கவலையோடு போன இளைஞன்; கல் சிற்பம் கற்றுக்கொடுத்த ரகசியம்: தேவிகாபுரம் நவநாரிகுஞ்சரம் விசித்திரம்!

Tamil Nadu temple architecture - நவநாரிகுஞ்சரம் சிற்பம்
Tamil Nadu temple architecture - நவநாரிகுஞ்சரம் சிற்பம்AI Image
Updated on

வ்வொரு கோவிலுக்குச் செல்லும்போது நாம் கடவுளை தரிசிக்கிறோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அங்கிருக்கும் கற்களுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கைப் பாடங்களையும் தரிசிக்கிறார்கள்.‌ ஒரு சிற்பம் கல்லில் செதுக்கப்பட்ட கலை அல்ல. அது ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் அமைதியான ஆசிரியர்.‌ அப்படிப்பட்ட ஒரு அதிசய ஆசிரியர்தான் நவநாரிகுஞ்சரம்‌ சிற்பம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் மாலை நேரம். சூரியன் மேற்கே மறைய கோபுரத்தின் மீது விழுந்த தங்க ஒளிக்கதிர்கள் கோவிலுக்கு ஒரு தெய்வீக அழகைத் தந்தது.

அந்த நேரத்தில் ஒரு இளைஞன் கனககிரீஸ்வரர் ஆலயத்தில் நுழைந்தான். வாழ்க்கையில் தொடர்ச்சியான தோல்விகள். வேலை இழப்பு, நண்பர்கள் விலகல், குடும்பப் பிரச்னைகள் எதிர்காலம் குறித்து பயம், இவை அனைத்தும் அவன் மனதை கனமாக்கியது. கோவிலுக்கு வந்தாலும் மனதில் அமைதி இல்லை. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்னை என்ற கேள்வி எழுந்துகொண்டு இருந்தது. பிராகாரத்தை அவன் சுற்றி வந்தான்.

மன அழுத்தத்திற்கு மருந்தாகும் நவநாரிகுஞ்சரம் சிற்பம் உணர்த்தும் தத்துவம்:

அப்போது சிவாச்சாரியாரின் பார்வை அவனை நோக்கி திரும்பியது‌ அவனிடம் அவன் கவலைக்கான காரணத்தைக் கேட்டார். வாழ்க்கை நடத்துவது சிரமமாக இருக்கிறது என்றான்‌ அப்படியானால் உனக்கு ஒரு சிற்பத்தைக் காட்டவேண்டும். வா என்று கூறி ஆலயத்தில் ஒரு விசித்திரமான சிற்பம் முன் நின்றார்.

அதைப்பார்த்து இளைஞன் ஆச்சர்யமடைந்தார். ஆஹா எவ்வளவு அழகான யானை என்றுகூறினான். நீ அதன் அருகில் சென்று நன்றாகப்பார். அது யானையா என்று அவர்கேட்க அருகில் சென்று பார்த்த இளைஞன் திகைத்தான். ஐயா இது யானை இல்லையே… ஒன்பது பெண்கள் என்றான். ஒன்பது பெண்கள் முகத்தில் ஒவ்வொரு உணர்ச்சி. ஆனால் அந்த சிற்பத்தை தன் தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு வலிமையான யானையைப் போன்று தெரிந்தது.

Tamil Nadu temple architecture - நவநாரிகுஞ்சரம் சிற்பம்
Tamil Nadu temple architecture - நவநாரிகுஞ்சரம் சிற்பம்AI Image

இதற்குப் பெயர்தான் நவநாரி குஞ்சரம். நவ என்றால் ஒன்பது‌ நாரி என்றால் பெண். குஞ்சரம் என்றால் யானை. இந்த பெண்கள் சாதாரண பெண்கள் அல்ல‌ இவர்கள் நவரசங்களின் உருவங்கள். என்றார் சிவாச்சாரியார். நவரசங்களா என்று இளைஞன் கேட்டதற்கு இதோ நகை, இதோஅழுகை, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி இப்படி ஒவ்வொரு முகமும் உயிருடன் பேசுவதுபோல் தோன்றியது.

