

நாக தோஷம் என்பது ஜோதிடத்தில், ஒருவருக்கு ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் ஒரு பாதிப்பை குறிப்பதாகும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணத் தடை, குழந்தையின்மை, தொழில் மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமணம் சரியான காலத்தில் நடக்காமல் அவதிப்படுவதும், திருமணம் நடந்தும் குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
ஜாதகத்தில் சில கிரகங்களின் நிலை சரியில்லாமல் இருப்பதாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும் நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றன. அப்படியான ஒரு தோஷம் தான் நாக தோஷம். ஏதேனும் ஒரு ஜென்மத்தில் நாமோ அல்லது நம் முன்னோர்களோ தெரிந்தோ தெரியாமலோ பாம்பிற்கு தீங்கு விளைவித்திருந்தால் அந்த தோஷம் பல தலைமுறைக்கும் தொடருமாம். பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள்.
இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கும் நாகத்திடம் மன்னிப்பு கேட்பதற்கும் ஆடி மாதம் வளர்பிறையில் வரும் நாக சதுர்த்தி நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து அரச மரத்தடியில் நாகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷங்கள் அகலும். நாகத்தைப் பிரதிஷ்டை செய்ய முடியாதவர்கள் நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து பாம்பு புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
நாகதோஷத்திற்கு பரிகாரங்கள் செய்யும்போது மன தூய்மையுடன் மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் நாள் அன்று சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், சந்தோஷமான மனநிலையில், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
* நாகதோஷம் உள்ள ஜாதகக்காரர்கள், தினமும், அவர்கள் ஆயுள் முழுவதும் ராகு காயத்ரியையும், கேது காயத்ரியையும் தங்களால் முடிந்த அளவுக்கு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
* கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு சென்று வணங்கி வருவது நாக தோஷங்களின் வீரியத்தை குறைக்கும் பரிகாரமாகும். மாதம் ஒருமுறை இந்த கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது நாகதோஷத்தால் ஏற்படும் தடைகளை நீக்கும்.
* நாகதோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் ஆண் பாம்பும் பெண் பாம்பும் அல்லது நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரச மரமும், வேப்ப மரமும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி நூலில் கூறப்பட்டிருக்கிறது.
* தங்கம் அல்லது வெள்ளியால் சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பத்தி எட்டு நாள்கள் அசைவம் சாப்பிடமால் விரதம் இருந்து சிரத்தையுடன் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு, தாம்பூலம், தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
* வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும். பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம்.
இதனால் திருமண தடை நீங்கி விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். இந்த பரிகாரத்தை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
* ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமையில் செய்வதே சிறப்பானது. .