

சென்னை மயிலாப்பூரில், கோமதி நாராயணன் தெருவில் அமைந்துள்ள பழமையான சிவத்தலம் வாலீஸ்வரர் கோயில் (Valeeswarar temple Mylapore). சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த இத்தலம், மயிலாப்பூரின் சப்த சிவத்தலங்களில் ஒன்றாகும். இராமாயண காலத்தில் வாலி இங்கிருக்கும் சிவனை வழிபட்டுப் பெரும் வலிமை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இத்தலம் ராகு-கேது தோஷப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. சனி தோஷம் நீங்கவும், மனவலிமை பெறவும், கண் நோய் நிவர்த்திக்காகவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வாலி வலிமை பெற்றதன் பின்னணி
இராமாயணத்தில் வாலியை இராமன் மறைந்து நின்று தாக்கினார் என்பதை நாம் அறிவோம். இராமரே மறைந்து நின்று தாக்கும் அளவுக்கு வாலி அபார வலிமை பெற்றதற்குக் காரணம், அவன் தன் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இருந்ததும், சிவபெருமான் மீது கொண்டிருந்த அதீத பக்தியுமே ஆகும். அதன் புராண வரலாறு இதோ:
மேரு மலையில் உள்ள தடாகத்தில் பேரழகி ரிக்ஷாஜசு நீராடச் சென்றபோது, தேவேந்திரன் அவளை மணக்க விருப்பம் தெரிவித்தார். அதற்கு அவள் ஒரு நிபந்தனை விதித்தாள்;
"நமக்குத் பிறக்கும் குழந்தை சிவபூஜை செய்வதில் நிகரற்றவனாக இருக்க வேண்டும்; அரிய பெரிய சிவலிங்க மூர்த்தங்களை வழிபடும் வழக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்; எதிரிகளை வெல்லும் ஆற்றல் கொண்டவனாகவும், வைத்திய சாஸ்திரங்கள் தெரிந்தவனாகவும் இருப்பதோடு, சாதாரண மனிதர்களைப் போல நோயாலோ, மூப்பாலோ அல்லது வேறு எந்த அற்பக் காரணங்களாலோ அவன் இறுதி மூச்சை விடக்கூடாது. யாரேனும் ஒரு அவதார புருஷனாலேயே அவன் வாழ்வு முடிவடைய வேண்டும். அப்படிப்பட்ட பராக்கிரமசாலியான குழந்தையைத் தாங்கள் எனக்கு அளிக்க முடியுமானால், நான் உங்களை மணம் முடிக்கத் தடை ஏதுமில்லை" என்று கூறினாள்.
தேவேந்திரனும் அதற்குச் சம்மதித்தார். அந்த இருவருக்கும் பிறந்த வீராதி வீரன் தான் வாலி. இளம் வயதிலிருந்தே அன்னையின் விருப்பப்படியே சிவபூஜை செய்து, சகல கலைகளையும் கசடறக் கற்று வளர்ந்த வாலி, தன் தாயையே குருவாகக் கொண்டான்.
தாயின் அறிவுரையும் ஈசனின் அருளும்
வாலியின் அறிவிற்கும் அழகிற்கும் ஏற்ற மருமகள் கிடைத்தால் அவனது வாழ்வு மென்மேலும் சிறக்கும் என்று எண்ணிய தாய் ரிக்ஷாஜசு, வாலியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்;
"மகனே! நீ மேலும் சிறப்போடு வாழ வேண்டும். அதற்குத் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும், கௌதம முனிவரையும் தரிசித்து மேலும் சில சிவபூஜை முறைகளைக் கற்று உணர்.
பின், மயூரபுரி (மயிலாப்பூர்) கடற்கரையோரத்தில் அமைந்த 'கைவரளி' என்னும் நீரோடையில் தினமும் சந்தியாவந்தனம் போன்ற நித்திய கர்மாக்களை முடித்து, அங்கு அருளும் ஏழு ஈஸ்வரர்களுள் ஒருவரான பவதாரண்யேஸ்வரரை வழிபட்டு வா. அவர் அருளால் உனக்கு நல்ல மனைவி கிடைப்பதோடு, சிறந்த அறிவும் ஆயுளும் அதிகரிக்கும். எவர் உன் எதிரில் நின்று போரிடுகின்றாரோ, அவரின் பாதி பலத்தை நீ பெற்றிடும் வரத்தையும் ஈசன் உனக்கு அருள்வார்" எனக் கூறி ஆசியளித்து அனுப்பினாள்.
தாயின் வாக்கைச் சிரமேற்கொண்ட வாலி, அதன்படியே திருவண்ணாமலை சென்று பின் மயூரபுரி வந்தான். அங்கு முறையாக ஈசனை வில்வ தளங்களாலும், நறுமணமிக்க மலர்களாலும் ஆத்மார்த்தமாகப் பூஜை செய்து வந்தான்.
பாலின் அபிஷேகம்: உடல் உறுதி பெற்றது.
பஞ்சாமிர்த அபிஷேகம்: பலவிதமான சித்திகள் கிடைத்தன.
தேன் அபிஷேகம்: பேரறிவு உண்டானது.
இளநீர் அபிஷேகம்: இன்னல்களைத் தகர்க்கும் ஆற்றல் கிடைத்தது.
கரும்புச் சாறு அபிஷேகம்: சந்தான சித்தி (புத்திர பாக்கியம்) கிடைத்தது.
மாதுளம்பழ முத்துக்கள் அபிஷேகம்: ராஜ்ய சித்தி (அரசாட்சி) கிடைத்தது.
அன்னாபிஷேகம்: 'தாரை' என்னும் குணவதியான மனைவியை அடைந்தான்.
வாலியின் பூஜையில் மகிழ்ந்து நேரில் தோன்றிய ஈசன், அவன் கேட்ட வரங்களை வாரி வழங்கினார். "வானர அரசனான நீ பூஜித்ததால், இன்று முதல் நான் வாலீஸ்வரர் என உன் பெயரிலேயே அருள்புரிவேன்" என அருளாசி கூறி மறைந்தார். அன்று முதல் பவதாரண்யேஸ்வரர், வாலீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
பக்தர்களின் நம்பிக்கை
பின்னர் தன் தந்தை நலமுடனும், தாய் தீர்க்க சுமங்கலியாகவும் இருக்க வேண்டும் என இத்தலத்து அம்பிகை பெரிய நாயகிக்கு வளையல்களைச் சாத்தி, அவற்றைச் சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்கினான் வாலி. ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் செய்து மகிழ்ந்தவன், "பக்தர்கள் வேண்டிடும் வரங்களை வேண்டியபடியே ஈசன் அருள வேண்டும்" எனத் தனது கோரிக்கையை வைத்தார்.
தனக்காக மட்டுமின்றிப் பிறருக்காகவும் வாலி வேண்டிய இத்தலத்தில், சனிக்கிழமை தோறும் காம்பு இல்லாத வெற்றிலையை மாலையாகக் கோர்த்து வாலீஸ்வரருக்கும் வாலிக்கும் சாத்தினால், சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து நந்தியம் பெருமான் 'அதிகார நந்தி'யாக அருள்புரிகிறார்.
வாலியின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த ஈஸ்வரர் நமக்கும் அருளக் காத்திருக்கிறார். அவரை முறைப்படி பூஜித்து நம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வோமாக!