
உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் பட்கல் தாலுகா முருதேஸ்வர் கடற்கரையில் பிரசித்திபெற்ற முருதேஸ்வர் சிவன் கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வர்” என அழைக்கப்படுகிறார். கந்துக கிரி மலையின் மீது அமைந்துள்ள இந்த கோவிலின் சிறப்பம்சம் இங்குள்ள சிவன் சிலை. இந்த சிலை 123 அடி உயரம் கொண்டது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டது. காலை நேர சூரிய ஒளி சிலையின் மீது படும்போது, அது மின்னும் வகையில் கண்கொள்ளக்காட்சியாக இருக்கும். இந்த சிவன் சிலை, உலகின் மூன்றாவது உயரமான சிவன் சிலையாகும். மேலும் இங்குள்ள பசுமையான தோட்டத்தில் தேருடன் சித்தரிக்கப்பட்டுள்ள கீதோபதேசத்தின் ஒரு பெரிய சிலையும் உள்ளது.
சிவன் சிலைக்கு பின்னால் கடற்கரை உள்ளதால் அந்த கண்கொள்ளா காட்சியை காணவும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவும் கர்நாடகம் மட்டுமின்றி அனைத்து மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருவது உண்டு.
கோவிலின் மூன்று பக்கங்களிலும் அரபிக் கடல் இருப்பதால் கோவிலின் காட்சி இன்னும் அழகாகவும் அமைதியாகவும் தெரிகிறது. இந்த கோவிலின் நுழைவாயிலில் 249 அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது.
இந்த கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் மலையின் அடிவாரத்தில் உள்ள ராமேஸ்வர லிங்கத்திற்கு பக்தர்கள் பூசாரி இல்லாமல் தாங்களாகவே சடங்குகளைச் செய்யலாம்.
இந்த கோவில் நடை அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.00 மணிவரையிலும், மதியம் 3.00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அதுமட்டுமின்றி கோபுர லிஃப்ட் இந்த நேரத்தில் மட்டுமே செயல்படும் என்பதால், கோவில் பகுதியை இந்த நேரத்தில் பார்வையிடுவது சிறந்தது.
இந்த நிலையில் முருதேஸ்வர் சிவன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவிலின் முன்பக்க வாயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், ஆண்கள் வேட்டி அல்லது முழு நீள பேண்ட் அணிந்தும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்தும் வர வேண்டும். இதை மீறுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகள் முருதேஸ்வர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து முருதேஸ்வர் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.