
ஐயங்கார் குளம் நடவாவி கிணறு என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பழமையான வித்தியாசமான கிணறாகும். இது சஞ்சீவிராய ஸ்வாமி கோவில் அருகே அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்கு முன்பாக ஒரு தோரண வாயில் உள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது.
48 படிகளையும், அதற்குள் மண்டபத்தையும் கொண்ட சிறப்பு வாய்ந்த நடவாவி கிணறு இது. இதைப் போன்ற கிணற்றை தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாது.
நடவாவி கிணற்றின் சிறப்புகள்:
கிணற்றுக்கு முன்பாக கல்லால் செய்யப்பட்ட தோரணவாயிலும், அதன் உச்சியில் கஜலட்சுமி உருவம் மற்றும் தூணின் இருபுறமும் வீரர்கள் அமர்ந்த யாளியின் உருவங்களும் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சித்ரா பௌர்ணமி விழா:
சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சி வரதராஜ பெருமாள் இந்த குளத்தில் உள்ள மண்டபத்தில் வந்து மூன்று முறை வலம் வருவார். பின்னர் கோவில் கிணற்று நீரில் வரதராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அடுத்த நாள் கோயிலில் இருந்து ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர் இந்த கிணற்றுக்கு வந்து செல்கின்றனர். அதன் பிறகு உள்ளூர் பக்தர்கள் இந்த கிணற்றில் புனித நீராடுகின்றனர்.
சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர் கிணற்றை மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றுக்கும் நான்கு திசையிலும் தீபாராதனை நடைபெறும். அதாவது 12 முறை தீபாராதனை நடைபெறுவது வழக்கம். சித்ரா பௌர்ணமிக்கு பிறகு 20 நாட்கள் வரை இந்தக் கிணற்றை முழுமையாக நம்மால் பார்க்க முடியும். அத்துடன் நீராடி மகிழவும் முடியும். மற்ற நாட்களில் படிக்கட்டுகள் வரை நீர் நிரம்பி இருக்கும்.
பதினாறு கால் மண்டபம்:
கிணற்றுக்குள் செல்ல தரையில் இருந்து படிக்கட்டுகளுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதை வழியே இறங்கிச் சென்றால் மண்டபம் ஒன்றைக் காண முடியும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லாலான பதினாறு கால் மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்குள் ஒரு கிணறு உள்ளது. இதுதான் சிறப்புமிக்க நடவாவி கிணறு.
சுரங்கம் போன்ற பாதை:
கிணற்றுக்கு தரை மட்டத்திலிருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை அமைந்துள்ளது. கிணற்றுக்கு கீழே செல்ல 48 படிகள் உள்ளன.
சுமார் 130 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்டமான சஞ்சீவிராய சுவாமி கோவில் குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வாவி என்றால் கிணறு என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறாக அமைந்திருக்கிறது. இங்கே தரைத்தளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி 27வது படி வரை செல்ல முடியும். இந்த படி எண்ணிக்கை 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்குள் 12 தூண்களைக் கொண்ட அழகிய மண்டபமும், அந்த மண்டபத்திற்குள் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் மொத்தமாக 48 படிகள் உள்ளன. இவை ஒரு மண்டலத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
12 தூண்களிலும் பெருமாளின் அவதாரங்கள் சிறிய அளவில் மிக அழகாக நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கிணறு ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி இருக்கும். சித்ரா பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்பு நடவாவி கிணற்றில் உள்ள நீரை இறைத்து விடுவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இந்த கிணற்றில் இறங்கி அருள் புரிவார். பின்னர் கிணற்றில் ஊற்றெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நீர் நிரப்பி விடும்.