

ஈரோடு ஊத்துக்குளி அருகே புதூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவில், அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அரிய விஷ்ணு தலமாகும். மகாலட்சுமியை இடது தொடையில் தாங்கிய தாமரை பீடத்தில் அருள்பாலிக்கும் இத்தலத்தில், கருடன் தெற்கு நோக்கி நிற்கும் தனிச்சிறப்பு உண்டு. காளிங்க நர்த்தனர், ஆஞ்சநேயர், விநாயகர், நவநீதகிருஷ்ணர் உள்ளிட்ட பல தெய்வங்கள் வழிபாட்டுக்கு உள்ளன.
குடும்ப ஒற்றுமை, தொழில் வளர்ச்சி, ஏழரை சனி நிவாரணம், குழந்தை வரம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் தலமாக பக்தர்கள் நம்புகின்றனர். மார்கழி வைகுண்ட ஏகாதசி, மாத பௌர்ணமி ஹோமங்கள், தினசரி பூஜைகள் சிறப்பாக நடைபெறும் இக்கோவில் காலை 6–11, மாலை 4–8 மணி வரை திறந்திருக்கும்.
தமிழ்நாட்டில் விஷ்ணு பகவானுக்கு கோவில்கள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலும் நின்ற நிலையிலே காட்சி தருகிறார். அமர்ந்த நிலையில் காட்சி தரும் கோவில்கள் குறைவாக உள்ளன. ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே புதூர் என்ற ஊரில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலின் சிறப்புகளை இப்பதிவில் காண்போம்.
தல வரலாறு: அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் ஒரு சமயம் பாற்கடலை கடைந்தனர். மகாலட்சுமி தாயார் அப்போது அதிலிருந்து தோன்றி மகாவிஷ்ணுவை கணவராக அடைய விரும்பினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு மகாலட்சுமி தன்னை கணவராக தேர்ந்தெடுத்ததை பெருமைப்படுத்தும் விதமாக தனது இடது தொடை மீது அமர வைத்தார். பின்பு தாமரை மலரில் அமர்ந்து காட்சியளித்ததன் அடிப்படையில் இக்கோவில் கட்டப்பட்டது. மைசூர் கர்த்தாரிய மன்னர்களால் கிபி 16ஆம் நூற்றாண்டில் இக் கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோவிலின் சிறப்புகள்: பொதுவாக பெருமாள் கோவில்களில் கருட பகவான் இறைவனை நோக்கியே காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் லட்சுமி நாராயணரை கருடன் பார்க்காமல் தெற்கு நோக்கி காட்சி தருவது மிகவும் சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது. இக்கோவிலில் இருக்கும் ஐந்து தலை நாகம் மீது நடனமாடும் காளிங்க நர்த்தனர் சிலை மிகவும் பழமை வாய்ந்தது.
ஆனால் இன்றும் புதிதுபோல காட்சி தரும் காளிங்க நர்த்தனர் சிலையை வழிபட்டால் எதிரிகளால் பிரச்னையை சந்திப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதற்கு அருகில் தெற்கு நோக்கிய நிலையில் விநாயகரை தரிசிக்கலாம்.
நவநீதகிருஷ்ணர், ஆஞ்சநேயர் இருவரும் கோவிலுக்கு முன்புறம் உள்ள ஸ்தூபியில் இறைவனை நோக்கியபடி எழுந்தருளியுள்ளனர். மறுபுறம் உள்ள தூணில் வீர ஆஞ்சநேயர் விஜயஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். குழந்தை வரம் வேண்டும் என விரும்பும் பக்தர்கள் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்தூபியை 3 முறை சுற்றி வந்து வழிபாடு செய்கின்றனர்.
ஏழரை நாட்டு சனி நடப்பவர்கள் அதனுடைய பாதிப்பிலிருந்து விடுபட ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். தாமரை வடிவ பீடத்தில் ஸ்ரீ மகாலட்சுமியை இடது தொடையில் தாங்கியபடி ஸ்ரீ லட்சுமி நாராயணனாக அருள்பாலிக்கும் பகவான் விஷ்ணுவை வழிபட கணவன் மனைவிக்கிடையே நீண்ட காலமாக இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் தொழிலில் வளர்ச்சி பெறவும், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்களும் லட்சுமி நாராயணரை வணங்கினால் வாழ்வில் வளம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வஸ்திர ஆடைகளை அணிந்து பகவானுக்கு திருமஞ்சனம் செய்கிறார்கள்.
முக்கிய விழாக்கள்: மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் சுதர்சன ஹோமங்கள், பாக்கிய சூத்திரம், நவகிரக ஹோமம், சந்தான மகாலட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு மாலை வேளையில் பஜனையும் செய்யப்படுகிறது.
நடை திறந்திருக்கும் நேரம்: கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை நான்கு மணி முதல் 8மணி வரையும் திறந்திருக்கும்.
கோவில் அமைவிடம்: ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் புதூர் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம், உங்கள் திருமண வாழ்வில் உள்ள நீண்டகால கருத்து வேறுபாடுகளை நீக்கி, குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் துல்லியமான ஆன்மீகப் பரிகாரத் தலத்தை நீங்கள் கண்டறிவீர்கள். அத்துடன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களை சரிசெய்து, நிதி நிலைமையை சீராக்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல் உங்களுக்குக் கிடைக்கும்.