கோயில்களில் கொடிமரம் ஏன் அமைக்கப்பட்டது? அதன் பின்னால் அறிவியல் ரகசியங்கள்!

கோயில் இல்லாத ஊரில் ஏன் வசிக்கக்கூடாது? கொடிமரம் ஏன் அமைக்கப்பட்டது? அதன் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக தகவல்கள் மற்றும் விசித்திரமான கொடிமரங்களின் பின்னணி!
கொடிமரம்
கொடிமரம் Image credit: AI Image
Updated on
MM strip
MM strip

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். அது ஏன் தெரியுமா? இதற்கு பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது.

அக்காலத்தில் இடி, மின்னல் ஏற்பட்டால் அதை தாங்குவதற்கு எந்த விதமான வசதியும் இல்லை. அதனால் கோயில்கள் கட்டி அதில் கொடிமரத்தை தேக்கு மரத்தால் செய்து அதன் மேல் தாமிர தகடு வைத்து மூடியிருப்பார்கள். இதில் இடியோ மின்னலோ பட்டால் அது அப்படியே பூமிக்குள் ஈர்க்கப்பட்டுவிடும். அத்துடன் கொடிமரத்தின் கீழ் நேர்த்திக்கடனுக்காக உப்பு கொட்டுவார்கள். இதனால் அந்த கொடிமரத்தின் ஈர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடி, மின்னலினால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், கோயிலோ, கொடிமரமோ இல்லாவிட்டால் இதன் பாதிப்பு அப்படியே மக்களைப் பாதிக்கும். மேலும், கொடிமரத்திற்கு பூஜை செய்யச் செய்ய அதன் எதிரே கற்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு சென்று மூலவரின் சக்தியை அதிகரிக்கச் செய்து, பின் கொடிமரத்தின் கீழ் வணங்கும் மக்களுக்கு அதன் பலன் சென்றடைகிறது.

இதன் காரணமாகத்தான் கோயிலில் கொடிமரம் வைத்தார்கள். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் கொடிமரங்கள் எல்லாம் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட கொடிமரங்கள்.

குழந்தை பேறு தரும் கொடிமரம்:

பொதுவாக எல்லா கோவில்களிலும் கொடிமரமானது கோவிலுக்கு உள்ளேயே இருக்கும். ஆனால் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருவேங்கடநாத பெருமாள் கோயிலில் கொடிமரம் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. இக்கொடிமரத்தில் ‘கம்பத்தடியான்’ என்ற தெய்வம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

உயரமான கட்டிடங்களில பணி செய்வோர் இவரை வணங்க எந்த ஆபத்தும் நேராது. குழந்தை இல்லாத தம்பதியினர் திருவோண நட்சத்திரத்தன்று பாயசம் நிவேதனம் செய்து கம்பத்தடியானுக்கு படைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
மாம்பழத் தோலை குப்பையில் வீசுவீர்களா? இனி வேண்டாம்! இதோ 5 அற்புத பயன்கள்!
கொடிமரம்

கொடிமரமும் விபூதி பிரசாதமும்:

மதுரை திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள சிந்து பட்டி வெங்கடாசலபதி பெருமாள் கோவில் கொடிமரம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக பெருமாள் கோவில்களில், கொடிமரத்தின் உச்சியில் கருடன்தான் இருப்பார். ஆனால் இங்கே, கொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாகனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. இந்த கொடிமரத்திற்கு திருமஞ்சனம் செய்து வழிபட குழந்தை பேறு, திருமணத்தடை, தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

வரிசை மாறிய ராஜகோபுரமும், கொடிமரமும்:

108 வைணவத் திவ்விய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளன.

கொடிமரத்தின் கீழ் நந்தனார்:

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் அமைந்துள்ள, 'அம்மைநாதர்' (அம்மநாதர்) கோவில் பழமையான சிவாலயமாகும். இத்தலத்திற்கு வந்து நந்தனார் வழிபட்டதற்கு அடையாளமாக இத்தலத்தின் கொடிமரத்தின் கீழ் பீடத்தில் நந்தனார் உருவம் இடம்பெற்றுள்ளது. இவர் சிவனை வழிபட, நந்தி இத்தலத்தில் விலகி இருக்கிறது. இதனால் பக்தர்கள் கொடிமரத்தின் அருகே இருந்து சிவனை எளிதாக வணங்க முடியும்.

கொடிமரம்
கொடிமரம் Image credit: AI Image

ஆமை கொடிமரம்:

நாகர்கோவில் நாகராஜா கோயிலின் மூலவர் நாகராஜா என்றாலும் அங்குள்ள அனந்தகிருஷ்ணர் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் உள்ளது. பெருமாள் கோயில்களில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம்; ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும் கருடனும் பகைவர்கள் என்பதால் கொடிமர உச்சியில் ஆமை இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரு கொடிமரங்கள் உள்ளன. ஒன்று சொக்கநாதருக்கு மற்றொன்று மீனாட்சி அம்மனுக்கு. இவ்விரு கோடி மரங்களும் ராஜபாளையம் நீர் காத்த ஐயனார் கோயில் முன்பு இருந்த காட்டில் இருந்து சின்ன ஓட்டக்காரன், பெரிய ஓட்டக்காரன் மூலம் கொண்டு வரப்பட்டது. இதில் அம்மன் சன்னதி முன் உள்ள கொடிமரம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கி. மீ தொலைவில் உள்ளது. உறையூர் பாண்டமங்கலம் அக்ரஹாரம் இங்கே உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் கலைநயம் மிக்கது. இதில் கருட பகவான் தெற்கு நோக்கியும், ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியும் ஒரே கொடிமரத்தில் இருந்து அருள் பாலிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி நகைகள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க இதைப் பின்பற்றுங்கள்!
கொடிமரம்

முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருவாட்சி மண்டபத்தை அடுத்து கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவே கொடிமரம் அமைந்துள்ளது. இங்கு மயில், நந்தி, மூஞ்சூறு ஆகிய மூன்று வாகனங்களும் ஒருசேர அமைந்துள்ளன. இவ்வரியக் காட்சி இத்தலத்தில் மட்டுமே உள்ளது.

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள மூவலூர் மார்க்கசகாமேஸ்வரர் கோயிலில் உள்ள கொடி மரத்தில் தென் திசை நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். பொதுவாக சிவன் கோயில்களில் தென் திசையில் தனி சன்னதியில்தான் தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பார். இங்கே கொடிமரத்தில் காட்சியளிக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com