
வைணவத் தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோயிலில் மட்டுமே அமைந்துள்ளது மூச்சு விடும் காலபைரவர் சன்னிதி. திருக்குறுங்குடி நம்பி கோயில் பிராகாரத்தை சுற்றிவரும்போது பிரம்மாண்ட உருவத்தில் காலபைரவர் காட்சி தருகிறார். பொதுவாக, சிவன் கோயில்களில்தான் காக்கும் தெய்வமாக காலபைரவர் காட்சி தருவார். இரவில் கோயில் நடை சாற்றிய பிறகு சாவியை காலபைரவரிடம் ஒப்படைத்துவிட்டு, மறுநாள் காலை அவரிடமிருந்து சாவியைப் பெற்று கோயிலை திறப்பது இக்கோயிலில் உள்ள நடைமுறை. அந்த வகையில் இங்குள்ள பெருமாளுக்கு காலபைரவர் காவல் பணிபுரிகிறார்.
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில்தான் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இங்கு காவல் பொறுப்பை மேற்கொள்கிறார் என்கிறார்கள். திருக்குறுங்குடி நம்பிகளை தரிசனம் செய்வது வெறும் அர்ச்சாவதார தரிசனமாக இருக்காது. பெருமாளை உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக தரிசிப்பதாகவே இருக்கும்.
தீபாராதனை தட்டு பெருமாளின் முகத்தருகே கீழிருந்து மேல் என்றும், மேலிருந்து கீழ் என்றும் போகும்போது பெருமாளின் விழிகள் அந்தந்த திசை நோக்கி அசைவதைப் போன்ற ஒரு உணர்வை நாம் பார்த்து உணர முடியும். மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வாகும் இது.
இக்கோயிலின் உள்ளேயே சிவன் மற்றும் பைரவர் சன்னிதிகள் இருப்பது மிகச் சிறந்த அம்சமாகும். கோயில் மூலவர் நம்பிக்கு பூஜை நடக்கும்போது இங்குள்ள சிவனுக்கு பூஜை நடந்துவிட்டதா என்பதை அறிய சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பரிடம், ‘குறையேதும் உண்டா?’ என்று பட்டர் கேட்பார். அதற்கு, ‘குறை ஒன்றும் இல்லை’ என பட்டர் பதில் அளிப்பார். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.
திருக்குறுங்குடி தீபாராதனையின் ஒளிமாயமோ, சிற்பியால் வடிவமைக்கப்பட்ட அந்தக் கண்களின் பளபளப்பு மாயமோ, எதுவாக இருந்தாலும் அந்தப் பார்வை அதிசயமானதுதான். விழியசைத்து வியப்பளிக்கும் திருக்குறுங்குடி பெருமாள் போலவே, இத்தல காலபைரவரும் தனது மூச்சிழையால் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்.
காலபைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் ஒரு விளக்கு, கீழ்பகுதியில் ஒரு விளக்கு உண்டு. இவை தவிர இரண்டு சரவிளக்குகளும் உண்டு. இதில் அதிசயம் ஏன்னவென்றால் மேலே உள்ள விளக்கின் ஜுவாலை காற்று பட்டால் அசையும். ஆனால், பிற மூன்று விளக்குகளும் எந்த சலனமும் இல்லாமல் எரிகின்றன. மேல் விளக்கு ஜுவாலை மட்டும் அசைவானேன்? அது பைரவரின் மூச்சுக் காற்று பட்டு ஏற்படுத்தும் அசைவு. மூச்சு இழுக்கும்போது ஜுவாலை அவரை நோக்கி திரும்பியும், மூச்சை விடும்போது எதிர் திசையில் அசைவதையும் காணலாம்.
விஞ்ஞானபூர்வமாக இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க இயலாத தெய்வீகம் இது. இவருக்கு வடைமாலையும் பூச்சட்டையும் மாற்றுவது வழிபாடாக உள்ளது. மிகப்பெரியதாக ஒரே வடை தட்டி அதை நிவேதனம் செய்வார்கள். இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும் 25 சதவீதம் சுதையாகவும் ஆன சிற்பமாகத் திகழ்கிறார். திருமண வரம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி இவர் ஆசிகளைப் பெற்று பலன் அடைகிறார்கள் பக்தர்கள்.