விநாயகர் (அல்லது பிள்ளையார்) இந்து சமயத்தில் மிகவும் பரவலாக வணங்கப்படும் முதன்மைக் கடவுள் ஆவார், இவர் கணபதி, ஆனைமுகன், விக்னேஸ்வரர் (தடைகளை நீக்குபவர்), கணபதி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
தன்னை வழிபடுவோரின் விக்கினங்களை அதாவது இடையூறுகளைப் போக்குவதால் விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் அனைத்து கணங்களுக்கு தலைவராயிருப்பதால் கணநாதன் மற்றும் கணபதி என்றும் அழைக்கப்படுகிறார்.
யானை முகமும், மனித உடலும் கொண்ட இவர், தடைகளை நீக்கி, நற்பலன்களைத் தருபவராக அனைவராலும் வழிபடப்படுகிறார். அதாவது யானை முகம் (ஞானம்), பெரிய காதுகள் (அதிகமாக கேட்பது), மற்றும் ஒரு கொம்பு உடைந்த தோற்றம் (தியாகம்) ஆகியவை இவரது சிறப்பம்சங்களாகும்.
கணபதி தரிசனம் என்பது விநாயகரை மனதார வணங்கி, தடைகளை நீக்கி, சுபிட்சம் பெறச் செய்யும் ஒரு புனிதமான வழிபாடாகும். காலை எழுந்தவுடன் விநாயகரைத் தரிசிப்பது, அன்றைய நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலைத் தரும்.
தினமும் அல்லது விநாயகருக்கு உகந்த நாட்களில் விநாயகர் அகவல், கணபதி சுப்ரபாதம் போன்றவற்றை ஓதி, அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு.
விநாயகர் இன்னல் நீக்கும் இறைவன் என வேதங்களாலே போற்றப்பட்டவர். ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரம், வளர்பிறை நான்காம் (சதுர்த்தி) நாள் அன்று விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஆண்டுதோறும் இந்த தினம் விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி "சங்கடஹர சதுர்த்தி" எனப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் கணபதியை தரிசிப்பது, சங்கடங்களைத் தீர்த்து, திடீர் அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் விநாயகரை வணங்குவதன் மூலம் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.
வழிபாடு, பூஜை, ஹோமம், யாகம் என எந்த இறைச்செயலைத் தொடங்குவதாக இருந்தாலும், முதலில் முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்டுவிட்டே தொடங்குவது அவசியம். அதாவது, எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன், தடைகள் நீங்க விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவது வழக்கம். அதனால்தான் விநாயகரை பூஜை அறையில் மட்டுமல்லாமல், வீட்டின் பல இடங்களில் வைத்து வணங்குகிறோம். எல்லா ஊர்களிலும் விநாயகர் கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன.
சிவன் மற்றும் பார்வதியின் புதல்வரான இவர், அறிவு, ஞானம் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார்.
ஈசனின் திருமகனாகவும், முருகக் கடவுளின் அண்ணனாகவும், அம்மை சக்தியின் செல்லப் பிள்ளையாகவும், சைவம், கௌமாரம், சாக்தம் என மூன்று வழிபாட்டு முறைகளிலும் கொண்டாடப்படுகிறார் விநாயகர்.
வைணவ சம்பிரதாயத்திலும் வெகுவாகக் கொண்டாடப் படுகிறார் விநாயகர். வைணவர்களின் முக்கியக் காவியமான மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல எழுதிக் கொடுத்தவர் விநாயகர். எழுதும்போதே எழுத்தாணி உடைந்ததால், தனது வலது தந்தத்தையே உடைத்து எழுதினார். இதனால் ‘ஏகதந்தர்’ என்றும் அழைக்கப்படுகிறார் கணபதி.
விநாயகர் தமது தாய்-தந்தையரை அன்புடன் வழிபட்டதால் ‘பிள்ளை’ என்ற பெயருடன் ‘ஆர்’ என்ற மரியாதை அடைமொழி சேர்த்து ‘பிள்ளையார்’ என்று பெயர் பெற்றார்.
‘கணபதி’ என்கிற வார்த்தையில் ‘க’ என்பது ஞானத்தைக் குறிக்கிறது, ‘ண’ என்பது மோட்சத்தைக் குறிக்கிறது, ‘பதி’ என்னும் பதம் ‘தலைவர்’ என்று அர்த்தம் தருகிறது. ஞானத்தையும், மோட்சத்தையும் நமக்கு அளிக்கும் தலைவர், விநாயகர்.
மற்ற கடவுள்களைவிட விநாயகர் முந்தி வந்து பலன்களைத் தருபவர். அதனால்தான் அவரை, ‘முந்தி நாயகர்’ என்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள திலதர்ப்பணப்புரியிலுள்ள சிவாலயத்தில் தனிச் சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனிதமுக விநாயகர் தரிசனம் தருகிறார்.