மோதகம் எப்படி உருவானது? விநாயகர் வாகனத்தின் பின்னணி ரகசியம்!

கிரவுஞ்சனின் சாபம் முதல் அருந்ததியின் படைப்பு வரை விநாயகரின் சுவாரஸ்யமான கதைகள்.
விநாயகர் கொழுக்கட்டை - Ganesha Secrets
விநாயகர் கொழுக்கட்டை - Ganesha SecretsImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

விநாயகருக்கு முதன்முதலில் கொழுக்கட்டை படைத்தது யார் தெரியுமா? 

ஒருமுறை வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவரது ஆசிரமத்திற்கு விநாயகர் எழுந்தருளி உள்ளார். அவருக்கு ஏற்ற புதிய நிவேதனம் ஒன்றை செய்ய விரும்பினாள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

விநாயகர் இந்த அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளவர் இப்படி சர்வவியாபியான அவருக்கு என்ன மாதிரியான புதிய நிவேதனம் செய்யலாம் என்று யோசித்தவள் அண்டத்தை உணர்த்துவதற்கு மாவினால் சொப்பு என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் விநாயகரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை மாவிற்குள் வைத்து செய்தாள்.

அதுவே மோதகம் என்னும் (விநாயகர் கொழுக்கட்டை) கொழுக்கட்டையானது. அருந்ததி உருவாக்கிய இந்த இனிய மோதகத்தை கணபதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இப்படித்தான் வேழமுகத்தவனுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை உருவானது.

விநாயகர் மூஷிக வாகனரானது எப்படி தெரியுமா?

தேவலோகத்தில் கிரவுஞ்சன் என்ற அகந்தை கொண்ட கந்தர்வன் இருந்தான். ஒருமுறை இந்திரனின் சபையில் இருந்தபொழுது, அவன் கவனக்குறைவாக பராசர முனிவர் காலில் மிதித்து விட்டான்.

இதனால் கோபமடைந்த முனிவர், "நீ மண்ணைத்தோண்டி வாழும் எலியாகப் போவாய்" என்று சாபமிட்டார். சாபத்தின் காரணமாக அவன் பூலோகத்தில் ஒரு மிகப்பெரிய மலை போன்ற பெருச்சாளியாக (மூஷிகம்) மாறினான். அவன் பராசர முனிவரின் ஆசிரமத்தைப் பாழாக்கி, அங்கிருந்த பயிர்களையும் மரங்களையும் கடித்து நாசப்படுத்தினான். அப்பொழுது அந்த ஆசிரமத்தில் இருந்த விநாயகப் பெருமான், அந்த எலியின் அட்டகாசத்தை அடக்கத் தனது பாசக்கயிற்றை வீசினார். அது எலியின் கழுத்தை சுருக்கி விநாயகரின் பாதத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

விநாயகர் கொழுக்கட்டை - Ganesha Secrets
விநாயகர் கொழுக்கட்டை - Ganesha SecretsImage credit: Gemini

எலி தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு அவரைத் தாங்கும் வாகனமாக மாற அனுமதி கோரியது. விநாயகர் அதன் மீது அமர்ந்தவுடன், அவரை சுமக்க முடியாமல் எலி திணறியது. பின்னர் எலியின் வேண்டுகோளுக்கு இணங்கி விநாயகர் தன் எடையைக் குறைத்துக் கொண்டு, அதைத் தனது நிரந்தர வாகனமாக ஏற்றுக் கொண்டார்.

இதன் பின்னணியில் உள்ள ஆன்மீகத் தத்துவம் என்னவென்றால் எலி என்பது எப்போதும் ஓரிடத்தில் நில்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இது மனிதனின் பேராசை மற்றும் சஞ்சல புத்தியை குறிக்கிறது. அதன் மீது விநாயகர் அமர்ந்திருப்பது மனிதன் தன் பேராசையையும் அலைபாயும் மனதையும் அறிவால் கட்டுப்படுத்தி ஆளவேண்டும் என்பதைக் குறிப்பதாக உள்ளது.

விநாயகருக்கான வெவ்வேறு பெயர்கள் மற்றும் அதற்கான காரணங்கள்:

எந்த ஒரு சுபநிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வணங்கி தொடங்குவதுதான் வழக்கம். விநாயகப் பெருமானுக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் இருந்தாலும், பக்தர்களால் மிகவும் போற்றப்படும் மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் முக்கிய பெயர்கள் சில உள்ளன. விநாயகரை வெவ்வேறு பெயர்களில் அழைப்பது வழக்கம்.

* விக்னராஜன் - விக்னம் என்றால் தடை ராஜன் என்றால் வெற்றி கொண்டவர் என்று பொருள். விநாயகப் பெருமான் தன்னை நம்பும் பக்தர்களின் விக்னங்களை (இடைஞ்சல்களை, தடைகளை) நீக்குபவர் என்று பொருள்.

இதையும் படியுங்கள்:
விநாயக சதுர்த்தியை இப்படி கொண்டாடினால் செல்வம் பெருகும்!
விநாயகர் கொழுக்கட்டை - Ganesha Secrets

* கஜானனன்:

கஜம் என்றால் யானையைக் குறிக்கும். யானை முகத்தை உடையவன்.

* விநாயகர்:

தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லாதவர் என்று பொருள்.

* கணபதி:

'கணம்' என்றால் பூதகணங்கள். 'பதி' என்றால் தலைவன். பூதகணங்களின் தலைவன் இந்த விநாயகர் என்பதால் இப்பெயர் வந்தது.

* ஏகதந்தன்:

ஒற்றைத் தந்தம் உடையவர்.

* லம்போதரன்:

பெரிய தொந்தியை (வயிற்றை) உடையவர்.

* மூஷிக வாகனன்:

மூஷிகத்தை (எலியை) தனது வாகனமாகக் கொண்டவர்.

* ஐங்கரன்:

தும்பிக்கையையும் சேர்த்து ஐந்து கரங்களை அதாவது கைகளை உடையவர்.

* பாலச்சந்திரன்:

தலையில் பிறை நிலவை அணிந்தவர்.

* தூமகேது:

புகைக் கொடியை உடையவர்.

* வக்ரதுண்டன்:

வளைந்த தும்பிக்கையை உடையவர்.

* சுமுகன்:

அழகான முகம் கொண்டவர்.

* ஹேரம்பன்:

பலவீனமானவர்களைக் காப்பாற்றும் தாய் போன்ற அன்பானவர்.

இதையும் படியுங்கள்:
ஏன் விநாயகரை முதலில் வணங்குகிறோம்? தும்பிக்கை முதல் தந்தம் வரை உணர்த்தும் விநாயகர் தத்துவம்!
விநாயகர் கொழுக்கட்டை - Ganesha Secrets

* சூர்ப்பகர்ணன்:

பெரிய முறத்தைப் போன்ற காதுகளை உடையவர். அதாவது பக்தர்களின் பிரார்த்தனைகளை உன்னிப்பாக கேட்பவர் என்பதை இது உணர்த்தும்.

இந்தப் பெயர்கள் விநாயகப் பெருமானின் வெவ்வேறு குணங்களையும், அம்சங்களையும் விவரிக்கின்றன. கஜானனன் என்பது யானை முகத்தையும், லம்போதரன் என்பது பெரிய வயிற்றையும், ஏக தந்தன் என்பது ஒற்றைத் தந்தம் கொண்ட இறைவன் என இப்படி அவரின் குணங்களையும் அம்சங்களையும் விவரிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com