

ஆண்டுக்கு ஒரே ஒரு நாளில், அதாவது மகர சங்கராந்திக்கு மட்டுமே திறக்கப்படும் ஒரு வினோதமான கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அஜய்கர் கோட்டையில் உள்ள இந்தக் கோயிலில் நிரந்தரமான சிலைகள் எதுவும் இருக்காது. மகர சங்கராந்திக்காக மட்டும் ரேவா அருங்காட்சியகத்தில் இருந்து பாபா அஜய்பால் சிலை கொண்டு வரப்பட்டு வழிபடப்படுகிறது.
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் அஜய்கர் கோட்டையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த இக்கோயிலை தரிசனம் செய்வதற்காக வெகு தொலைவில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகை தருகிறார்கள். சந்தேலர்களால் 9ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரே ஒரு நாள் வழிபாட்டிற்காக கொண்டு வரப்படும் இந்த சிலை, மதச் சடங்குகள் முடிந்த பிறகு மீண்டும் அருங்காட்சியகத்திற்கு திருப்பிக் கொண்டு செல்லப்படுகிறது. இக்கோயிலில் சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் இருப்பதாகவும், மர்மமான கோயிலாகவும் இது பார்க்கப்படுகிறது.
உலகிலேயே சூரியனுக்கான மிகவும் பழைமையான சன்னிதி: தஞ்சையை அடுத்த திருக்கண்டியூர் ஆலயத்தில் கல்ப சூரியனை தரிசிக்கலாம். சூரியனுக்கான சன்னிதிகளுள் இந்த சன்னிதியே உலகில் மிகவும் பழைமையானது. தை முதல் நாள் இத்தல சூரியனை வணங்குதல் சிறப்பானது. இதனால் நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் கூடும் என்பது நம்பிக்கை.
முறை ஜபம் விழா: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 6 வருடத்திற்கு ஒருமுறை 'முறை ஜெபம்' என்னும் விழா நடைபெறும். அந்த சமயத்தில் வரும் சங்கராந்தி அன்று கோயிலில் 'லட்ச தீப விழா' நடத்தப்படும். ஆலயத்தின் எல்லா புறங்களிலும் கோபுரம், சுற்றுப்புறம், உள்ளே, வெளியே என எங்கும் தீபம் ஒளிரும். அத்துடன் மகர சங்கராந்தியான அன்று கருட வாகனத்தில் சுவாமி உலா வருவதும் உண்டு. அன்று பத்மநாப சுவாமியை தரிசிக்க திருவனந்தபுரம் மகாராஜா குடும்பத்தினர் வருகை தருகிறார்கள்.
மாட்டுப் பொங்கலன்று திருவூடல் விழா: மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலையில் தெற்கு ரத வீதியில் திருவூடல் விழா நடைபெறும். அன்று அதிகாலையில் அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் கிரிவலம் வந்து மதியம் 2 மணி வாக்கில் தெற்கு ரத வீதியான திருவூடல் வீதி எழுந்தருள்வார்கள். அப்போது அம்பிகை கோபம் கொண்டு முன்னும் பின்னுமாக மூன்று முறை சென்று பின்பு வேகமாக ஆலய கருவறையில் நுழைந்து தாளிட்டுக் கொள்ளும் வைபவம் நடைபெறும்.
அதன் பின்னர் சுந்தரர் தூது சென்று அம்மையை சமாதானப்படுத்தி அம்மையும் அப்பனுமாகக் காட்சி தருவார்கள். இந்நிகழ்ச்சி முடிய இரவு வெகு நேரம் ஆகிவிடும். அதன் பிறகு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படும். இந்த விழாவை தரிசிப்பது தம்பதியர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.