

தமிழ்க் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்தி நான்கு திருமூர்த்தங்களில் ஒருவராவார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், காலபைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால் நம்முடைய கடன் சுமை எல்லாம் தேய்ந்து போகும். வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்தால் நம் வாழ்க்கை வளம் பெறும். இதுதான் இந்த வழிபாட்டிற்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம்.
வளர்பிறை அஷ்டமி திதியில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். ராகு காலத்தில்தான் பைரவரை வழிபடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபடுவதன் மூலம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த கர்ம வினைகள் கரையக் தொடங்கும். இந்த வழிபாட்டின் முடிவில் பணக்கஷ்டம் விலகி வருமானம் பெருகும். சனி பகவானுக்கு குருவாக திகழ்பவர் காலபைரவர். சனிக்கிழமை சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் பைரவரை வழிபாடு செய்தால் நமக்கு சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் தீரும். எனவே, இந்நாளை தவற விடக் கூடாது.
சனீஸ்வரரும் பைரவரும்: காலபைரவர் எட்டு திசைகளையும் காத்து நம்மை வழிநடத்தும் காவல் தெய்வம் ஆவார். பைரவரே சனீஸ்வரருக்கு வரம் அளித்து அவரது கடமைகளை செய்ய வைத்த குரு ஆவார். சனி பகவானின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தனது சகோதரனான எமதர்மராஜா, பைரவரை வணங்கி அதிக சக்தி வேண்டி கடுமையாக தவம் புரிந்தார். சனீஸ்வரனின் தவ வலிமையால் அவர் முன் தோன்றி நல்லது, தீயது செய்யும் சக்தியை அளித்தார். அப்போது யாரேனும் கஷ்டத்தில் இருந்தாலும் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையே செய்ய வேண்டும் என்று பைரவர் சனீஸ்வரரிடம் சத்தியப் பிரமாணம் வாங்கினார்.
வளர்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடலாம். வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்தக் காசுகளை தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைக்க, பணம் அதிகமாக சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் அல்லது 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை, ‘சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பைரவரை வணங்குவதால் வறுமை, எதிரிகளின் தொல்லை, வியாபார முன்னேற்றம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இழந்த செல்வத்தைப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லது நல்லெண்ணை இட்டு தீபமேற்றுவதாகும். சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை சேர்த்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
அஷ்டமி திதியில் பைரவரை தொடர்ந்து வழிபட்டால் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் வந்து சேரும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும். மனதில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் உண்டாகும். நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க அஷ்டமி திதிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திர, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.