ஒருவர் சிரித்தார்

ஒருவர் அழுதார்

ஒருவர் பயந்தார்

ஒருவர் கோபப்பட்டார்

ஒருவர் பெருமிதத்துடன் இருந்தார்

ஒருவர் அமைதியாக இருந்தார், இளைஞன் அவரிடம் இவையெல்லாம் சேர்ந்து யானையாக ஏன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டான்.

முதியவர் கண்ணில் பிரகாசம் தெரிந்தது. பிறகு அவர் "மனித வாழ்க்கை முழுவதும் இந்த ஒன்பது உணர்ச்சி களால் நிரம்பியிருக்கிறது மகனே ஒருநாள் மகிழ்ச்சி வரும், மறுநாள் துக்கம் வரும், சிலநேரம் பயம், சிலநேரம் வெற்றிகிட்டும், சிலநேரம் தோல்வி வரும்‌ அவை அனைத்தும் சேர்ந்துதான் முழுமையான வாழ்க்கையை உருவாக்கின்றன.

அந்த இளைஞன் இதையெல்லாம் கவனமாகக்கேட்டான்.‌ இந்த ஒன்பது உணர்வுகளும் தனித்தனியாக இருந்தால் வெறும் மனித முகம்தான். ஆனால் அவை ஒன்றிணைந்தால் யானையாக மாறுகின்றன. அதாவது வலிமையாக மாறுகின்றன. இதை புரிந்து கொண்ட இளைஞன் தன் வாழ்க்கையை நினைத்துப்பார்த்தான். தோல்விக்காக அழுத நாட்கள், வெற்றிக்காக மகிழ்ந்த தருணங்கள், கோபத்தில் எடுத்த தவறான முடிவுகள், பயத்தில் உறங்காத இரவுகள் எல்லாமே நினைவுக்கு வந்தன.

இதையும் படியுங்கள்:
கோயில்களில் கொடிமரம் ஏன் அமைக்கப்பட்டது? அதன் பின்னால் அறிவியல் ரகசியங்கள்!
Tamil Nadu temple architecture - நவநாரிகுஞ்சரம் சிற்பம்

அவன் அவற்றை இதுவரை சாபமாகவே நினைத்தான். அப்படியானால் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் தேவைதானா என்று கேட்டான்‌. முதியவர் சிரித்தார். யானையால் ஒரு காலில் நடக்க முடியுமா என கேட்க, முடியாது என்றான் இளைஞன். அப்படியானால் ஒரு உணர்ச்சியால் மட்டுமே மனிதன் வாழ முடியாது வாழ்க்கையில் நவரசங்களும் சேர்ந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும்‌ என்றார்.

இளைஞனின் மனதில் புதிய ஒளி பிறந்தது. சில நிமிடங்களுக்கு முன் பிரச்னைகளால் அடைந்திருந்த மனம் இப்போது தைரியத்தால் நிரம்பியது‌ அவன் இப்போது நவநாரி குஞ்சரத்தைப் பார்த்தபோது அது கல் அல்ல வாழ்க்கைப் பாடம் என்றும் அது ஒரு அமைதியான குரு என் உணர்ந்தான்.

நவரசங்களின் சங்கமமாய் விளங்கும் நவநாரிகுஞ்சரம் சிற்பம் ஏன் முக்கியமானது?

தமிழ்நாட்டில் கனககிரீஸ்வரர் ஆலயம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதசுவாமி கோவில், திருக்குறுங்குடி பெருமாள் கோவில்களில் நவநாரி குஞ்சர சிற்பம் உள்ளது.‌ நம் வாழ்க்கையின் நவரச உணர்வுகளையும் ஏற்றுக் கொண்டால் அவை வலிமையாக மாறி யானை பலம் ஏற்படும் என்பதையே இந்த நவநாரிகுஞ்சரம் உணர்த்துகிறது. மேற்கூறிய கோவில்களுக்குச் செல்லும்போது நவநாரிகுஞ்சரத்தின் சின்னத்தையும் தரிசியுங்கள்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாசகர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாடத் தோல்விகள், கோபங்கள் மற்றும் ஏமாற்றங்களை வெறும் சாபமாகப் பார்க்காமல், அவை அனைத்தும் தங்களை ஒரு வலிமையான மனிதனாக மாற்றும் வாழ்வியல் நவரசங்கள் என்ற புதிய உத்வேகத்தையும், மன அமைதியையும், தெளிவான எதிர்காலப் பார்வையையும் முழுமையாகப் பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com