

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகே உள்ளது நம்பள்ளிகுட்டா (Nampally Gutta) என்ற ஊர். இங்கு வெமுலாவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக ஒரு சிறிய குன்றின் மீது பிரம்மாண்டமான சுருண்ட பாம்பு வடிவில் கட்டப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த மலைக் கோவிலின் நுழைவு வாயில் பாம்பின் (சேஷன்) வால் பகுதியிலும், பிரகலாதனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் சுரங்கப் பாதை பாம்பின் வயிற்றுப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு பாம்பு வடிவத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் போன்று இந்த நாகதேவதை கோவில் அமைந்திருக்கிறது. இது பக்த பிரகலாதன் நரசிம்மரை நோக்கித் தவமிருந்த இடமாகக் கருதப்படுகிறது. மேலும், கோவிலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமான ஐந்து தலை நாகத்தின் உருவம் உள்ளது.
பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து நாகதேவதை கோவில் ஆரம்பமாகிறது. அதற்கு முன்பாக தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற அழகான சிற்பம் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.
வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம், சிமெண்டால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாம்பின் வயிற்றுப்பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. அப்படி பாம்பின் வடிவத்துக்குள் நுழைந்ததும் பக்த பிரகலாதனின் முழுமையான வாழ்க்கை சரித்திரம், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும் அழகை காணலாம். அதாவது பிரகலாதன் பிறந்தது முதல் சிறந்த விஷ்ணு பக்தனாக திகழ்ந்ததை காட்டும் விதமாக பல்வேறு சிற்பங்கள் உள்ளன.
இரண்யகசிபு பிரகலாதன் தனது மகன் என்றும் பாராமல் அவனை கொல்வதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பக்த பிரகலாதன் பிறந்தது முதல் விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர், இரண்ய கசிபுவை வதம் செய்வது போன்ற சிற்பம் உண்மையான நரசிம்மர் வெளிவந்து ஆக்ரோஷமாக இருப்பதுபோல் அழகுற வடித்து வைக்கப்பட்டுள்ளன. நாகதேவதையின் பழமையான சிற்பங்களும் ஆங்காங்கே உள்ளன.
நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இது நீதி தவறியவர்கள், அக்கிரமம் செய்பவர்கள் போன்ற அனைவருக்கும் இறுதியில் அழிவு தான் ஏற்படும் என்பதை கூறும் விதமாக உள்ளது.
பாம்பு வடிவத்துக்குள் நுழையும் பக்தர்கள் சூரிய வெளிச்சம், காற்று கிடைப்பதற்காக அந்த சிலையின் உடல் பகுதியில் ஆங்காங்கே ஜன்னல் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாகர் வடிவ கோவிலை விட்டு வெளியே வந்ததும், லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் பாதை தொடங்குகிறது. இது சில நூறு செங்குத்தான படிகளை கொண்டதாக இருக்கிறது.
மலையின் மீது சிறிய கோவிலாக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் முன்பாக கொடிமரம் உள்ளது. அதன் அருகில் இடதுபுறம் சுமார் 20 அடி உயரத்தில் ஒரு சிறிய கல்தூண் நிற்கிறது. அந்த தூணின் உச்சியில் சிறிய தட்டு ஒன்று வைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கீழே நின்றபடி அந்த தூணின் உச்சியை நோக்கி சில்லறை காசுகளை தூக்கி வீசுகின்றனர். அப்படி பக்தர்கள் வீசும் காசுகள், தூணின் உச்சியில் இருக்கும் தட்டில் விழுந்துவிட்டால், பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் உள்ள பிரதான தெய்வம், தனது வழக்கமான உக்கிரமான உக்கிர வடிவத்திற்கு பதிலாக அரிதான யோக முத்திரையில் (தியான நிலை) காட்சியளிக்கும் நரசிம்மப் பெருமாளாகும்.
கோவில் கருவறைக்குள் தனது இடதுபக்க மடியில் லட்சுமி தேவியை வைத்தபடி நரசிம்மசாமி அருள்பாலிக்கிறார்.
கோவில் வளாகத்திற்குள் லட்சுமி தேவி, அனுமன் மற்றும் நாக தேவதைகளுக்ன சன்னதிகளும் உள்ளன.
இந்த கோவிலில் வழக்கமான வேத சடங்குகள், தினசரி ஆரத்தி மற்றும் நைவேத்தியங்கள் நடத்தப்படுகின்றன.
சுவாதி நட்சத்திரம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி ஆகிய நாட்களில் நடைபெறும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களின்போது, சந்தன கலவை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வம் (சந்தோற்சவம்) இப்பகுதி முழுவதிலும் இருந்து பக்தர்களை ஈர்க்கிறது.
பக்தர்கள் கோரிக்கையின் பேரில் சிறப்பு பூஜைகளை செய்து கொள்ளலாம். இக்கோவில் பொதுவாக தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
இந்த கோவிலில் வந்த வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறுவதாகவும், ஆன்மிக நல்வாழ்வை மேம்படுத்துவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
புராண கதைகள், தனித்துவமான பாம்பு கோவில் கட்டிடக்கலை மற்றம் அமைதியான மலை உச்சி சூழல் ஆகியவற்றின் கலவையானது, இதனை பாரம்பரிய யாத்ரீகர்களுக்கும் மன அமைதியை தேடுபவர்களுக்கும் ஏற்ற ஒரு தலமாகும்.
ஹைதராபாத்தில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவிலும், நம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும், வெமுலவாடா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திலும், கரீம்நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் நம்பள்ளிகுட்டாவில் இந்த லட்சமிநரசிம்ம பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது.