
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் சித்திரை மாத திருவாதிரைத் திருநாளில் கேசவ சோமயாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ இராமானுஜர். இராமனுஜருக்கு யதிராஜர் என்னும் பெயருமுண்டு. யதிராஜர் என்றால் துறவிகளில் தலைமைப் பண்புடையவர் என்று பொருள்.
விசிஷ்டாத்வைதவதம் என்னும் தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய வைணவப் புரட்சித் துறவி இவர். ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள், அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்துத் தந்தவர் ஸ்ரீ இராமானுஜர். இராமானுஜர் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சுற்றியலைந்து வைணவத்தின் அருமை பெருமைகளைப் பரவச் செய்தார். பல வைணவ மடங்களை நிறுவிப் பாதுகாத்தார். சாதி பேதம் பாராமல் வைணவம் சார்ந்த ஆண், பெண் இருபாலாரும் தமிழ்ப் பாசுரங்களை ஓதவும் வைணவ மதச் சின்னங்களை அணியவும் வைணவத்தில் இடமளித்தார்.
இவரை பக்த கோடிகள் மூன்று இடங்களில் வழிபடுகிறார்கள்.
முதலாவது தமருகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில்),
இரண்டாவது தானுகந்த திருமேனி ( ஸ்ரீ பெரும்புதூர்)
மூன்றாவதாக தானான திருமேனி (ஸ்ரீரங்கம்).
ஸ்ரீரங்கத்திலேயே பல ஆண்டுகள் தங்கி, ஸ்ரீரங்கப் பெருமாளால் 'உடையவர்' என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார் இவர். இவரால் வைணவம் தழைத்ததால் கோபம் கொண்ட சைவ மதத்தைச் சேர்ந்த சோழ மன்னனின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்த திருநாராயணன் கோவிலுக்குச் சென்று, அங்கே 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யங்கள் செய்தார். (வடக்கே ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம் தென் பத்ரிகாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது.)
திரும்ப ஸ்ரீரங்கத்திற்கே திரும்ப எண்ணிய இராமனுஜரை பக்தகோடிகள் விடவில்லை. தாங்களும் அவருடன் ஸ்ரீரங்கம் வருவோம் என்று கிளம்பினார்கள். உடனே ஸ்ரீ இராமானுஜர் தன்னைப் போலவே ஒரு சிலை வடிக்கச் செய்து அந்த சிலையை ஆரத் தழுவி தன்னுடைய சக்தியை அதில் மாற்றி கொடுத்தார்.
இன்றும் அந்த சிலை மேல்கோட்டை கோவிலில் 'தமருகந்த திருமேனி' என்னும் பெயரால் தொழுது வணங்கப்படுகிறது. அதாவது அடியவர்களுக்கு மிகவும் பிடித்த திருமேனி என்பது இதன் பொருள்.
அவருடைய அவதார ஸ்தலமாகிய ஸ்ரீபெரும்புதூரிலும் ஒரு இராமானுஜர் சிலை வேண்டுமென்று விரும்பி பக்தர்கள் வடித்த ஒரு சிலையில் தன் ஆத்ம சக்தியை செலுத்தினார் இராமானுஜர். இதற்கு 'தான் உகந்த திருமேனி', அதாவது ஸ்ரீ இராமானுஜருக்கு மிகவும் பிடித்தமான திருமேனி என்று பெயர்.
அவருடைய பூத உடல் ஸ்ரீரங்கம் கோவிலில் உட்கார்ந்த தோற்றத்தில் ஒரு சன்னதியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. வருடத்திற்கு இருமுறை பச்சைக் கற்பூரத்தாலும் குங்குமப்பூவாலும் ஆன ஒருவித குழம்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட ஸ்ரீ இராமானுஜரின் பூத உடல் அப்படியே இருப்பது ஒரு அதிசயம்தான். இப்போதும் அவருடைய திருமேனி வைத்தவாறே இருப்பதாகவும் அதனாலேயே 'தானான திருமேனி' என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று அவருடைய 1008 ஆவது அவதாரத் திருநாளையொட்டி அவர் அவதரித்த திருத்தலமாகிய ஸ்ரீபெரும்புதூரில் 10 நாட்களாக விழா நடைபெறுகிறது. தேரோட்ட விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அவரை தரிசித்து ஏராளமான பக்தகோடிகள் ஆசிர்வாதம் பெற்றனர்.