

சக்கரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்கரம். ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட இது காமாட்சி அம்மன் கோவில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற இடங்களில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. மனிதர்களின் துயர் நீங்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளை அளிக்கும் உபாயமே சக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே சக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகா சக்தியை எந்திரம், தந்திரம், மந்திரத்தால் வழிபடுவர்.
இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். இந்த மூன்றின் பலங்கள்
முக்காலங்கள், மும்மூர்த்திகள், அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன் பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு எனும் மந்திரம் தந்திரம் தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்கரத்தின் மூலம் வழிபடுகின்றனர். அனைத்து சக்கரங்களுக்கும் தலையானது ஸ்ரீ சக்கரம். இந்த சக்கரத்தை பூஜிக்கும் முறை ஆவாரணம் என்று அழைக்கப்படும். ஒன்பது ஆபரணங்கள் உள்ளன.
முதல் ஆவரணம்
இந்த ஆவணத்தின் கிரகமாக வியாழன் விளங்குகிறார். முதல் ஆவரணத்தின் ரேகை பூபுரம் எனப்படும். இது திரிபுரசுந்தரி யின் நகரத்தின் துவக்கம். இது நான்கு வாயில்களுடன் கூடியது. இது தடைகளை நீக்கி செல்வங்களை நிலைக்க வைக்கும்.
இரண்டாவது ஆவரணம்
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப்பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் அகலும். அகம் தூய்மையாகும். வெண்தாமரை நிறமுடைய இதில் 16 ஆகர்ஷண சக்திகள் உண்டு.
மூன்றாவது ஆவரணம்
பூஜிப்பவரின் மனதை ஒருமைபடுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள். இதன் தேவி திரிபுரசுந்தரி. செம்பருத்தி பூ போன்ற நிறம். எட்டு தாமரை இதழ்களால் ஆனது. எட்டு தேவதைகள் கொண்ட சக்கரம். பக்தனின் அச்சத்தை போக்கி பாதுகாப்பு அளிக்கும் தேவதைகள். இந்த எண்மரும் மிக உக்ரமான தேவதைகள்.
நான்காவது ஆவரணம்
இந்த ஆவணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம். பரமாத்மா 14லோகங்களில் நிறைந்திருப்பதை விளக்கும் வகையில் 14முக்கோணங்களைக் கொண்ட சக்கரம். இது மாதுளம் பூ நிறமுடையது. இதன் தலைவி திரிபுரவாசினி.
ஐந்தாவது ஆவரணம்
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம் மனஆரோக்கியம் தரும் . திரிபுராசீ எனும் அம்பிகையை தலைவியாக கொண்டது. இந்த சக்கரம் பத்து முக்கோணங்களைக் கொண்டது. குருவை இறையுருவாக வழிபடுவது இச்சக்கரத்தின் சிறப்பு.
ஆறாவது ஆவரணம்
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம். பொறாமை இருளை அகற்றி அருளின் ஒளியை ஏற்ற உதவும். வழிபடுவோரின் ஜீவனை பாதுகாக்கும் சக்கரம். இதில் பத்து கோணங்கள். இதன் நிறம் செம்பருத்திப்பூவின் நிறம். இதன் தலைவி திரிபுரமாலினி.
ஏழாவது ஆவரணம்
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இதை பூஜிப்பதால் ஆத்ம ஞானம் பெருகும். யோகம் நீங்கும். இந்த சக்கரத்தின் தேவி திரிபுராசித்தா. சிகப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கப்படுகிறாள். எட்டு முக்கோணங்களைக் கொண்ட இது அறியாமையை போக்குவதுடன் உடல்ரீதியான வியாதிகளையும் நீக்கும்.
எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு, வில் மற்றும் பாணம் ஆகிய ஆகிய நான்கு ஆயுதங்கள் இந்த ஆவணத்தில் வழிபடப்படுகின்றன. இது மூன்று கோணங்களை உடையது. இது இசாசா சக்தி ,ஞானசக்தி, ஞானசக்தி வடிவமானது. இதன் தலைவி திரிபுராம்பா.
ஒன்பதாவது ஆவரணம்
பேரின்பத்தை பெறச்செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவணத்தைப் பூஜிப்பதால் சகல நன்மைகளும் ஏற்படும். சிவனையும் சக்தியையும் இணைத்து சிவசக்தி ரூபமாக வழிபடுதலே சீவித்யையின் சிறப்பு.
இந்த எட்டு ஆவரணங்களையும் பூஜித்து படிப்படியாக பண்பட்டு ஒன்பதாவது ஆவரண பூஜையின்போது உபாசகன்தான் பரப்பிரம்மத்தின் அங்கம். இந்த சக்கரத்தின் அன்னையே ராஜராஜேஸ்வரி அன்னை. இந்த சிவசக்தி ஐக்கிய நிலையே இந்து மதத்தில் வழிபாடு சேர்க்கப்படும் அனைத்து தெய்வங்களுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஈரேழு லோகம் உயிர்கள் அனைத்துக்கும் மூலமாகும்.