நெய்யபிஷேக மகத்துவம்: ஐயப்பனின் இருமுடி நெய்க்குப் பின்னால் ஒளிந்திருக்கும் விசேஷம்!

The special secret hidden behind Ayyappa's Irumudi ghee
Sabarimalai Iyappa Swamy Temple
Published on

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே ஐயப்பனின் சரண கோஷத்துக்கு பஞ்சமிருக்காது. திரும்பும் திசையெல்லாம் காட்சி தரும் ஐயப்பமார்களின் பக்திக் கோலமும் பூஜைகளும் வழிபாடுகளும் நம் மனதில் பக்திப் பெருக்கை ஏற்படுத்தும். சபரிமலையில் வீற்றிருக்கும் மணிகண்ட சுவாமியான ஐயப்பன் கோயில் பற்றி பலரும் அதிகம் அறிந்திராத 10 தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. சபரிமலை ஐயப்பனின் வாகனம் குதிரை ஆகும். கொடிமரத்தின் மேல் குதிரை உருவமே அமைக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் உள்ள 18 படிகளில் 18 தேவதைகள் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

2. திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் இரண்டாவது மிகப்பெரிய கோயிலாகும்.

3. ஐயப்பன் கோயிலில் நடை சாத்துவதற்கு முன்பு பாடப்படும் ஹரிவராசனம் என்ற பாடல் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் சீனிவாச ஐயர் இயற்றி, இசையமைத்த பாடலாகும். நிறைய பாடகர்கள் இந்தப் பாடலை பாடியிருந்தாலும் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலே கோயில் நடையில் ஒலிபரப்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கைசிக ஏகாதசி: ஒரு பண் பாடலால் பிரம்ம ராட்சஷனுக்குக் கிடைத்த விமோசனம்!
The special secret hidden behind Ayyappa's Irumudi ghee

4. இருமுடி தாங்கி பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது சிறப்பு. இருமுடி தரிக்காதவர்கள் வேறு பாதை வழியாக சென்று ஐயப்பனை தரிசிக்கலாம்.

5. மகிஷி என்ற கொடிய அரக்கியை வதம் செய்ய மணிகண்டன் சென்றபோது, இந்திரன் சிங்கமாகவும், குதிரையாகவும் இருந்து ஐயப்பனை தாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அரக்கியைக் கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை ஆகும். 18 மலைகளுக்கு இடையே இந்த சபரிமலை அமைந்துள்ளது.

6. ஸ்ரீ பூதநாத உபாக்யானத்தில் 18 படிகளுக்கு கடூரவன், கருப்பசாமி இருவரும் காவலாக இருப்பதாகக் கூறுகிறது. கன்னி மூலை கணபதியும், வாயு திசையில் மாளிகைபுரத்தம்மனும் வீற்றிருக்கிறார்கள்.

7. சங்க காலத்தில் இது சேரர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். ஜாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் உரிமை யாருக்கு என்பது தெரியுமா?
The special secret hidden behind Ayyappa's Irumudi ghee

8. பக்தர்கள் சுமந்து வரும் இருமுடியில் உள்ள நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யப்படுகிறது. இது மிகவும் விசேஷமான அபிஷேகமாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரவணை பாயசமும் அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

9. சபரிமலை செல்வதற்கு முன்பு மாலை அணிந்து 48 நாட்கள் அசைவ உணவு, புகையிலை, மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்களை ஒழித்து கடும் விரதம் இருந்து மலைக்குச் செல்கின்றனர். சுவாமி தரிசனம் செய்து திரும்பியதும் மாலையை கழற்றலாம். 18 முறை சபரிமலை சென்று தரிசித்தவர்கள் குரு சுவாமி என அழைக்கப்படுகிறார்கள்.

10. முன்பெல்லாம், ‘பெரிய பாதை’ என்ற அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த ஒற்றை வழிப்பாதையில் பக்தர்கள் சென்றனர். ஆனால், இப்பொழுது நிறைய வசதிகள் ஏற்படுத்தி வாகனங்களிலேயே பயணம் செய்து பம்பா நதிக்கரையை அடைகின்றனர். சாலைகள் நன்கு மேம்படுத்தப்பட்டு இரு பக்கங்களிலும் கடைகள், மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக மாறி உள்ளது. பக்தர்களின் தரிசன வசதிக்காக ஆன்லைனிலும் (இணையத்தில்) முன்பதிவு செய்துகொள்ளும் வசதி தற்போது உள்ளது.

கே.எஸ்.கிருஷ்ணவேணி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com