
பச்சை பசேலென்ற நெல் வயல்களுக்கு நடுவே, ஸ்ரீநித்யகல்யாணி அம்மனும் உடனுறை வில்வ வனநாத சுவாமியும் காட்சி தரும் திருக்கோயில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கடையம் என்ற ஊரில், ராம நதிக்கரையில் அமையப் பெற்றுள்ளது. கடையத்திற்கு வந்தால் கவலைகள் நீங்கும் எனக் கூறுவதுண்டு. மேலும், இன்றும் அகத்திய முனிவர் தவம் செய்யுமிடமெனக் கருதப் படுகிறது.
ஸ்ரீநித்ய கல்யாணி அம்மனின் சிறப்புக்கள் :-
அன்னை உமாதேவி, சும்பன் - நிசும்பன் எனும் இரண்டு அசுரர்களை அழிக்கும் பொருட்டு பூமியில் அவதரித்து அவர்கள் இருவரையும் சம்ஹாரம் செய்தாள். அச்சமயம், அம்மையின் பொன்மேனி கருமேனி ஆகிவிட, துவாத சாந்த வனத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தாள். தேவியின் தவத்தை மெச்சி, அம்மையின் கருமை மேனியைப் பொன் மேனியாக்கி ஸ்ரீநித்ய கல்யாணியாக கடையத்தில் இருக்குமாறு அருள் புரிந்தார் சிவபெருமான்.
கிழக்கு திசை நோக்கி நின்ற ஸ்ரீநித்ய கல்யாணி அம்மன், மிகுந்த உக்கிர தேவதையாக இருந்ததால், பெரியவர்களின் ஆலோசனைப்படி, தெற்கு நோக்கிய சன்னதியில் அம்மை பிரதிஷ்டிக்கப்பட்டாள். அம்மையிடமிருந்த பதினாறு கலைகளில், பதினைந்தைப்பிரித்து, ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டது. இந்த பீடம் "தரணி பீடம்" என்று அழைக்கப்படுகிறது. நித்தமும், பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்கிறாள் அம்மன். மூலவர் கிழக்கு நோக்கிய சன்னதியில் காணப்படுகிறார்.
வில்வநாதருக்கு, வில்வ மாலை மற்றும் வில்வ இலைகள் சாத்தி வேண்டினால், வேண்டியது நடக்கும். அதே போல ஸ்ரீ துர்கா, லெஷ்மி, சரஸ்வதியாக உமையாள், ஸ்ரீநித்ய கல்யாணி அம்மனாக காட்சியளித்து, பெண்களின் குறைகளை தாயன்புடன் நிவர்த்தி செய்கிறாள்.
கடையம் துவாத சாந்த வனம் (வில்வாரண்ய தல) புராணம் :-
பண்டைய காலத்தில், சிவபெருமானை நினைத்து பிரம்மா தவம் புரிகையில், அவருடைய தவத்தை மெச்சி சிவனார் அவர் முன்பாக தோன்றி, ஒரு வில்வப் பழத்தினை வழங்கி அருள் புரிந்தார். சிவபெருமானின் ஆணைப்படி, நாரதர் வில்வப் பழத்தை மூன்று பகுதிகளாக உடைத்து , வடக்கே கயிலாய மலையில் ஒன்று; மத்தியில் மேரு மலையில் ஒன்று; தெற்கே பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள துவாத சாந்த வனத்தில் ஒன்று என நட்டு வைத்தார். தெற்கிலுள்ள துவாத சாந்த வனமே, கடையம் வில்வாரண்ய தலமென்று அழைக்கப் படுகிறது.
ஸ்ரீ நித்ய கல்யாணி அம்மன் கோவில், சிவாலயத்தலமாக இருப்பினும், ராமாயணத் தொடர்புடையது. எப்படியென்றால், தசரதர், சிரவணை தவறுதலாக அம்பெய்து கொன்ற வனம் இது. தசரதர் வில்வ வனநாதரிடம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடிய இந்த கோவில் கதவில், சிரவண் கொல்லப்பட்ட காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
கவி பாரதி அமர்ந்திருந்த தட்டப் பாறை :-
ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலின் மிக அருகே தட்டப்பாறை உள்ளது. கடையத்தில் மனைவி வீட்டில் சிறிது காலம் வசித்த முண்டாசு கவிஞர் பாரதி, ஸ்ரீநித்ய கல்யாணி அம்மனின் பக்தர். தினமும் காலாற நடந்து கோவிலுக்குச் சென்று அம்மையை வணங்கி, தட்டப் பாறையில் அமர்ந்து பாடல்கள் எழுதுவதுண்டு. அப்படி ஒரு சமயம் தட்டப் பாறையில் கவி பாரதியார் அமர்ந்திருக்கையில்தான், "காணி நிலம் வேண்டும்! பராசக்தி காணி நிலம் வேண்டும்!" ; "உஜ்ஜயினி ! மாகாளி!" போன்ற பாடல்களைப் பாடினார். பிரபலமான பல்வேறு கவிதைகளையும் எழுதினார்.
உபரி தகவல்கள் :-
பரணி பீடத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான கோவில்.
800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநித்ய கல்யாணி அம்மன் கோவிலுக்கு கோபுரம் கிடையாது. மிகப் பழமையான இக்கோவில், தேவர் வைப்பு ஸ்தலம் கோவில் எனக் கருதப்படுகிறது.
ஸ்ரீநித்ய கல்யாணி அம்மன் கோவில் மண்டபத்தினுள், நடராஜர்- சிவகாமி உற்சவ விக்ரகங்கள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில்நவ கிரகம், சங்கர நயினார், மற்றும் மரத்தின் கீழே சில நாகர்கள் சிலைகள் உள்ளன. உள் பிராகாரத்திலும் அநேக தெய்வச் சிலைகள் இருக்கின்றன.
ஸ்ரீ நித்ய கல்யாணி அம்மன் கோவிலில், முக்கியமான பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தெப்பத் திருவிழா, பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கோவிலின் வெளிப்புறச் சுவருக்கு அருகாமையில் இருக்கும் அழகான தெப்பக்குளம், நடுவே இருக்கும் சிறு மண்டபம் ஆகியவைகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
காலை 7 முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 முதல் 8 மணிவரை கோவில் திறந்திருக்கும்.
இந்த வருடம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.