
தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற கொடிய அசுரர்கள் தங்கம். வெள்ளி. இரும்பால் ஆன திரிபுரங்களில் இருந்துகொண்டு உலக உயிர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற காருண்ய மூர்த்தியான சிவபெருமான் பூமி, வானம், சூரிய, சந்திரர் முதலியவற்றால் உருவாக்கப்பட்ட தேரில் எழுந்தருளி அசுரர்களை எரித்து அழித்து உயிர்களைக் காத்தருளினார். இதுவே ஆனி பெருந்திருவிழாவின் ஒன்பதாம் திருநாளாகிய தேரோட்ட விழாவின் தத்துவம்.
இந்தத் தத்துவ அடிப்படையில் கி.பி.1504ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஆனி பெரும் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி, நாளை மறுநாள் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை ஜூலை 8ம் தேதி மிக முக்கிய திருவிழாவான தேரோட்டம் நடைபெறுகிறது. மிகப் பிரம்மாண்டமான நெல்லையப்பர் தேர் திருவிழாவில் நாளை காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளார்கள்.
திருநெல்வேலி நகரின் மத்தியில் பதினான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில். திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஐந்து தேர்கள் உள்ளன. இறைவனுக்கு ஒன்று, இறைவிக்கு ஒன்று, அவர்களின் பிள்ளைகளான விநாயகர், சுப்ரமணியர் ஆகியோருக்கு தலா ஒன்றும், சிவபெருமானின் வாசல் கணக்கர் சண்டிகேஸ்வரருக்கு ஒன்று என ஐந்து தேர்கள் உள்ளன.
இவை ஒன்றை விட ஒன்று அளவில் பெரியதும் சிறியதுமாகும். சண்டிகேஸ்வரர் தேர் இந்த ஆண்டு புதியதாக செய்யப்பட்டு மிக அழகாகக் காட்சி அளிக்கிறது. தேரில் உள்ள மர சிற்பங்கள் வெப்பத்தால் வெடித்து விடும் எனக் கருதி எண்ணைய்யும் தண்ணீரும் கலந்து ஆண்டுக்கு ஒரு முறை தெளிப்பார்கள். மரங்களில் இயற்கையாக தைல சத்து என்பது இருக்கும். இவை வெட்டப்பட்ட பின்னர் மெதுவாக தைல சத்தை இழந்து விடும். தைல சத்து முழுவதுமாகக் குறைந்து விட்டால் மரத்தில் வெடிப்பு ஏற்படும். இதைத் தடுக்கவே எண்ணெய்யும் தண்ணீரும் கலந்து தெளிக்கிறார்கள். நெல்லையப்பர் திருத்தேர் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தேர். இது முக்காலே இரண்டு வீசம் அளவினுடையது. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் மூன்றாவது பெரிய தேர். இது முக்காலே ஒன்றரை வீசம் அளவுடையது. திருவாரூர் தேர் தேர்களிலேயே முதன்மையான தேராக விளங்குகிறது.
நெல்லையப்பர் தேர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட அழகு தேராகும். உயரத்திலும் நிறையிலும் அமைப்பிலும் நெல்லையப்பர் தேருக்கு ராஜ கம்பீரம் உண்டு. இதன் வடிவமைப்பு சதுர செவ்வக வடிவமைப்பாகும். அதற்கேற்ப தேர் கூரையும் அழகாகப் பொருந்தியுள்ளது. தேரின் அடிப்பாகத்தில் அலங்கார மண்டபம் போன்ற அமைப்பில் படிப்படியாக வரிசையாக அபூர்வ சிற்பங்கள் நம் கண்களை கவர்கின்றன. தேரோடும்போது அலைந்தொலிக்க கந்தரூபன் கையில் சிறு மணிகள் கட்டியுள்ளனர். மேலே அஷ்டதிக் பாலகர்களும் நடுவே வண்ணக் கோலமான துணி உருளைகள் தவழ்ந்து ஆடுகின்றன. மேலே உத்தி அழகான கோபுர உருவமும் அதன் மேலே உச்சியில் வெற்றிக்கொடியும் நம் பாவங்களைப் பொடி பொடியாக்கும் மங்கலச் சின்னங்களாகத் திகழ்கின்றன.
1948ம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசி பறந்தது. இதுபோல், இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரையிலும் எந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனித சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப் பெரிய தேர் இதுஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
நான்கு வெளிச்சக்கரங்களும் நான்கு உள்சக்கரங்களும் கொண்டு அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும். முற்காலத்தில் இதன் மேல் பகுதியில் ஒன்பது தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை ஐந்து தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர். சதுர வடிவிலான இந்தத் தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காளநாதர், குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றனர்.
இவரையடுத்து ராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது. வலப்பக்கம் நடராஜர் நடனம் ஆடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ் மட்டத்தில் பூத கணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்கு பகுதியின் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. தேரின் பின்னால் கீழ் பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகஸ்தியர், முனிவர்கள், யானை, இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் என பல வகையான சிற்பங்களைக் காணலாம். மொத்தத்தில் இந்தத் தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.
ஆனி திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிறகு இறைவனும் இறைவியும் வெள்ளிச்சப்பரம், பூத வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், இந்திர விமானம், தவழ்ந்த கோலத்தில் இறைவி பல்லக்கு வாகனம், இறைவன் கங்காளநாதராக தங்க சப்பரத்தில் பிட்சாடன மூர்த்தியாக தங்கத் திருவோடு ஏந்தி அருள்பாலிப்பது எட்டாம் திருநாள். ஒன்பதாம் நாள்தான் இந்தத் தேரோட்டம். நானூற்றி ஐம்பது டன் எடையும், இருபத்தெட்டு அடி அகலமும், இருபத்தெட்டு அடி நீளம், முப்பத்தைந்து அடி உயரம் உள்ள நெல்லையப்பர் தேர் வீதிகளில் பவனி வர பக்தகோடிகள் ஆனந்தமாக தரிசிப்பார்கள்.
பொதுவாக, சிவபெருமானின் தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும் முப்பெரும் தெய்வங்களும் எழுந்தருள்வதாக ஐதீகம். ஆகவே, நெல்லையம்பதி வந்து இந்தத் தேரோட்டம் காண்பதோடு தேவர்களின் பேரருளையும் நெல்லையப்பர், காந்திமதியம்மையின் பேரருளையும் பெற்று வளமையான வாழ்வு பெறலாம்.