நாராயணர் நாரதரிடம் கேட்ட கேள்வி!

narathar narayanan
narathar narayanan
Published on

வைகுண்டத்திற்கு வழக்கம் போல வந்த நாரத மஹரிஷி நாராயணரை தரிசித்தார்.

அவரைப் பார்த்த நாராயணர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: “நாரதா! ஐந்து பூதங்களான நிலம், நீர், காற்று, அக்னி, வானம் ஆகியவற்றில் எது சிறந்தது? உன் அபிப்ராயம் என்ன?"

உடனே நாரதர் சற்று சிந்தித்தார். பின்னர் விடை அளித்தார்: “ஐயனே! பூமி தான் பரந்தது. சிறந்தது."

உடனே நாராயணர், “ஆனால் பூமியில் நான்கில் மூன்று பங்கு நீர் இருக்கிறதே!” என்றார்.

உடனே நாரதர், “நீர் தான் சிறந்தது” என்று கூறினார்.

உடனே நாராயணர், “அந்த நீரைத் தான் அகஸ்தியர் ஒரு மடக்கில் குடித்து விட்டாரே!” என்றார்.

சற்று யோசித்த நாரதர், “அகத்தியர் தான் சிறந்தவர்” என்றார்.

உடனே நாராயணர், "பரந்த பிரபஞ்சத்தில் வானத்தில் ஒரு குட்டி நட்சத்திரம் தானே அகஸ்தியர்” (கானோபஸ் என்ற அகத்திய நட்சத்திரம் பிரபஞ்சத்தில் ஒரு துளி தானே!) என்றார்.

உடனே நாரதர், “சந்தேகமில்லாமல் வானம் தான் சிறந்தது!” என்றார்.

உடனே நாராயணர், “நாரதா! பூமி, வானம் பாதாளம் ஆகியவற்றை வாமனன் தன் ஒரு அடியால் அளந்து விட்டானே?” என்றார்.

உடனே நாரதர், “ஆஹா! ஒரு பாதமே இப்படிச் செய்தது என்றால் கடவுள் எவ்வளவு பெரியவர். கடவுள் தான் பெரியவர்” என்றார்.

உடனே நாராயணர், “பக்தனான ஒருவன் அவ்வளவு பெரியவரைத் தன் இதயத்தில் இருத்தி விடுகிறானே” என்றார்.

உடனே நாரதர், “அவன் பிரேம பாசத்தினால் இறைவனைப் பிணித்து விடுகிறான். ஆகவே பக்தன் தான் கடவுளை விடச் சிறந்தவன்.” என்றார்.

ஆக நாரதர் இப்போது பக்தியின் பெருமையை முற்றிலுமாக நாராயணனின் அருளால் உணர்ந்தார்.

யாக்ஞவல்கிய மஹரிஷி பக்தியை விளக்குகையில் உயிரின் ஆதாரமே பக்தி தான் என்கிறார்.

பக்தியே ஜீவ சக்தி!

‘ப’ என்பது பகவானையும், ‘க்தி’ என்பது அனுரக்தியையும் (பேரன்பு) குறிப்பிடுகிறது என்று விளக்குகிறார் அவர்.

அதாவது இறைவனின் மீது எல்லையற்ற தூய அன்பு கொள்வதே பக்தி.

இதையும் படியுங்கள்:
நாரதர் கர்வபங்கம் கதை!
narathar narayanan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com