

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட சிறப்பான மாதமான மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டநாதனே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்புரிவார் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசி விரத முறை, அதன் சிறப்புகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
* வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
* ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம். அன்று முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருப்பதுடன், குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்கலாம்.
* விரதத்தின் பொழுது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக் கூடாது. எனவே, பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்து வைத்துக் கொள்ளலாம்.
* இரவு முழுவதும் கண் விழித்து, டிவி பார்க்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமம், துதிப் பாடல்கள், ராமாயணம், பகவத் கீதை போன்றவற்றை பாராயணம் செய்வதுடன், ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களைப் படித்தோ அல்லது காதால் கேட்கவோ செய்யலாம்.
* வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண் விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கடைபிடிக்கப்படுகிறது. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் நம் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப கிடைக்கும் என்பதே இதன் கருத்து.
* மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் குளித்து கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கிய பிறகு புளி சேர்க்காத உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்த உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
* துவாதசி திதியிலும் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு உண்டு.
* ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட, தீராத நோய்கள் தீரும்; பாவங்கள் அகலும்; சகல செல்வங்களும் உண்டாகும்.
* காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை, கங்கையை விட சிறந்த தீர்த்தமில்லை, ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
* எல்லா வைணவ திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்புடன் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். பூலோக வைகுண்டம் என்னும் ஸ்ரீரங்கத்தில் முக்கோடி ஏகாதசி 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். முடிந்தால் ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை தரிசனம் செய்யலாம். முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வரலாம்.
* ஒரு சமயம் பார்வதி தேவி, மிகச் சிறந்த விரதம் எது என்று சிவபெருமானிடம் கேட்க, ஏகாதசி விரதமே சிறந்தது என்றும், பாவங்களைப் போக்கும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள் என்றும் ஈசன் கூறினார். இதிலிருந்தே இந்த விரதத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.