கங்கையில் மூழ்கி எழும்போது செய்துகொள்ள வேண்டிய சங்கல்பம் என்ன தெரியுமா?

Ganga River
Ganga River
Published on

‘காசி யாத்திரை சென்றால் கர்மம், பாவங்கள் நீங்கும். புண்ணியம் கிடைக்கும்’ என்பது இந்து சமயத்தினுடைய ஒரு அடிப்படை நம்பிக்கை. அப்படி சக்தி வாய்ந்த இந்தப் புண்ணியத் திருத்தலத்தை மேலும் சிறப்பு செய்வதும் முழுமையடையச் செய்வதும் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் புண்ணிய நதியாகிய கங்கை நதி. கங்கை என்று நம் வாயால் உச்சரித்தாலே பாவங்கள் போகும். மேலும், கங்கையில் நாம் முழ்கி எழுந்தால் நம்முடைய பாவங்கள் எல்லாம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்றெல்லாம் வேதங்கள் கூறுகின்றன. அப்பேர்ப்பட்ட பவித்திரமான புண்ணிய நதி கங்கை. உலகத்திலேயே முதன்மையான புண்ணிய நதி கங்கை என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கங்கை நதி பூமிக்கு வந்ததற்கு ஒரு சரித்திரம் உண்டு.

பகீரதன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய முன்னோர்கள் (பாட்டனார்கள்) சகர புத்திரர்கள். அவர்கள் மொத்தம் 60 ஆயிரம் நபர்கள். அவர்களெல்லாம் கபில முனிவரின் சாபத்துக்கு ஆளாகி, எரிந்து சாம்பலாகி விட்டதனால் பாவத்திற்கு ஆளானார்கள். பகீரதன் தன்னுடைய முன்னோர்களின் பாவங்களையெல்லாம் போக்கி, அவர்களை சொர்க்கம் அனுப்ப வேண்டும் என்று எண்ணி, பிரம்ம தேவரை நோக்கி தவம் மேற்கொண்டான். பிரம்ம தேவரும் அவன் முன்பு தோன்றி, ‘உன்னுடைய முன்னோர்களின் சாம்பல் மேல் கங்கை நதி பட்டால் அவர்களுடைய பாவங்கள் எல்லாம் விலகி அவர்கள் சொர்க்கலோகம் போவார்கள்’ என்று ஆலோசனை கூறி மறைந்தார்.

இதையும் படியுங்கள்:
ஆஷாட ஏகாதசியும் பந்தர்பூர் யாத்திரையின் சிறப்பும்!
Ganga River

உடனே பகீரதன் கங்கா தேவியை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான். கங்கா தேவியும் அவன் முன்பு தோன்றி, ‘நான் பூமிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், என்னுடைய வேகத்தை தாங்கக்கூடிய சக்தி பூமா தேவிக்குக் கிடையாது. அது சிவபெருமான் ஒருவரால் மட்டுமே முடியும். ஆகையால், நீ சிவபெருமானை நோக்கி தவம் செய்வாயாக’ என்று சொல்லி மறைந்து விட்டாள்.

பகீரதன் மனம் தளராமல் சிவபெருமானை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டான். சிவபெருமானும் அவனுடைய தவத்தைக் கண்டு மெச்சி, அவன் முன்பு தோன்றினார். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி தேவலோகத்திலிருந்து கங்கா தேவியை ஆகாய மார்க்கமாக பூமிக்கு வரவழைத்தார். கங்கையானவள் வேகத்துடன் பூமியை நோக்கி வந்தாள். அந்த வேகத்தைக் கண்டு அனைவரும், ‘பிரளயம் வரப்போகிறது, பூமியே அழிந்து விடும்’ என்றெல்லாம் நினைத்தார்களாம். ஆனால், சிவபெருமான் சிரித்துக்கொண்டே கங்கா தேவியை தன்னுடைய ஒற்றை சடையில் அழகாக முழுமையாகத் தாங்கிக்கொண்டு விட்டாராம். பின்னர், அதிலிருந்து ஒரு திவலையை எடுத்து பூமியில் விட்டாராம். ஒரு திவலை என்றால் ஒரு துளி. அந்த ஒரு துளி ஆறாகப் பெருகி வெள்ளமாக, வேகமாக, சகர புத்திரர்களின் சாம்பலின் மேல் ஓடிச் சென்றது. அதனால் அவர்களின் பாவங்கள் எல்லாம் விலகி புண்ணியம் அடைந்து சொர்க்கலோகம் சென்றார்கள்.

