நவராத்திரி சிறப்பு: இந்த கோயில்களுக்கு சென்றால் நினைத்தது நடக்கும்!

Mupperum Deviyar
Mupperum Deviyar
Published on

துரை நகரின் மத்தியில் சிம்மக்கல் பகுதியில் உள்ளது பேச்சியம்மன் கோயில். இந்த அம்மனை சரஸ்வதியின் மற்றொரு அம்சமாக இப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, நவராத்திரி நாட்களில் பேச்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இவர் சரஸ்வதியின் மற்றொரு வடிவம் என்பதால் இங்கு பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள் அந்த குறைபாடுகள் நீங்க வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

சிவன், சக்தி ரூபங்கள் இணைந்த அர்த்தநாரீஸ்வரரை தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரு லிங்கத்தில் சக்தியை தாங்கியிருப்பதை தரிசிக்க காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். நவராத்திரி விழா 13 நாட்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்கள் அம்பிகை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். 11ம் நாள் அம்பிகைக்கு சந்தனக் காப்பிடப்படும். 13ம் நாள் அம்பிகை புஷ்ப பல்லாக்கில் புறப்பாடாகிறார். இந்நாளில் இவரை வழிபட நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கண்டியூரை அடைந்து, அங்கிருந்து கிழக்கே வீரசிங்கம்பேட்டை வழியாக 4 கி.மீ. தொலைவு சென்றால் இருக்கிறது திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோயில். இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாகக் கருதப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று வேதங்களுக்கு அதிபதியான இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபட குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி மாதத்தில் வீட்டில் இவற்றைச் செய்தால் வாழ்வில் வளம் பெருகும்!
Mupperum Deviyar

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோயில் செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில். இங்கு வேறு எங்கும் இல்லாத வகையில் சிவ துர்கை, வைஷ்ணவி, விஷ்ணு துர்கை என்று மூன்று வடிவங்களும் ஒரே சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள். இவர்களை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் வழிபட, கடன் தொல்லை, திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி கோயில். கருவறையில் இருக்கும் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாவார். இங்கு வள்ளி, தெய்வானைக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. நவராத்திரியின்போது இங்கு வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்கு உள்ள அம்மனை வழிபடுகின்றனர். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், வேண்டியது விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ராஜராஜ சோழன் வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் பல சிறப்புகளை கொண்டு விளங்குகிறது. இந்த கோயிலில் துர்கை வித்தியாசமாக கோரைப் பற்கள் வெளியே தெரியுமாறு காட்சி தருகிறார். இவருக்கு 11 வாரங்கள் எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, வடை மாலை சாத்தி, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தொழில் செழிக்க விஸ்வகர்மா பூஜை மகத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள்!
Mupperum Deviyar

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது உத்தமபாளையம். அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஞானாம்பிகை கோயில். இங்கு பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, மகாலட்சுமி, ஆகியோருடன் காளி தேவியும் சேர்ந்து அஷ்ட மாதர்களாகத் தரிசனம் தருவது விசேஷ அம்சம். இங்குள்ள அர்த்த மண்டப விதானத்தில் வாஸ்து பிரம்மாவையும், அவரருகே இடது கையில் வீணையை மீட்டும் நிலையில் சரஸ்வதியையும், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களையும் தரிசிக்கலாம். இது கிரக தோஷம் போக்கும் கோயில்.

தேனியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது முத்துதேவன்பட்டி. இங்கே நாக காளியம்மன் கோயில் விசேஷமானது. அம்மன் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜையன்று, குழந்தைகளின் நாவில் தாமரை மொட்டினால் எழுதும் வழிபாட்டு நிகழ்ச்சி விசேஷமானது. இப்படி செய்வதால் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி மாதம் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களும் பலன்களும்!
Mupperum Deviyar

பொதுவாக, சரஸ்வதி கோயில் கருவறையில் அவர் மட்டுமே வீற்றிருப்பார். ஆனால், தெலங்கானா மாநிலத்தின் பஸார் எனும் இடத்தில் உள்ள 'ஞான சரஸ்வதி’ கோயிலில் சரஸ்வதியுடன் லட்சுமி தேவியும் சேர்ந்து அருள்பாலிக்கிறார்கள். அதேபோல, இக்கோயின் அருகே காளி கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலுக்கு வந்தால் கல்வி, செல்வம், வீரம் ஒருசேர கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

ரக்கோணத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது நெமிலி பாலா பீடம். இங்கு குழந்தை வடிவில் அம்பிகை அருள்பாலிக்கிறார். நவராத்திரி சமயத்தில் இங்கு தேங்காயில் அம்மன் முகம் செய்து வழிபடுகின்றனர். வழிபாடு நடத்திய பின்னர் அதை அப்படியே வைத்து விடுவர். பிறகு அடுத்த வருடம் நவராத்திரி துவக்க நாளில் அதை உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com