வேடர் குல மகள் வள்ளிக்கு சிறப்பு சேர்க்கும் முருகத் தலங்கள்!

Sri Valli with Murugaperuman
Sri Valli with Murugaperuman
Published on

ரு சமயம் மகாலட்சுமி தாயார், கண்ணுவ முனிவரின் சாபத்தால் மான் வடிவை அடைந்தாள். இதனால் மகாலட்சுமியை மான் வடிவில் ‘ஹரிணி’ என்ற பெயரில் பக்தர்கள் போற்றுகின்றனர். மான் செல்வத்தின் அடையாளம் என்பதால்தான் செல்வந்தர்களை ‘ஸ்ரீ மான்’ என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

மகாலட்சுமி பிராட்டி மான் வடிவில் பல இடங்களில் திரிந்த பின்னர், திருமால் யோக மூர்த்தியாக அமர்ந்திருந்த பர்ணசாலைக்கு வந்தாள். அவளைக் கண்ட திருமால் அன்புடன் பார்த்தார். அந்த மான் கருவுற்றது. கருவுற்ற அம்மான், வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் குழந்தையை இட்டது. வேடர்கள், அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தனர். வள்ளி என்ற பெயரில் வளர்ந்த அந்தப் பெண் தவம் செய்து, முருகனை மணந்தாள் என்கிறது ஒரு வரலாறு.

ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் வள்ளிமலை கோயில் உள்ளது. முருகப்பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இவ்விடத்திற்கு வள்ளிமலை என பெயர் வந்தது. வள்ளி இந்த ஊரில் பிறந்து வளர்ந்ததும் வள்ளிமலை என பெயர் பெறக் காரணமாகும். கோயிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. குமரி வள்ளிக்கு தனி சன்னிதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்டப் பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். இங்கு மட்டுமே வள்ளியை குமரி கோலத்தில் தரிசிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
சமூகத்தில் புகழ், மதிப்பை பெருக்கும் கந்த சஷ்டி கவச பாராயணம்!
Sri Valli with Murugaperuman

ற்ற கோயில்களில் முருகன் குன்றின் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குகை அமர் குமரன் கோயிலில் குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம். இங்கு சுப்பிரமணியர் என்பது முருகனுக்குப் பெயர். வள்ளிக்கு, தெய்வானைக்கு தனிச் சன்னிதி உண்டு. முருகனுடன் தெய்வானை மூலவராக இருப்பார். ஆனால், விழாக்காலங்களில் சுவாமியுடன் வீதி உலா செய்ய வள்ளி மட்டும்தான் செல்வார். வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு புறமுள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

வேலூர், சத்துவாச்சாரிக்கு அருகிலுள்ள புதுவசூர் மலை மீது அமைந்திருக்கிறது ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு 222 படிகள் ஏறினால் முருகனை தரிசிக்கலாம். வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது. வள்ளிக்கும், முருகனுக்கும் இங்கு சம உயரத்தில் சிலை அமைந்துள்ளது அபூர்வமானது. காதலித்து மணந்த வள்ளிக்கு சம அந்தஸ்து தரவே இப்படி என்கிறார்கள். அதேபோல், இங்குள்ள தெய்வானை சிலை சற்று உயரம் குறைந்தே உள்ளது.

இதையும் படியுங்கள்:
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அவசியம் அறிய வேண்டிய 6 முக்கிய விரதங்கள்!
Sri Valli with Murugaperuman

சென்னை, தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. சோழ மன்னர் இரண்டாம் குலோத்துங்க சோழனால் இந்த கோயில் கட்டப்பட்டது. இங்கு ஒரு சிறிய மலையில், 84 படிகளுடன், மலை உச்சியில் சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு கோயில் உள்ளது. தமிழ் நாட்டில் வடக்கு நோக்கி இருக்கும் ஒரே முருகன் கோயில் இதுதான். இந்தக் கோயிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், முருகப்பெருமானுடன் வள்ளி மற்றும் தெய்வானை இருந்தாலும், முருகப்பெருமானை ஒரு நேரத்தில் வள்ளி அல்லது தெய்வானையுடன் மட்டுமே தரிசிக்க முடியும். ஒரு பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, வள்ளியுடன் முருகனையும், மறுபுறம் இருந்து பார்க்கும்போது, தெய்வானையுடன் முருகனையும் தரிசிக்கலாம். நேராக நின்று பார்த்தால் முருகனை மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்தில் 10 நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். இங்கு 7ம் நாளில் வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இங்கு தனிச் சன்னிதியில் முருகப்பெருமானும் தெய்வானையும் நின்றிருக்க வள்ளியம்மை மட்டும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கோடீஸ்வர யோகம் தரும் மகாலட்சுமியின் பஞ்ச திருநாமங்கள்!
Sri Valli with Murugaperuman

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் உள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு வள்ளி, முருகனை திருமணக் கோலத்தில் தரிசிக்கலாம். அதில் வள்ளி லேசாக முன் சாய்ந்து ஒரு கண் மூடிய நிலையில் நின்ற கோலத்தில் காணலாம். மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வேறு எங்கும் காண இயலாது. வள்ளியும் முருகப்பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.

திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்துள்ளது சிவந்தியப்பர் கோயில். இக்கோயில் பிராகாரத்தில் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்ளார். பொதுவாக, முருகப்பெருமானுடன் இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும், முருகருக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருந்து பக்தர்களை பார்ப்பது போல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோயிலில், முருகப்பெருமானுக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும்படியாக, நின்றபடி அருள்பாலிக்கின்றனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com