இதையும் படியுங்கள்:
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மட்டுமே உரித்தான ஆச்சரியமான விஷயங்கள்!
Ganga River

கங்கை நதி பூமிக்கு வரக் காரணமாக இருந்தவன் பகீரதன் என்பதனால் கங்கைக்கு, ‘பாகீரதி’ என்று ஒரு பெயர் உண்டு. அதைப்போலவே சிவபெருமான் கங்கையை பூமிக்கு வரவழைத்த காரணத்தால் சிவபெருமானுக்கு கங்காதரன் என்ற ஒரு நாமமும் உண்டு. இதுதான் கங்கை பூமிக்கு வந்த சரித்திரம். அன்றிலிருந்து யுகம் யுகமாக, காலம் காலமாக கலியுகம் வரையிலும் ஒருவருடைய அஸ்தியை கங்கையில் கரைத்தால் அவர்களுடைய பாவங்களெல்லாம் விலகி அவர்கள் புனிதமடைந்து சொர்க்கலோகம் செல்வார்கள் என்பது இந்துக்களுடைய நம்பிக்கையாகப் பின்பற்றப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அத்தனை மகத்துவமும் புண்ணியமும் வாய்ந்தது கங்கை நதி.

கங்கை நதிக்கு, ‘தேவி சுரேஷ்வரி பகவதி கங்கே திரிபுவந தாரிணி தரளதரங்கே’ என்ற முதல் வரியோடு துவங்கும் ஸ்தோத்திரம் உண்டு. ஆதிசங்கரர் எழுதி வழங்கிய அதற்கு கங்கா ஸ்தோத்திரம் என்று பெயர். காசியில் ஓடிக்கொண்டிருக்கிற இந்த கங்கையை சுற்றி படித்துறைகள் அமைந்துள்ளன. ‘காட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மொத்தம் 64 படித்துறைகள் இருக்கின்றன. இவை தீர்த்தங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
காதலை கல்யாணமாகக் கைகூட வைக்கும் அற்புத முருகன் கோயில்!
Ganga River

இதைத் தவிர, பல உபரி படித்துறைகளும் இங்கு அமைந்திருக்கின்றன. இந்த ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. உதாரணமாக, நான்கைந்து படித்துறைகளை சொல்லலாம். ஹனுமான் காட், கேதார் காட், நாரத் காட், ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட், அகல்யா காட் என்று பல படித்துறைகள் உள்ளன. இந்த எல்லா படித்துறைகளுக்கும் முதன்மையான முக்கியமான படித்துறை மணிகர்ணிகா காட்.

மணிகர்ணிகா படித்துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சமயம் மகாவிஷ்ணு சிவபெருமானை அனுஷ்டித்து தவம் மேற்கொண்டார். தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் ஒரு குளத்தை வெட்டினார். அதில் தண்ணீரை நிரப்பி கரையில் அமர்ந்து பல ஆண்டுகள் மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டார். சிவபெருமான் மகாவிஷ்ணுவின் தவத்தைக் கண்டு ஆனந்தப்பட்டு அவர் முன்பு தோன்றினார். சிவபெருமான் மகாவிஷ்ணுவின் தவத்தைக் கண்டு வியந்து தன்னுடைய தலையை அசைத்தார். அப்போது அவருடைய காதிலிருந்து குண்டலம் கழன்று தரையில் விழுந்தது. அன்றிலிருந்துதான் அந்த இடத்திற்கு ‘மணிகர்ணிகா’ என்ற பெயர் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான கோலங்களில் காட்சி தரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருத்தலங்கள்!
Ganga River

மணிகர்ணிகா படித்துறையில் மகாவிஷ்ணு ஏற்படுத்திய நீர் தேக்கத்திற்கு சக்கரத் தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இப்படி அங்கு இருக்கும் அத்தனை படித்துறைகளுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. அப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த கங்கையில்தான் நாம் மூழ்கி எழுந்து நம்முடைய பாவங்களையெல்லாம் போக்கிக்கொள்ள வேண்டும். காசியில் கங்கை நதியில் நாம் குளிக்க வேண்டும் என்று பொதுவாக சொல்வார்கள். கங்கை நதியில் சோப்பு போட்டு குளிப்பது மிகவும் தவறான செயல். நாம் நதிக்கரைக்கு போவதற்கு முன்பு ஸ்நானம் செய்துவிட்டுதான் செல்ல வேண்டும். நம் முழு உடலையும் கங்கையில் மூழ்கி எழுந்தால்தான் கங்கா தேவி நம் மொத்த உடம்பிலும் படுவாள். கங்கையில் மூன்று முறை மூழ்கி எழுந்து நாம் பிரார்த்தனை, அதாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

‘இனிமேல் நான் எந்த பாவங்களையும் செய்யாமல் இருக்க அருள்புரிய வேண்டும். என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்த உலகத்திலுள்ள அனைவரும் எந்தப் பாவமும் செய்யாமல் இருக்க அவர்களுக்கும் நீ அருள்புரிய வேண்டும். முக்தியும் மோட்சமும் எனக்குத் தர வேண்டும்’ என்று முழுகி எழுந்து சூரிய தேவனை பார்த்து தண்ணீரை விட வேண்டும். இதுதான் கங்கையில் மூழ்கி எழுதல்! இதுதான் நாம் காசியில் செய்ய வேண்டிய சங்கல்பம். இப்படி கங்கையில் முழ்கி பக்தியோடு பிரார்த்தனை செய்தால் நம் பாவங்கள் விலகி, புண்ணியம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com