
சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் உள்ளது அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில். இத்தல ஈசன், விஸ்வநாதர் மற்றும் மங்கைபாகர் என்னும் அருட்கோலத்திலும் அருள்பாலிக்கிறார். அம்மன் குயிலமுத நாயகி, விசாலாட்சி, தேனாம்பாள் ஆகியோர் ஆவர். கயிலாயத்தில் சிவன் - பார்வதி திருமணத்தின்போது தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் ஒன்றாகக் கூட, இதனால் வடதிசை தாழ்ந்தது. அதை சமன்படுத்த அகத்திய முனிவரை பொதிகை மலைக்குச் செல்லும்படி ஈசன் கூற, அவர் தானும் தங்கள் திருமணக் காட்சியைக் காண வேண்டும்’ எனக் கூற, அவர் விரும்பும் இடங்களிலெல்லாம் தமது திருமணக்கோலக் காட்சி கிடைக்கும் என்று வாக்களித்தார்.
அதன்படி பொதிகை மலைக்குச் சென்ற அகத்தியர், பல இடங்களில் சிவனின் திருமணக் கோலத்தை தரிசித்தார். அவற்றில் இதுவும் ஒன்று. ஒரு சமயம் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும். வாயு பகவான் அதை அசைக்க வேண்டும் என்பதே போட்டி.
வாயு பகவான் எவ்வளவு முயன்றும் மேரு மலையை அசைக்க முடியவில்லை. இந்தப் போட்டியின்போது மேரு மலையிலிருந்து மூன்று துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த குன்றே இத்தலமானது. இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கயிலாயம் என மூன்று அடுக்குகளில் காட்சி தருகிறார். பாதாளத்தில் கொடுங்குன்றநாதர் - அம்பிகை குயிலமுத நாயகியுடனும், மத்தியில் விஸ்வநாதர், விசாலாட்சி சமேதராகவும், மேல் பகுதியில் மங்கைபாகராக தேனாம்பாளோடு காட்சி தருகிறார்.
குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ள கோயில் இது என்பதால் தேன், திணை மாவு, பச்சரிசியில் செய்த தோசையை சுவாமிக்க நைவேத்தியம் செய்கிறார்கள். இக்கோயிலில் நந்தி தேவர் கிடையாது. கொடி மரம் பலி பீடமும் இல்லை. இக்கோயிலில் மங்கைபாகருக்கு ஒருமுறை அணிவித்த ஆடையை மறுமுறை அணிவிப்பதில்லை.
இந்த சிவன் நான்கு வேதங்களை கையில் வைத்து காட்சி தருவதால், ‘வேத சிவன்’ என்ற பெயர் உண்டு. இத்தல தட்சிணாயண புண்யகாலம் முடியும் மூன்று மாதங்களிலும், உத்தராயணபுண்யகாலம் துவங்கிய மூன்று மாதங்களும் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் சிவன் மீது சூரிய ஒளி படுவது அபூர்வமாகும்.
இக்கோயிலில், ‘குஷ்ட விலக்கி சுனை’ என்ற தீர்த்தம் இருக்கிறது. சரும வியாதி உள்ளவர்கள் இதில் நீராடினால் அந்நோய் தீரும் என நம்பப்படுகிறது. திருஞானசம்பந்நர் இத்தலத்திற்கு வந்தபோது சிவன் வடிவத்தில் மலையைக் கண்டார். மகிழ்ந்த அவர், ‘இது எம்பிரான் மலை’ என்று சொல்லி பதிகம் பாடினார். இதுவே மருவி ‘பிரான்மலை’ ஆனது. கடையேழு வள்ளலான பாரி இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார். இத்தலத்தில் உள்ள உறங்காபுளிமரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. காய்ந்த நிலையிலேயே உதிர்ந்து விடும். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
இத்தலம் வந்து இறைவனை தரிசித்தால் குடும்பத்தில் தம்பதி ஒற்றுமை ஏற்படும். சுக்ர தோஷம் தீரும். கல்விச் சிறப்பு ஏற்படும். பக்தர்கள் சுவாமி, அம்பிகைக்கு வெண்ணிற ஆடை அணிவித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.