
ராமேஸ்வரத்தில் இருந்து தென் திசையில் சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவிப்பட்டினம். இது ஒரு அழகிய கடற்கரை கிராமமாக இருந்தாலும் ஸ்ரீராமபிரான் இங்கு கடலில் நவகிரக லிங்கங்களை கல் வடிவில் நிறுவி வழிபட்டதால் இந்தத் தலம் புகழ் பெற்று விளங்குகிறது. ராமாயண கால தொடர்புள்ள தேவிபட்டினக் கடலில் அலைகள் வீசுவதில்லை. ஆனால், அதேசமயத்தில் ஆகர்ஷண சக்தி அதிகம். சீதா தேவியை, அசுரன் ராவணன் கடத்திச் சென்றதும், சீதையை மீட்க ஸ்ரீராமபிரான் இலங்கை புறப்படுவதற்கு முன்பு அம்பாளை வழிபட்டு அருள்புரியுமாறு வேண்டினான்.
அதற்கு அம்பாள், ‘நீ மனிதனாக அவதாரம் எடுத்து உள்ளதால் உன்னை நவகிரக தோஷம் பிடித்துள்ளது. அதனைப் போக்க தேவிபட்டினம் சென்று சமுத்திரத்தில் நீராடி, கடற்கரை மணலில் நவகிரக லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகு இலங்கைக்குப் புறப்படு’ என உத்தரவிட்டாள். அம்பாள் சொன்னபடி ஸ்ரீராமபிரான் இக்கடற்கரைக்கு வர, அங்கு பொங்கும் கடலின் அலைகள் இடையூறாக இருக்கவே, அங்குள்ள ஜெகன்னாத பெருமாள் கடல் அலைகளை நிறுத்தி ராமபிரானுக்கு உதவினார்.
அதற்குப் பின்னர் நவகிரகங்களை நிறுவி வழிபட்டு தோஷங்கள் நீங்கியதும் அவர் இலங்கைக்குப் புறப்பட்டார் என்று புராணம் சொல்கிறது. இதனால்தான் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற கடல் பகுதிகளில் அலைகள் வீசுவதில்லை என்று கூறப்படுகிறது. தேவிப்பட்டினத்தில் தற்போது உள்ள நவபாஷாணம் என்று சொல்லப்படும் நவகிரக லிங்கங்கள் உள்ள இடம் கடலில் இருந்தாலும் காலை வேளையில் முழங்கால் அளவே தண்ணீர் இருக்கும். நேரம் கடந்து செல்லச் செல்ல இடுப்பளவில் தண்ணீர் இருக்கும். இதனால் சில நவகிரக லிங்கங்கள் கடல் நீரில் மூழ்கி விடுவதும் உண்டு.
அசுரன் ராவணனால் சீதா தேவி கவர்ந்து செல்லப்பட்டபோது, சீதா தேவி அடையாளத்திற்காக தான் அணிந்திருந்த ஆபரணங்களை பொட்டலமாகக் கட்டி போட, அது விழுந்த இடம் தேவி பொட்டலம் என்றாகி, தேவி பொட்டனமாக மருவி, பிறகு தேவிபட்டினமாக மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது.
இங்குள்ள நவகிரகங்களால் ஸ்ரீராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாவும், நவகிரகங்களை பூஜை செய்து திலதானம் செய்வதற்காக அங்குள்ள புரோகிதர்களை ஸ்ரீராமபிரான் தேடியபோது ஒரு புரோகிதர்கள் கூட அங்கு இல்லாதபோது சிவன் மற்றும் பார்வதி தேவி காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் நினைவாக அமைந்ததுதான் திலகேஸ்வரர் ஆலயம். இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் தர்ம தீர்த்தம், கால தீர்த்தம், அமிர்த தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தமும் விசேஷமான தீர்த்தங்கள் ஆகும்.
நவகிரகங்கள் இரண்டாயிரம் வருடத்திற்கு மேலாக கடலில் இருந்தாலும் அன்று முதல் இன்று வரை நவகிரகங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. பக்தர்கள் இங்குள்ள நவகிரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இதனால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நவகிரகங்களுக்கு நவ தானியம் வைத்து ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கினால் பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தங்கள் கைகளாலேயே நவபாஷாண கற்களைத் தொட்டு பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். கால சர்ப்ப தோஷம், பிதுர் சாபம், மூத்தோர் சாபம், நவகிரக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரங்கள் செய்து நிவர்த்தி பெறலாம்.
நவபாஷாண நவகிரக திருக்குளம் அதிகாலை நான்கு மணி முதல், மாலை ஏழு மணி வரை திறந்திருக்கும். அதிகாலை எட்டு மணிக்கு நாம் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.