திருச்செந்தூர் சண்முகர் முகத்தில் அம்மைத் தழும்பு!

Tiruchendur Shanmugar
Tiruchendur Shanmugar
Published on

திருவனந்தபுரத்தில் அரசராக இருந்த மார்த்தாண்ட மகாராஜா, திருவனந்தபுரத்தில் இருந்த சண்முகரை வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில், திருச்செந்தூரில் வசித்து வந்த திரிசுதந்திர முக்காணி பிரமணர்களுக்கும், திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும், திருமண வழியில் நெருங்கிய உறவு இருந்தது. அதனால், திருவனந்தபுரம் சென்று வந்து கொண்டிருந்த திருச்செந்தூர் திருசுதந்திரர்கள் அங்கிருந்த சண்முகரைக் கண்டனர். அந்தச் சண்முகரின் அழகில் மயங்கிய அவர்கள், அந்தச் சண்முகரை எப்படியாவது திருச்செந்தூர் கோவிலுக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டுமென்று முடிவு செய்தனர்.

அவ்வேளையில் முருகப் பெருமானும், தன்னுடைய சண்முகர் திருமேனியை திருச்செந்தூருக்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார். அந்தச் செயலை எப்ப்படியாவது நிறைவேற்றி விட வேண்டுமென்று நினைத்த திருசுதந்திரர்கள், திருவனந்தபுரத்தில் வணிகத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பரக்கச் செட்டியார் சமூகத்தினரின் உதவியை நாடினார்கள். வணிகர்களும் திருசுதந்திரர்களுக்கு உதவ முன் வந்தனர். ஒரு நாள் இரவு, ஒரு மூங்கில் கம்பில் துணியைக் கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து, அதில் சண்முகரைக் கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்தூரை நோக்கிப் புறப்பட்டனர்.

சண்முகரைத் தூக்கிக் கொண்டு சென்ற திரிசுதந்திர்களையும், பரக்கச் செட்டியார் சமூகத்தினரையும் வழியில் திருவிதாங்கூர் சுங்கச் சாவடியில் காவலர்கள் தடுத்தனர். உடனே, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கிறது என்றும், அதனைக் குணப்படுத்த பாண்டி நாட்டு வைத்தியரிடம் கொண்டு போகிறோம் என்றும் பொய் சொல்லினர். அங்கிருந்த காவலர்கள், அம்மை என்ற உடன், அந்த ஊஞ்சலைத் திறந்து பார்க்க அச்சப்பட்டு, அவர்களை மேற்கொண்டு விசாரிக்காமல் அனுப்பி விட்டனர். எல்லைக் காவலர்களிடமிருந்து தப்பித்த அடியவர்கள், அங்கிருந்து விரைவாக நடந்தனர்.

அதே வேளையில், திருவனந்தபுரத்திலிருந்த சண்முகர் சிலையைக் காணவில்லை என்பதை அறிந்த மார்த்தாண்ட மகாராஜா மிகவும் பதட்டம் அடைந்தார். தன்னுடைய படையினரை அனுப்பி நான்கு திசைகளிலும் சண்முகர் சிலையைத் தேடச் சொல்லி உத்தரவிட்டார். அன்று இரவு மகாராஜா கனவில் வந்த சண்முகர், என் குழந்தைகள், என் விருப்பப்படி என்னைத் திருச்செந்தூருக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தடுக்க வேண்டாம். நீ என்னைக் காண விரும்பினால், திருச்செந்தூருக்கு வா என்று கட்டளையிட்டார். அதனைக் கேட்ட மன்னர், சிலையைத் தேடி அனுப்பிய படையினரைத் திருவனந்தபுரத்திற்குத் திரும்பி வரும்படிக் கட்டளையிட்டான்.

சண்முகரைச் சுமந்து செல்லும் அடியவர்கள், கடற்க்கரை ஒட்டிய அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்த போது, பொழுது விடிந்துவிட்டது. அந்த இடத்தில் சண்முகருக்கு நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, அவர் பசிக்கு நிவேதனம் செய்ய ஏதாவது கிடைக்குமா? என்று தேடினார்கள்.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் செந்திலாண்டவருக்கு எதிரே நந்தியும், இரண்டு மயில்களும் இருப்பது ஏனென்று தெரியுமா?
Tiruchendur Shanmugar

அந்தக் காட்டுப் பகுதியில், குடிசையில் ஒரு வயதான பெண் வசித்து வந்தாள். அவள் காலை உணவு தயாரிக்கப் புளித்த மாவும், பயறுக் கஞ்சியும் வைத்திருந்தாள். உடனே, சண்முகரின் அடியவர் கூட்டம் அந்த பெண்மணியிடம் வேண்டி, சண்முகருக்கு புளித்த தோசையும், கஞ்சியும் நைவேத்தியமாக படைத்து பூஜை செய்தார்கள். அன்று படைக்கப்பட்ட நிவேதனம்தான் தற்போதும் சண்முகருக்குப் படைக்கப்பட்டு வருகிறது. ஆம், திருச்செந்தூர் கோவில் உதயமார்தாண்டக் கட்டளையில், ஒரு நாள் முன்பே அரைத்தப் புளித்த தோசை, பயறு கஞ்சி என சண்முகருக்கு தினமும் நிவேதனம் செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற சண்முகர், திருச்செந்தூர் கோயிலில் இருக்கும் ஐந்து உற்சவர்களில் முதல்வராக இருக்கிறார். அன்று, திருவாங்கூர் எல்லைக்காவலில் இருந்தவர்களிடம் திரிசுதந்திரர்களும், பரக்கச் செட்டியார் சமூகத்தினரும், அவர்களிடமிருந்து சண்முகரைக் காக்க, அம்மை என்று பொய் சொன்னதால், சண்முகரின் முகத்தில் உருவான அம்மைத் தழும்பு இன்றும் மறையாமல் அவரிடம் இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com