
அம்பிகைக்கு சக்தி பீடங்கள் இருப்பது போன்று, விநாயகருக்கும் ஒன்பது பீடங்கள் இருப்பதாக, ‘சனத்குமார் சம்ஹிதை’யில் உள்ள மிலாதமங்க காண்டப் பகுதியான பலாச வன மகாதிம்யத்தில் கூறப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், சீர்காழி பகுதியில் இலைய முதுகூடம், ஆரண்யேஸ்வரம், மதங்காசிரமம், திருநாங்கூர், பெருந்தோட்டம், யோகீஸ்வரம், மேலையூர், காவிரிப்பூம்பட்டினம், திருவெண்காட்டுப் பகுதிகளைச் சுற்றி இந்த பீடங்கள் உள்ளன. விநாயகப் பெருமானுக்குரிய ஒன்பது பீடங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கணேச பீடம்: இது நவசக்தி மயம், சித்திபிலம் என்கிற கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது. இங்குள்ள கணேச சக்திக்கு ‘மயூரா’ என்று பெயர்.
ஸ்வானந்த கணேச பீடம்: சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, பிரம்மா இவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு சித்தி, புத்தி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் விநாயகர்.
புஷ்டி பீடம்: நாகநாதர் சன்னிதியில் இந்த புஷ்டி பீடம் உள்ளது. இந்த பீடம் 8,800 ரிஷிகளால் பூஜிக்கப்பட்டு ஸ்தாபனம் செய்யப்பட்டதாகும். இதில் உள்ள விநாயகர், புஷ்டி கணேசர் எனப்படுகிறார்.
ஷட்சக்தி பீடம்: இதுவும் நாகநாத கேந்திரத்தில் உள்ளது. இதில் கஜானனர் முதலான கணேச மூர்த்திகள் உள்ளனர்.
தர்ம பீடம்: காவிரிப்பூம்பட்டினம் செல்லும் பாதையில், தர்மபுரம் என்று இன்று வரை இத்தலம் விளங்குகிறது. பாண்டவர்களால் பூஜிக்கப்பட்ட தர்மகுள விநாயகர் இங்கு வீற்றுள்ளார். யட்ச ரூபிணியான தர்ம தேவதையால் பூஜிக்கப்பட்ட கணபதி இவர்.
நாராயண பீடம்: காவிரி சங்கமமாகின்ற இடத்தில் சமுத்திர ராஜனால் பூஜிக்கப்பட்டு, தீர்த்த விநாயகர் என்ற பெயரில் இவர் விளங்குகிறார்.
ஓங்கார பீடம்: தெப்பத்தூர் என்னும் வேதபுரத்தில், பரமேஸ்வரனால் பிரதிஷ்டையான பரமேச விநாயகர் இத்தலத்தில் அருள் தருகிறார்.
காமாயினீ பீடம்: செங்கழுநீர் படித்துறை உள்ள கௌதமாசிரத்தில் (மேலையூர்) இந்திரனால் பூஜிக்கப்பட்ட கல்கார விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.
புருஷார்த்த பீடம்: திருநாங்கூர் அருகே மதங்காசிரமத்தில் மதங்க முனிவரால் ஏற்படுத்தப்பட்ட புருஷார்த்த விநாயகர், சிவசக்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியாய் உள்ளார். இதன் உள்ளேயே உப விநாயகர் ரூபங்களாக தர்ம, அர்த்த, காம, சிருஷ்டி, மோட்ச பீடங்கள் உள்ளன.