

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நாட்டு குடிமக்களும், அவர்களின் கலாசாரமும் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டன. போர்களில் தொடர்ச்சியாக தாக்கப்பட்ட பல கோயில்களை மீட்கவும் மறு சீரமைப்பு செய்யவும் ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால், ஒரு பிரிட்டிஷ்காரர் சிதிலமடைந்த ஒரு சிவன் கோயிலை சீரமைத்து மீண்டும் அங்கு கோயிலைக் கட்டியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. அந்த கோயிலைப் பற்றியும், கோயிலை கட்டிய கர்னல் மார்ட்டினை சிவபெருமான் ஆட்கொண்ட விதத்தையும் இப்பதிவில் அறிந்துக் கொள்வோம்.
மத்திய பிரதேச மாநிலம், அகர்மால்வா நகரத்தின் அருகில் உள்ளது பைஜ்நாத் மகாதேவ் கோயில். இந்தக் கோயிலை மத்திய பிரதேசத்தை சேர்ந்த மன்னர்கள் 1528ல் தொடங்கி 1536ம் ஆண்டு வரை கட்டினர். இந்தக் கோயிலின் விமானம் 50 அடி உயரம் கொண்டது. இந்தக் கோயில் பின்னாளில் சிதிலமடைந்து இடிந்து காணப்பட்டது, கோயில் மோசமான நிலையில் இருந்தாலும் பூசாரிகள் கோயிலில் பூஜை செய்வதை தொடர்ந்தனர்.
19ம் நூற்றாண்டில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போர் நடந்தது. இந்த போருக்கு மத்தியப்பிரதேசம், அகர் மால்வாவில் வசித்து வந்த பிரிட்டிஷ் ராணுவ லெப்டினன்ட் கர்னல் மார்டினும் அனுப்பப்பட்டார். தொடர்ந்து போரில் சண்டையிட்டாலும் அகர் மால்வாவில் உள்ள கன்டோன்மென்ட்டில் வசிக்கும் அவரது மனைவிக்கு அடிக்கடி கடிதம் எழுதி அனுப்பி வந்தார்.
குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர், ஆப்கான் போர்களத்தில் இருந்த மார்ட்டினிடம் இருந்து கடிதம் வருவதும் நின்றுபோனது. இதனால் போர்களத்தில் மார்டினின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்திருக்குமோ? என்று பயந்து அவர் மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். மார்டினின் மனைவி செய்வதறியாது, குதிரையில் ஏறி சென்று கொண்டிருந்தாள், அப்போது இடிந்த நிலையில் உள்ள ஒரு கோயிலில் சிலர் பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.
கோயிலில் ஒலிக்கும் மந்திர ஓசை அவளை இழுத்தது. குதிரையில் இருந்து இறங்கி கோயிலுக்கு சென்றாள். அவளது கவலை தேய்ந்த முகத்தை பார்த்த கோயில் பூசாரிகள் விவரம் கேட்டனர். விவரம் அறிந்த பின்னர், சிவபெருமானை நினைத்து ‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை அடிக்கடி 11 நாட்கள் வரை தொடர்ச்சியாக திருமதி மார்ட்டினை உச்சாடனம் செய்யக் கூறினார்கள். பூசாரிகள் கூறியபடியே மார்ட்டின் மனைவி நம்பிக்கையுடன் சிவ நாமம் ஜபிக்க தொடங்கினாள். 10வது நாளில் ஆப்கான் நாட்டிலிருந்து வந்த ஒரு தூதுவர் மார்டின் எழுதிய கடிதத்தை அளித்தார்.
அந்தக் கடிதத்தில், ‘போர்களத்தில் தன்னை எதிரிகள் சூழ்ந்து கொல்ல முயற்சி செய்த வேளையில், புலித்தோல் அணிந்த ஒருவர், நீண்ட கூந்தல் உடைய தோற்றத்தில், கையில் திரிசூலத்தை ஏந்தி, அவரது எதிரிகளை வீழ்த்தி ஓட செய்தார். அப்போது, ‘நீங்கள் யார்?’ என்று கேட்டபோது, ‘நான் உனது மனைவியின் பிரார்த்தனையை உணர்ந்து உன்னைக் காப்பாற்ற வந்தேன்!’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டார் என்று எழுதி இருந்தார்.
கடிதத்தை படித்த திருமதி மார்ட்டின் சிவபெருமான் தன் கணவரை காப்பாற்றியதை உணர்ந்து கொண்டார். பின்னர் மார்ட்டின் இந்தியா திரும்பியதும், உண்மையினை விளக்கிய அவரது மனைவி, பைஜ்நாத் மகாதேவ் கோயிலுக்கு அழைத்துச் சென்றாள். ‘இடிந்த நிலையில் உள்ள கோயிலை நாம் மீண்டும் கட்டித்தர வேண்டும்’ என்று கூறினாள். அதற்கு ஒப்புக் கொண்டு அவரும், அந்தக் காலத்தில் 15,000 ரூபாய் செலவில் பைஜ்நாத் மகாதேவருக்கு சிறப்பாக கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தார். 1883ம் ஆண்டு கல்வெட்டில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், இங்கிலாந்து திரும்பிய மார்ட்டின் தம்பதிகள் தங்கள் வீட்டில் ஒரு சிவன் கோயிலைக் கட்டி, தங்கள் வாழ்நாள் முழுவதும் சிவபெருமானை வழிபட்டனர். தனது பக்தர்களுக்காக எதையும் செய்யும் பைஜ்நாத் கோயிலுக்கு சென்று வழிபட்டால் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார். இந்தக் கோயிலுக்குச் செல்ல இந்தூர் வரை விமானப் பயணம் செய்யலாம். ரயில் மூலமாக உஜ்ஜயினி வரை சென்று, பின்னர் பேருந்து மூலம் அகர் மால்வா சென்று கோயிலை அடையலாம்.