
தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக அருள்மிகு நெல்லையப்பர் கோவில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட இந்த கோவில் கிட்டதட்ட 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் நெல்லையப்பரை வேணுநாதர், நெல்வேலி நாதர் என்ற பெயர்களில் மக்கள் அழைக்கின்றனர். நெல்லையப்பர் கோவில் 378 அடி அகலமும் 756 அடி நீளமும் கொண்டது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் 10 அடி உயர நந்தியை தரிசிக்கலாம். இப்படி பல சிறப்புகள் நிறைந்த பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வருடம் தோறும் அனி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அதில் குறிப்பாக பத்தாம் நாளில் நடக்கும் தேர் திருவிழாவில் திருநெல்வேலியில் இருந்து மட்டுமல்ல பல ஊர்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள்.
நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். 82 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும். முற்காலத்தில் 13 அடுக்குகளைத் தாங்கிய படி இந்தத் தேர் உலா வந்திருக்கிறது. பிற்காலத்தில் 9 அடுக்குகளாகவும், அதன் பின் 7 அடுக்குகளாகவும் தேரின் உயரம் குறைக்கப்பட்டது. தற்போது ஐந்து அடுக்குகள் மட்டுமே அலங்காரம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் இந்தாண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை, இரவில் சுவாமி -அம்பாள் வீதிஉலா மற்றும் சிறப்பு பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் இழுக்கப்படும். 5 தேர்களும் பூக்களாலும், வாழை தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, புதிய வடங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் வீதிஉலா வரும் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டு சீரமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆனித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று அதிகாலை தொடங்கியது. தேர்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரதவீதிகளில் அதிகாலையில் முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் நெல்லை நகரமே மக்கள் வெள்ளத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று அதிகாலையில் சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளியதும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தேரோட்டத்தின் முதல் நிகழ்வாக விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையம் சேர்ந்தன.
இதனை தொடர்ந்து, காலை 8.45 மணி யளவில் தமிழகத்தின் 3-வது பெரிய தேரான சுவாமி நெல்லையப்பர் தேர் இழுக்கப்பட்டது. சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. இறுதியாக சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது. திருநெல்வேலியில் அதிக நீளமுள்ள மேலரதவீதியை நிறைத்தபடி, நெல்லையப்பர் தேர் ஆடி அசைந்தபடி பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும். 450 டன் எடை கொண்ட இந்த தேர் முழுக்க முழுக்க மக்களால் மட்டுமே இழுக்கப்படுகிறது. இயந்திரத்தை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு ரத வீதிகளிலும் குவித்த லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்தை ரசித்தபடி வீதிகளிலும், வீடுகளில் மேல் நின்று தேரின் மீது பூக்களை தூவியும் வழிபாடு செய்தனர்.
தேர்வரும் வீதிகளில் பக்தர்களின் ‘சிவ சிவ' கோஷம் விண்ணை முட்டியது. சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்திப் பெருக்குடனும், உற்சாகத்துடனும் தேரை வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
நெல்லை மாநகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. வீதிகளில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாவே தெரிந்தது. கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் தேரோட்டம் மக்களின் வெள்ளத்தில் மிதந்தபடி ஒவ்வொரு வீதியாக வந்த வண்ணம் உள்ளது. தேர் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்த பின் இறுதியில் இன்று மாலை தேர் நிலையை வந்தடையும். அதன் பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும்.
நெல்லையப்பர் தேரோட்ட விழா காரணமாக, இன்று (ஜூலை 8) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தியும், டிரோன் கேமராக்களை பறக்க விட்டும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.