
ஷீரடி சாயிபாபாவின் அற்புத லீலைகள் மனிதனை ஆன்மிக வழிக்குத் திருப்புகின்றன. அவை பக்தர்களின் மனதில் இருக்கும் சந்தேகம், அஹங்காரம், இனப்பெருமை ஆகியவற்றை அழித்து உண்மையை உணர்த்துகின்றன. பாபா தனது பக்தர்களுக்கு அவர்கள் வணங்கும் தெய்வமாகவோ அல்லது குருவாகவோ காட்சி தந்தருளினார். அவ்வாறு பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு தன்னையே மறந்தவர் முலே சாஸ்திரி என்ற பக்தர்.
ஜோசியம், கைரேகை முதலியவற்றில் கரை கண்டவரும், சாஸ்திரங்களைக் கற்றறிந்தவருமாகிய நாசிக்கை சேர்ந்த வைதீகமான அக்னிஹோத்ரி அந்தணர் முலே சாஸ்திரி ஒரு சமயம் நாக்பூரின் புகழ் பெற்ற கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டியைச் சந்திக்க ஷீர்டிக்கு வந்தார். அங்கு தன்னுடைய இருப்பிடத்தில் அவர் குளித்து புனித ஆடைகள் அணிந்து அக்னிஹோத்ரம் போன்ற தனது நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்ய ஆரம்பித்தார்.
மசூதியில் இருந்த சாயிபாபா. திடீரென, ‘கொஞ்சம் ஜெரு எடு (குங்குமப்பூ நிறத்தில் துணியைச் சாயம் போடுவதற்கான சிவப்பு மண்ணைப் போன்ற ஒரு பொருள்) நாம் இன்று குங்குமப்பூ நிற உடை உடுத்தலாம்’ என்று கூறினார். பாபா என்ன சொல்கிறார் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை. சிறிது நேரம் கழித்து. மத்தியான ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆரத்தியும் துவங்கியது.
பாபா, ‘புது பிராமணனிடமிருந்து தட்சணை வாங்கி வா’ எனக் கூறினார். அந்தப் புது பிராமணன் முலே சாஸ்திரிதான். பாபாவின் செய்தியை முலே சாஸ்திரியிடம் தெரிவித்தபோது அவர் சொல்லப்பெறாத அளவு குழப்பம் அடைந்தார். ‘நான் தூய அக்னி ஹோத்ரி பிராமணன். நான் ஏன் தட்சணை கொடுக்க வேண்டும்? பாபா பெரிய முனிவராக இருக்கலாம். நான் அவரது சீடனல்ல!’ என நினைத்தார். ஆனால், சாயிபாபாவைப் போன்ற ஞானி, பூட்டியைப் போன்ற கோடீஸ்வரரிடம் தட்சணை கேட்டனுப்பியிருப்பதனால் அவரால் மறுக்க இயலவில்லை. எனவே, தனது அனுஷ்டானத்தைப் பூர்த்தியாக்காமல் உடனே பூட்டியுடன் மசூதிக்குச் சென்றார்.
தம்மைத் தூயவராகவும், புனிதமானவராகவும், மசூதியை வேறுவிதமாகவும் கருதிய அவர் சற்று தூரத்தில் இருந்தே கைகளைச் சேர்த்து பாபாவின்மீது புஷ்பங்களை வீசினார். அப்போது, திடீரென்று ஆசனத்தில் அவர் பாபாவைக் காணவில்லை. காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமியையே அங்கு கண்டார். ஆச்சரியத்தால் அவர் செயலிழந்தார். காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமி எங்ஙனம் அங்கு இருக்க முடியும்? சிறிது நேரம் அவர் பேச்சற்று விட்டார். ஆனால், காலஞ்சென்ற தனது குரு மசூதியில் இருக்கும் உண்மையை அவரால் ஏற்க முடியவில்லை. முடிவில் எல்லா ஐயங்களையும் களைந்துவிட்டுத் தெளிந்த நிலையில் தனது குருவின் அடிகளில் பணிந்து, கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்.
மற்ற எல்லோரும் ஆரத்தி பாடுகையில் முலே சாஸ்திரி தனது குருவின் பெயரை இரைந்து கூக்குரலிட்டார். இனப்பெருமை, புனிதத்தன்மை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி எறிந்துவிட்டு தனது குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார். பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு முலே சாஸ்திரி தன்னையே மறந்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். திரும்பவும் பாபாவை வணங்கி பாபாவுக்கு தட்சணை கொடுத்து தனது சந்தேகம் நீங்கிவிட்டதாகவும், தன் குருவையே கண்டதாகவும் உருகிப் பேசினார். பாபாவின் இந்த லீலையைக் கண்ணுற்ற அனைவரும், மிகவும் மனதுருகிப் போயினர். ‘ஜெரு எடு, நாம் இன்று குங்குமப்பூ வண்ண உடை உடுத்தலாம்’ என்ற பாபாவின் பொன்மொழிகளை இப்போது புரிந்துகொண்டனர். சாயிபாபாவின் லீலை அத்தகைய அற்புதம் வாய்ந்ததாகும்.