
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனி பகவான் தொல்லை செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமை அன்று சிவாலயங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால் சனி தோஷம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது, கடன் வாங்கவும் கூடாது. ஆனால், தர்மம் நிறைய செய்யலாம். அன்று காகத்திற்கு எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
சனி திசை, சனி புத்தி நடக்கும் காலத்திலும் கோச்சார ரீதியாக சனி பகவானின் ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி காலத்திலும் சிலருக்கு சனி பகவானால் பாதிப்புகள் ஏற்படும். சனி பகவானின் பாதிப்புகள் நீங்க சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
சனி பகவான் எல்லோருக்கும் சங்கடங்களைத் தருவதில்லை. நேர்மையானவர்களுக்கு சில சோதனைகளை கொடுப்பார். அது கூட பலரது உண்மை முகத்தை உணர வைக்கத்தான். சனி பகவானின் சங்கடங்கள், பாதிப்புகளில் இருந்து விடுபட புரட்டாசி சனிக்கிழமை அன்று சனி பகவானை வணங்கினாலே போதும்.
எள் சாதம் வைத்து தினமும் சனி பகவானை துதிப்பவர்களை சனி பகவான் நெருங்குவதில்லை. அதேபோல், ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்ர ப்ரியரான சனி பகவான் காப்பர்.
பாவ வினைகளுக்குப் பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அனைத்து வகையான தோஷங்களையும் போக்குவது பிரதோஷம். அதைத் தடையின்றி செய்பவர்களை சனி பகவான் தண்டிப்பது இல்லை.
கருப்பு காராம் பசுவின் பால், நெய், தயிர் கொண்டு பூஜிப்பவர்களை சனி பகவான் மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
காகத்திற்கு சாதம் அளிப்பவர்கள் புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் பித்ரு கடனை சரிவர செய்பவர்களை சனி பகவான் எந்தக் கெடுதலும் செய்யாமல் பாதுகாப்பார். தன்னுடைய இடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்பவர்களை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். அவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை.
சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மகாலட்சுமி என்பார்கள். அந்தத் திருமகள் இருக்கும் இடத்தை சனி பகவான் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. அதாவது, சத்தியம் தவறாதவர்களை சனி பகவான் ஒருபோதும் பாதிப்பதில்லை. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை.
சனிக்கிழமை விரதம் இருப்பதும், சுதர்சன இயந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்குப் பிடித்தமான ஒன்றாகும். ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பவர்களையும் சிவபெருமானின் ‘நமசிவாய’ எனும் நாமத்தை உச்சரிப்பவர்களையும் ச னி பகவான் பாதிப்பதில்லை.
பெருமாளுக்கு உரிய கிரகமான புதன், கன்னி ராசியில் போவதும் புரட்டாசியில்தான் நடக்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசிக்குப் போகிறது. புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம் அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார். ஆகவேதான், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவம் சாப்பிடாமல் இருந்தால் சனி பகவானின் கோபமான பார்வையிலிருந்து தப்பிக்கலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தின் ஆதிக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும்.
சனி பகவானின் சன்னிதியில் நின்று வழிபடும்போது நேரில் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்கம் ஓரத்தில் நின்று வழிபட வேண்டும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து வர வேண்டும். ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புகளுக்கு உணவாகப் போட்டால் சனி பகவான் மிகவும் சந்தோஷப்பட்டு நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் நம்மைக் காத்தருள்வார்.