அபூர்வ கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜர் கோயில்கள்!
அரிய பஞ்சநதனக் கல் நடராஜர்: திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில். ராஜராஜ சோழன் வழிபட்டு நோய்நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் பலப்பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம், வேறு எங்குமே காண முடியாதவாறு, ஸ்வாமி சன்னிதிக்கு நேர் எதிரிலேயே தீர்த்தம் அமைந்திருப்பது. மற்றொரு சிறப்பம்சம், இங்கே தனிச்சன்னிதி கொண்டிருக்கும் நடராஜர். ஆசியாவிலேயே எங்கும் கிடைக்காத அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். கொள்ளை அழகுடன் அருட்காட்சி தரும் இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் தரிசனம் தருகிறார். இவரைத் தரிசித்து, உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அபூர்வ கருப்பு வெள்ளை நடராஜர்: திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோயில். சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு ஜன்மங்களின் பாவங்களையும் கூட விலக்கும் தலமாக விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள இறைவன் பெரியாவுடையாரை, பிரகதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள நடராஜ சுவாமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எப்படியெனில், உடல் முழுக்க கருப்பு வண்ணத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் அமைந்த நிலையில் கல்லில் வடிக்கப்பட்டவர். நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. தனித்தே அருள்பாலிக்கிறார்.
நடராஜர் காலடியில் திருமூலர்: உலகின் மிகப்பெரிய நடராஜர் என்ற உலோகச் சிலைக்கு பெயர் பெற்றது நெய்வேலி டவுன்ஷிப் பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள நடராஜர் கோயில். இவரின் உயரம் 10 அடி 1 அங்குலம், அடித்தளம் 8 அடி 4 அங்குலம் மற்றும் 2,420 கிலோ கிராம் எடை கொண்டது. 7 அடி உயரமும் 750 கிலோ கிராம் எடையும் கொண்ட சிவகாமி தேவி சிலையும் உள்ளது. வித்தியாசமாக, இக்கோயிலில் மாணிக்கவாசகருக்குப் பதிலாக நடராஜரின் காலடியில் திருமூலர் இருக்கிறார். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற இரண்டு முனிவர்கள் சிவபெருமானுக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காணலாம். மேலும், பாரம்பரியத்திற்கு மாறாக, இங்கு சூரியன் மற்றும் சந்திரனுக்கு பதிலாக சிவபெருமானுக்கு முன்னால் சூரியனும் பைரவரும் உள்ளனர். பைரவருக்கு 10 கைகள் உள்ளன, வழக்கமாக சிவன் கோயில்களில் 63 நாயன்மார்கள் வரிசையாக இருப்பார்கள். ஆனால், இந்த நடராஜர் கோயிலில் நாயன்மார்களின் சன்னிதிகள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.
தாண்டவ தீபாராதனை காணும் நடராஜர்: மதுரையிலிருந்து 165 கி.மீ. தொலைவில் உள்ள குற்றாலத்தில் உள்ளது குற்றாலநாதர் கோயில். இங்கு அம்பாள் குழல்வாய் மொழியம்மை. இக்கோயிலில் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்ர சபை அமைந்துள்ளது. இங்கு நடராஜர் சித்திரமாகக் காட்சி அளிக்கிறார். சித்திர சபையின் கூரை செப்புத் தகடுகளால் ஆனது மற்றும் உட்புறம் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள 5வது வாயிலில் மட்டுமே நடராஜர் முன் திருத்தொண்டர் தீபாராதனை நடைபெறுகிறது. ஆனந்த பைரவி ராகத்தை நாதஸ்வர கலைஞர்கள் வாசிக்க, அப்போது சிவாச்சாரியார்கள் பெரிய தீபாராதனை தட்டை ஏந்தி அந்த இசைக்கு ஏற்ப அசைந்தபடி தீபாராதனை செய்வார்கள். நடராஜப் பெருமானின் நாட்டிய மகிமையை விளக்க இப்படிச் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
நாகத்தின் மீது நடனமாடும் நடராஜர்: மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவத் தலமாகவும் உள்ளது. இங்குள்ள நடராஜர் காலுக்குக் கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகின்றார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு.
என்றாவது அபிஷேகம் காணும் நடராஜர்: பல கோயில்களில் பல நடராஜர்களை தரிசித்திருப்பதுடன் அபிஷேக ஆராதனைகளையும் கண்டு களித்திருப்பீர்கள். ஆனால், திருநெல்வேலி பாபநாசம் சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயிலில் புனுகு சபாபதியாக வணங்கப்படும் நடராஜர் காட்சி தருகிறார். தைப்பூச நாளில் அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அதுவும் வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசத்தன்று மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் என்பதால் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அபிஷேகம் நடைபெறும்.