தேவ் கோயில்:

இந்த வளாகத்தில் உள்ள மிகப் பழமையான கோவில் களில் கேசவ் தேவ் கோவில் ஒன்றாகும். வளாகத்தின் மிக முக்கியமான இந்த முதன்மைக் கோயிலில் ராதாகிருஷ்ணரின் அழகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இதன் கட்டிடக்கலை மற்றும் கலை வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியானவை.

பகவத் பவன்:

பகவத் பவன் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் 1982ல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு ராதா-கிருஷ்ணர், ராமர்-சீதை, ஜெகன்னாதர் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு தனி தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இதன் சுவர்களில் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் மற்றும் கிருஷ்ணரின் லீலைகள் மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ண ஜென்மபூமி - Mathura Krishna
கிருஷ்ண ஜென்மபூமி - Mathura Krishna

யோக மாயா சன்னதி:

கிருஷ்ணர் அவதரித்த சிறை அறையின் நுழைவாயிலுக்கு அருகிலேயே கம்சனின் கைகளில் இருந்து தப்பி வானில் மறைந்த அஷ்டபுஜ (8 கரங்கள் கொண்ட) யோக மாயா தேவியின் சன்னதி அமைந்துள்ளது.

போத்ரா குண்ட் - கிருஷ்ணர் பிறந்த பிறகு குழந்தை கிருஷ்ணரின் ஆடைகளை அவரது பெற்றோர் துவைத்ததாக நம்பப்படும் ஒரு புனிதமான குளமும் உள்ளது.

கம்சனின் அரண்மனை இருந்ததாக நம்பப்படும் இந்தப் பகுதி பல நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாக விளங்கி வருகிறது. இத்தலம் கிமு 6ஆம் நூற்றாண்டு முதலே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்கிறது.

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் இந்தத் தலம் பலமுறை இடிக்கப்பட்டு பின்பு மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, அதன் அருகில் ஷாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டது. தற்போதைய பிரம்மாண்டமான கோவில் வளாகம் 20-ம் நூற்றாண்டில் தொழிலதிபர்களின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கிருஷ்ண ஜெயந்தி: தமிழகத்தில் தவறவிடக்கூடாத 4 பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்கள்!
கிருஷ்ண ஜென்மபூமி - Mathura Krishna

மதுராவில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி:

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா மதுராவில் செப்டம்பர் 4 மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த புண்ணிய பூமியான மதுராவில் இந்த ஆண்டு அவரது 5253 -ஆவது பிறந்தநாள் திருவிழாவாக இது அனுசரிக்கப்படுகிறது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் செப்டம்பர் 4 இரவு 12 மணி அளவில் மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலில் பிரதான ஜென்மோத்சவ பூஜைகள் தொடங்கும்.

மதுரா அதன் பஜனை கீர்த்தனைகள், ராச லீலா நடனங்கள் மற்றும் புகழ்பெற்ற 'மதுராபேடா' போன்ற இனிப்புகளுக்கும் உலக அளவில் பெயர் பெற்றது.

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவில் வளாகம் முழுவதும் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளாலும், நறுமணம் மிக்க மலர்களாலும், 'சிந்தூர்' மலர் மாளிகை போன்ற சிறப்பு தீம்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாமிர்த அபிஷேகம்:

நள்ளிரவில் கிருஷ்ணர் அவதரிக்கும் வேளையில், பாலகிருஷ்ணனின் சிலைக்கு பால், தயிர், தேன் மற்றும் இளநீர் கலந்த 'பஞ்சாமிர்தம்' கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும்.

சப்பன்போக் (56 வகை உணவுகள்):

அபிஷேகத்திற்குப் பிறகு பகவானுக்கு 56 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

ஊஞ்சல் சேவை:

நள்ளிரவு வழிபாட்டிற்கு பின்பு பட்டு ஆடைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பாலகிருஷ்ணரை ஊஞ்சலில் அமர வைத்து பக்தர்கள் 'ஹரே கிருஷ்ணா' மந்திரங்களை முழங்கியபடி ஊஞ்சல் ஆட்டுவார்கள்.

நந்தோத்சவம் (செப்டம்பர் 5):

கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாளான செப்டம்பர் 5 அன்று பிராந்தியத்தில் 'நந்தோத்சவம்' கொண்டாடப்படும். அன்றைய தினம் மதுராவின் வீதிகளில் தயிர் பானை உடைக்கும் (Dahi Handi) உரியடி உற்சவம் போன்ற போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
ஈரோட்டில் அமர்ந்த கோலத்தில் அருளும் லட்சுமி நாராயணர்: பிரிந்த தம்பதியரை சேர்க்கும் அதிசயம்!
கிருஷ்ண ஜென்மபூமி - Mathura Krishna

நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி நள்ளிரவில் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடுவது வழக்கம்.

கோவில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி தலத்தின் முழுமையான ஆன்மீக வரலாறு, கிருஷ்ண ஜெயந்தி நள்ளிரவு வழிபாட்டின் ஆன்மீக மகிமை மற்றும் கோயிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்வதற்கான சரியான நேரங்கள் குறித்த தெளிவான வழிகாட்டுதலைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com