வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளைக் கொண்டது திருத்தணி மலைகோயில். ஆங்கிலேயர் ஆட்சியின்போது புத்தாண்டில் ஆங்கிலேயர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்திலிருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப முருக பக்தரான வள்ளிமலை சுவாமிகளுக்கு 1917ல் புத்தாண்டு தினத்தின்போது துரைகளுக்கெல்லாம் துரையான முருகப்பெருமானை வழிபடலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக ஆங்கிலப் புத்தாண்டின்போது முருகப்பெருமான் அருளும் திருத்தணி மலைக்கோயிலுக்கு படி பூஜை செய்து வழிபடும் வழக்கத்தை கொண்டு வந்தார்.
புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்துப் படிகளுக்கும் பூஜை செய்த பின்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானை வேண்டி கோயிலில் அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து வழிபடுவார்கள். இந்தத் திருவிழாவால்தான் முருகப்பெருமானுக்கு ‘தணிகை துரை’ என்ற பெயரும் உருவானது.
இக்கோயிலில் யானை வாகனத்துடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். இந்த யானை வெளியே பார்த்தபடி இருப்பது மாறுபட்டது. முருகப்பெருமான் தெய்வானையை மணந்தபோது ஐராவதம் என்னும் தேவலோக யானையை பரிசாகக் கொடுத்தார். இதனால் தேவலோகத்தில் வளம் குறைந்தது. இதனால் முருகன் யானையின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்பும்படி கூற, யானையும் தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறது.
மற்ற கோயில்களில் இருப்பது போல் இங்குள்ள முருகனுக்கு கையில் வேல் கிடையாது. அலங்காரம் செய்யும்போது மட்டும் வேல் சாத்தப்படுகிறது. ‘சக்தி ஹஸ்தம்’ எனப்படும் வஜ்ரவேலுடனேயே முருகன் காட்சி தருகிறார். முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் முருகன் கையில் இங்கு வேல் கிடையாது.
முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளி தெய்வானையுடன் சாந்த சொரூபமாக வந்து அமர்ந்த இடம்தான் திருத்தணி. சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணிகை என இத்தலம் அழைக்கப்படுகிறது. இங்குள்ள உத்ஸவ சன்னிதி ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபமாக உள்ளது.
இந்திரன் காணிக்கையாகக் கொடுத்த சந்தனக்கல்லில் அரைக்கப்படும் சந்தனமே முருகனுக்கு இங்கு சாத்தப்படும். இதில் சிறிதளவு நீரில் கரைத்து குடித்தால் உடல் நோய்கள் தீரும்.
அனைத்து கோயில்களிலும் விநாயகரை வழிபட்ட பிறகுதான் மற்ற தெய்வங்களை வழிபடுவது வழக்கம். ஆனால், இந்தத் தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்கும் வழக்கத்தில் உள்ளது.
கருவறைக்குப் பின்புறம் உள்ள சுவரில் குழந்தை வடிவில் ஆதிபாலசுப்ரமணியர் காட்சி தருகிறார். கைகளில் அட்சர மாலையுடன் இருக்கும் இந்த முருகன்தான் வள்ளி திருமணத்திற்கு முன்பு இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார் என சொல்லப்படுகிறது. இவருக்கு மார்கழி திருவாதிரையில் வென்னீரால் அபிஷேகம் நடைபெறுகிறது. குளிர்காலம் என்பதால் குழந்தை முருகன் மீதான அன்பினால் இந்த வெந்நீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருத்தணி முருகனை வணங்கினால் எப்படிப்பட்ட குழப்பங்களும் கோபமும் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆங்கிலப் புத்தாண்டில் படி பூஜை செய்து வழிபட்டால் வாழ்வில் திருப்பமும் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.