
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வருடா வருடம் புதிய தேர் செய்யப்படுகிறது. ஏன்? என்பதற்கு புராண கதையும் உண்டு. இதோ அந்த கதை...
ஆதியில் பிரம்மாவுக்கு 5 தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் இருந்தார். அவருக்குப் பாடம் கற்பிக்க சிவன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையில் மண்டை ஓடுடன் உடலெங்கும் சாம்பல் பூசிக் கொண்டு ஊர் ஊராக திரிந்தார். மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு வந்தார். அவள் சிவன் கையிலிருந்த கபாலத்துக்கு உணவிட்டு சாதத்தை கீழே சிதற விடும்படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது.
உடனே அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தைக் காலால் மிதித்து அதை அடக்கினார். சிவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. கபாலத்தை அடக்கிய பிறகும் அவள் கோபம் தணியவில்லை. அவள் கோபத்தைக் தணிக்க மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மண்டபமாகவும், மரப்பலகைகளாகவும் சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரியின் கோபம் தணிந்து தேரில் அமர்ந்து வீதி வலம் வந்தாள். உலா முடிந்ததும் அவரவர் தத்தம் இடங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்டம் முடிந்த பிறகு தேரை பிரித்து விடுவார்கள். அடுத்த வருடத்துக்கு புதிய தேர் செய்யப்படும். இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் அமாவாசை அன்று குறி சொல்லப்படுகிறது.
பேய் பிடித்தவர்களுக்கு இங்கு கபால தீர்த்தம் வழங்கி கற்பூரம் கொளுத்திக் கொடுக்க, அப்பெண் அதை வாயில் போட்டதும் அமைதியாகிறாள். இக் கோவில் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார். இக்கோவில் திருவண்ணாமலையில் இருந்து 20கி. மீ. தொலைவில் உள்ளது.
இக் கோவிலில் மகாசிவராத்ரியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்போது நடைபெறும் தேரோட்டத்திற்கு புதிதாக தேர் செய்யப்படும். அதில் அம்மன் உலா வருவாள்.